Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குப்பை சேகரிப்புக்கு ஆயிரம் தொட்டிகள்

Print PDF

தினமணி           23.08.2012

குப்பை சேகரிப்புக்கு ஆயிரம் தொட்டிகள்

பண்ருட்டி, ஆக. 22: பண்ருட்டி கடைவீதி மற்றும் காய்கறி மார்க்கெட் பகுதியில் கழிவுகளை போட்டு வைப்பதற்காக ரூ.5 லட்சம் மதிப்புள்ள ஆயிரம் பிளாஸ்டிக் தொட்டிகளை வியாபாரிகளுக்கு நகர்மன்றத் தலைவர் பி.பன்னீர்செல்வம் செவ்வாய்க்கிழமை வழங்கினார்.

கடலூர் மாவட்டத்தில் பண்ருட்டி முக்கிய வியாபார நகரம்.பண்ருட்டி கடை வீதி மற்றும் மார்க்கெட் பகுதியில் இருந்து நாள் ஒன்றுக்கு 8 டன் அளவுக்கு கழிவுகள் நகர நிர்வாகத்தால் அகற்றப்படுகிறது.

கடைவீதி மற்றும் மார்க்கெட் பகுதி இரவு மற்றும் அதிகாலை நேரத்தில் குப்பைகள் அள்ளப்படுவது வழக்கம்.

காலையில் கடைத் திறக்கும் வியாபாரிகள் கழிவுகளை சாலையில் கொட்டி வந்தனர். இதனால் குப்பைகள் காற்றில் பறந்து சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வந்தது.

மேலும் மார்க்கெட் பகுதியில் இறைச்சி மற்றும் காய்கறிக் கழிவுகள் கொட்டப்படுவதால் கால்நடைகளும், நாய்களும் சுற்றித் திரிந்து பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதோடு சுகாதாரமும் சீர்கேடாகிறது.

இதை அறிந்த பண்ருட்டி நகர்மன்றத் தலைவர் பி.பன்னீர்செல்வம் ஒவ்வொரு கடைகளுக்கும் குப்பைத் தொட்டிகள் வழங்க தீர்மானித்தார்.

இதைத் தொடர்ந்து ரூ.500 மதிப்பில் 1000 பிளாஸ்டிக் தொட்டிகளை வாங்கி வியாபாரிகளிடம் குப்பைக் கொட்டி வைக்க வழங்கினார்.

இதற்கான விழா நகராட்சி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடந்தது. நகர்மன்றத் தலைவர் பி.பன்னீர்செல்வம் தலைமை தாங்கி குப்பைத் தொட்டிகளை வழங்கினார். காய்கறி வியாபாரிகள் சங்கத் தலைவர் ராஜா பெற்றுக் கொண்டார்.

ஆணையர் உமா மகேஸ்வரி முன்னிலை வகித்தார். சுகாதார அலுவலர் பி.குமார், நகர்மன்ற உறுப்பினர்கள் ஆர்.ராஜதுரை, எம்.முருகன், எஸ்.அப்துல்பாரி, வேல்முருகன், ரமேஷ்குமார், முன்னாள் ரோட்டரித் தலைவர் மதன்சந்த், வர்த்தக சங்கம் டி.சண்முகம், வி.வீரப்பன், காய்கறி வியாபாரிகள் சங்கச் செயலர் சேகர், பொருளர் உதயகுமார், அபீஸ், கருப்பையா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.