Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

திருச்செங்கோடு நகராட்சிக்கு புதிய அலுவலகக் கட்டடம்

Print PDF
தின மணி              26.02.2013

திருச்செங்கோடு நகராட்சிக்கு புதிய அலுவலகக் கட்டடம்


திருச்செங்கோடு நகராட்சிக்கு ரூ. 250 லட்சத்தில் புதிய அலுவலகக் கட்டடம் கட்டப்படுகிறது. திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கமணி பங்கேற்று பூமி பூஜையைத் தொடக்கிவைத்தார்.

திருச்செங்கோடு நகராட்சி அலுவலகம் வேலூர் சாலையில் செயல்பட்டு வருகிறது.  இந்த வளாகத்தில் இருந்த பழைய சிதிலமடைந்த கட்டடம் இடிக்கப்பட்டு ரூ. 250 லட்சத்தில்  புதிய கட்டடம்  கட்டப்படுகிறது. திங்கள்கிழமை  இதற்கான பூமி பூஜையை  தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கமணி தொடக்கிவைத்தார். நிகழ்ச்சிக்கு நகர்மன்றத் தலைவர் பொன். சரஸ்வதி, ஆணையர் (பொ) ராஜேந்திரன் ஆகியோர்  முன்னிலை வகித்தனர். நாமக்கல் எம்எல்ஏ பாஸ்கர்,  முன்னாள் எம்எல்ஏ பி.ஆர். சுந்தரம், நாமக்கல் மாவட்ட ஓட்டல் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் ஜோதி  முத்துசாமி, லாரி உரிமையாளர்கள்  சங்கத் தலைவர் அனிதாவேலு, பஸ்  உரிமையாளர்கள் சங்கத் தலைவர் சேரன் மணி, கூட்டுறவாளர்கள் என்பிஎஸ் பொன்னுசாமி, மனோகரன் மற்றும்  நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து நகர்மன்றத் தலைவர் பொன். சரஸ்வதி கூறியது:

ரூ. 250 லட்சத்தில் அமையவுள்ள புதிய அலுவலகக் கட்டடம் 2 தளங்களைக் கொண்டது.   தரை தளத்தில் நகர்மன்றத் தலைவருக்கான  அறை, ஆணையருக்கான அறை, கணினி அறை, காசாளர் அறை,  வரவேற்பறை, தகவல் மையம்  போன்றவை அமைக்கப்படும். முதல் தளத்தில்  நகர்மன்றக் கூட்ட அரங்கு,  நகரமைப்பு பிரிவு, பொறியியல் பிரிவு,  வருவாய் பிரிவு போன்றவை அமையும்.  மொத்தம் 9 ஆயிரம் சதுரஅடி பரப்பில் இந்த கட்டடம் அமையவுள்ளது. சுமார் 1 வருட காலத்திற்குள் இதனை கட்டி முடிக்க  நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காகும்  செலவுத் தொகையில் 175 லட்சத்தை அரசு மானியமாக அளிக்கிறது. மீதித் தொகையை நகராட்சி அளிக்கும் என்றார் அவர்.
Last Updated on Tuesday, 26 February 2013 11:58