Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நெல்லை மாநகராட்சி புதிய கட்டட பணி முடங்கியது ஏன்? அமைச்சர் முனுசாமி இன்று நேரில் ஆய்வு

Print PDF
தினகரன்            04.08.2012

நெல்லை மாநகராட்சி புதிய கட்டட பணி முடங்கியது ஏன்? அமைச்சர் முனுசாமி இன்று நேரில் ஆய்வு

நெல்லை: நெல்லை மாநகராட்சியின் புதிய கட்டிட பணிகள் கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக முடங்கி கிடப்பது குறித்து உள்ளாட்சி துறை அமைச்சர் இன்று விசாரணை மேற்கொள்கிறார்.
 
நெல்லை மாநகராட்சிக்கு ஒருங்கிணைந்த புதிய மைய அலுவலக கட்டடம் ரூ.5 கோடி மதிப்பீட்டில் கட்ட, கடந்த 2010 மே மாதம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு நகராட்சி நிர்வாக இயக்குநர் அனுமதியின் பேரில் மெசர்ஸ் காஸ்யப் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் லிமிடெட் என்னும் பெங்களூர் நிறுவனத்திற்கு பணி ஆணை வழங்கப்பட்டது. இப்பணிக்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த 2011ம் ஆண்டு பிப்.5ல் கலெக்டர் ஜெயராமன் தலைமையில் நடந்தது.

இதன்படி மாநகராட்சி வளாகத்தில் உள்ள பழைய பழுதடைந்த பிரதான கட்டிடத்தை இடித்து விட்டு அங்கு தரை தளம், முதல் தளம், 2வது தளம் ஆகியவற்றுடன் மொத்தம் 42 ஆயிரத்து 646 சதுர அடி பரப்பளவில் புதிய ஒருங்கிணைந்த கட்டிடம் கட்ட தீர்மானிக்கப்பட்டது. இதையடுத்து நூற்றாண்டு பெருமை மிக்க வஉசி கட்டிடம் இடிக்கப்பட்டதோடு, அதில் புதிய கட்டிடம் அமைப்பதற்காக அஸ்திவாரம் தோண்டும் பணிகளும் நடந்தன.
 
ஆனால் அதற்குள்ளாக தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்ததால் பணிகள் கிடப்பில் போடப்பட்டன. இப்பணிகளை கான்ட்ராக்ட் எடுத்த நிறுவனமும் சப்-கான்ட்ராக்ட் என்ற முறையில் பணிகளை நடத்த முன்வந்தது. இருப்பினும் மாநகராட்சியில் உள்ள அதிகாரிகளுக்கும், மக்கள் பிரதிநிதிகளுக்கும் சேர வேண்டிய தொகை சரியாக போய் சேராததால் பணிகள் நிறுத்தப்பட்டன. இப்பணிகள் 15 மாதத்திற்குள் முடிவடையும் என அடிக்கல் நாட்டு விழாவில் அறிவிக்கப்பட்டது. தற்போது ஒன்றரை ஆண்டுகளாகியும் கட்டுமான பணிகளில் துளியளவு கூட முன்னேற்றம் இல்லை. இதனால் மாநகராட்சி ஊழியர்கள், பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர். வானம்  தோண்டிய குழிகளில் பெயரளவுக்கு கூட பணிகள் நடக்காததால், இதுகுறித்து அரசுக்கும் பல்வேறு புகார்கள் சென்றுள்ளன.

இந்நிலையில் நெல்லைக்கு வரும் உள்ளாட்சி துறை அமைச்சர் முனுசாமி மாநகராட்சி மற்றும் பேரூராட்சிகளின் பணிகள் குறித்து இன்று காலையில் ஆய்வு மேற்கொள்கிறார். அதில் நெல்லை மாநகராட்சியில் புதிய கட்டிட பணிகள் 18 மாதங்களாக முடங்கி கிடப்பதற்கான காரணங்கள் குறித்து கேட்டறிந்து நடவடிக்கை எடுக்கவுள்ளார். தொடர்ந்து பகல் 2 மணிக்கு கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் ஆய்வு கூட்டத்திலும் இதுகுறித்து விசாரணை நடக்கலாம் என கூறப்படுகிறது.

புதிய கட்டிடத்திற்கான தோற்ற பலகைகள் மாநகராட்சியில் வைக்கப்பட்டிருக்கும் நிலையில், அந்த பிரமாண்ட கட்டிடத்தை காணும் ஆவல் பொதுமக்களுக்கும் உள்ளது. விரைவில் மழைக்காலம் வரவுள்ள நிலையில் உள்ளாட்சி துறை அமைச்சர் உரிய உத்தரவுகளை பிறப்பித்து கட்டிட பணிகளை துரிதப்படுத்த வேண்டும்.

பாதிப்புகள் என்ன?

நெல்லை மாநகராட்சியில் புதிய கட்டிட பணிகள் முடங்கி கிடப்பதால் சுகாதார பிரிவு, பொறியியல் பிரிவு, கணக்கு பிரிவு உள்ளிட்ட பிரிவுகளும், சில முக்கிய அதிகாரிகளின் அறைகளும் தற்போது இட நெருக்கடியில் இயங்கி வருகின்றன. மாநகராட்சி வரிமேல் முறையீட்டு ஆணையம் இயங்கவும் போதிய இடவசதிகள் இல்லை. முன்பு விஸ்தாரமான இடத்தில் இயங்கி வந்த நெல்லை மண்டல அலுவலகம் தற்போது புறாக்கூண்டிற்குள் சிக்கியது போல் விழிபிதுங்கி நிற்கிறது. மாநகராட்சி ஊழியர்கள் பலர் உணவருந்த இட வசதியின்றி அருகிலுள்ள பூங்கா பெஞ்சுகளில் மதிய வேளைகளில் சாப்பிடுகின்றனர். புதிய கட்டிடம் மட்டுமே இப்பிரச்னைகளுக்கு தீர்வாக முடியும்.