Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நீர் வழித்தடம், மழைநீர் கால்வாய் பணிகள் முடிய இன்னும் 3 ஆண்டுகள்?

Print PDF

தினமலர்     23.08.2012

நீர் வழித்தடம், மழைநீர் கால்வாய் பணிகள் முடிய இன்னும் 3 ஆண்டுகள்?

சென்னை : பணிகள் துவக்கி மூன்று ஆண்டுகள் ஆகியும், 1,447 கோடி ரூபாய் மதிப்பிலான, நீர்வழித் தடங்கள், மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி, 25 சதவீதமே முடிந்துள்ளது. குறுகிய சாலைகளில் மழைநீர் கால்வாய் தேவையில்லை என முடிவெடுத்துள்ள மாநகராட்சி, திட்டத்தில் பல்வேறு திருத்தம் செய்து, மத்திய அரசின் அனுமதி கோருவதால், எப்போது முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

சென்னை மாநகரம், எப்போதுமில்லாத வகையில், 2005ல், பெரும் வெள்ளத்தில் சிக்கித் திணறியது. போதிய மழைநீர் கால்வாய் கட்டமைப்பு இல்லாததாலும், நீர்வழிக் கால்வாய்கள் புனரமைக்கப் படாததும் தான், இதற்கு காரணம் என, கண்டறியப்பட்டது.

இதையடுத்து, மாநகராட்சியும், பொதுப்பணித் துறையும் இணைந்து திட்டமிட்டு, ஜவகர்லால் நேரு தேசிய நகர்ப்புற புரனரமைப்புத் திட்டத்தில், 1,447 கோடி ரூபாயில், பணிகளை, 2010ம் ஆண்டில் துவங்கின.

திருத்தம் ஏன்?

சென்னை மாநகராட்சிக்கு, 814.88 கோடி ரூபாயும், பொதுப்பணித் துறைக்கு, 633.03 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டன. பணிகள் துவங்கி, மூன்று ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், இதுவரை, 25 சதவீத பணிகளே முடிந்துள்ளன.

இந்நிலையில், திட்டத்தில், சில மாற்றங்களையும் மதிப்பீட்டில் சில திருத்தங்களையும் மாநகராட்சியும், பொதுப்பணித்துறையும் கொண்டு வந்துள்ளன.

  •  குறுகிய சாலைகளில், சாலைகளை உயர்த்தி செப்பனிடுவதால் மழைநீர் கால்வாய் அவசியம் இல்லை என, மாநகராட்சி அதிரடியாக, முடிவெடுத்துள்ளது.
  • பழைய கால்வாய்களை இடித்துவிட்டு, ஆர்.சி.சி.,(கான்கிரீட்) கொண்டு சீரமைக்க வேண்டிய பணிகள், தடையின்றி கழிவுநீர் ஓடுவதால், முழுமையாக நிறைவேற்ற முடியவில்லை.
  •  நெடுஞ்சாலை, ரயில்வே துறைகளின் அறிக்கையில் தரப்பட்ட இடங்களில், மழைநீர் கால்வாய் பணிகளை செய்ததில், அவசியமான இடங்களில் மழைநீர் கால்வாய் அமைத்தல், மழைநீர் வடிகால்வாய் உறுதித்தன்மை கண்டு மாற்றியமைத்தல் போன்ற காரணங்களால், திட்ட மதிப்பீட்டில் திருத்தம் செய்ய வேண்டிய அவசியம் உள்ளதாக, மாநகராட்சி தெரிவித்துள்ளது.
  • கூடுதலாக ரூ.27 கோடிதிருத்தத்தின் படி, 1,447.91 கோடி ரூபாயாக இருந்த திட்ட மதிப்பீடு, 1,475.43 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. 27.52 கோடி ரூபாய் திட்ட மதிப்பீடு அதிகமாகியுள்ளது.ஏற்கனவே ஒதுக்கியிருந்த, 814.88 கோடி ரூபாயில், 747.64 கோடி ரூபாயில் மட்டுமே மாநகராட்சி, மழைநீர் கால்வாய் பணிகளை மேற்கொள்ளும். மீதமுள்ள, 67.24 கோடி ரூபாய், பொதுப்பணித்துறைக்கு தரப்படுகிறது.
  • பொதுப்பணித்துறைக்கு, 633.03 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. தற்போதைய திருத்தத்தின்படி, 727.79 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. திருத்திய திட்ட மதிப்பீடு, "டுபிட்கோ' மூலம், மத்தியஅரசின் அனுமதிக்கு, அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

எப்போது முடியும்?

மத்திய அரசு, இதற்கு முறையான ஒப்புதல் தர வேண்டும். அதன்பின், பணிகள் முறைப்படுத்தப்படும். திட்டமிட்டபடி, நீர்வழித் தடங்கள் சீரமைப்பு, மழைநீர் கால்வாய் அமைக்கும் பணிகள், 2013ல் முடிய வேண்டும்.

தற்போது, 25 சதவீதம் மட்டுமே முடிந்துள்ள நிலையில், திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதால், குறித்த காலத்திற்குள் முடியாது, இன்னும் இரண்டு, மூன்று ஆண்டுகள் ஆகும் என்றே தெரிகிறது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ""திருத்தம் செய்துள்ளதால் பணிகள் நடக்காது என்பதில்லை. தொடர்ந்து பணிகள் நடக்கும். காலதாமதமின்றி பணிகளை முடிக்கும் வகையில், விரைவுபடுத்துவோம்,'' என சமாளித்தார்.

பொதுப்பணித்துறை அதிகாரியிடம் கேட்டபோது,""எங்கள் தரப்பில் பணிகள் வேகமாகவே நடந்து வருகின்றன. திருத்திய மதிப்பீட்டில், கூடுதல் நிதி கிடைப்பதால், அதற்கேற்ப பணிகள் திட்டமிடப்படும்,''என்றார்.

தாமதத்துக்கு காரணம்?

  •  சட்டசபை, மாநகராட்சி தேர்தல்கள்
  • வடகிழக்கு பருவ மழை
  • மெட்ரோ ரயில் பணி நடப்பதால், இரவில் மட்டுமே பணிகளை செய்ய வேண்டுமென போலீஸ் அனுமதி
  • கட்டுமானப்பொருட்களின் விலை உயர்வு
  •  சேவைத்துறைகளின் இடையூறுகள்
  •  நீர்வழிக்கால் வாய்களில் வடிவமைப்பு மாற்றம்
  •  3,500க்கும் மேலான ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் தாமதம்.

இதுவே, பணிகளில் ஏற்பட்ட தொய்வுக்கு காரணம் என மாநகராட்சியும், பொதுப்பணித்துறையும் தெரிவித்துள்ளன.

Last Updated on Thursday, 23 August 2012 07:26