Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

13 பாலங்கள் நவீனப்படுத்தப்படும்; 4 இடங்களில் மேம்பாலம் அமைக்க ஆய்வு

Print PDF
தினமணி         12.03.2013

13 பாலங்கள் நவீனப்படுத்தப்படும்; 4 இடங்களில் மேம்பாலம் அமைக்க ஆய்வு


சென்னை மாநகராட்சியால் பராமரிக்கப்படும் 13 மேம்பாலங்கள் நவீனப்படுத்தப்படும் என்று சென்னை மாநகராட்சி பட்ஜெட் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க 13 மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. இந்த மேம்பாலங்களின் உறுதி, தரம் மற்றும் பயன்பாடு மதிப்பை உயர்த்தும் வகையில் அவை அனைத்தும் துருப்பிடிக்காத கைப்பிடிகள் அமைத்து வண்ணம் தீட்டப்படும்.

சேதமடைந்த தடுப்புச் சுவர்கள் புனரமைக்கப்பட்டு சலவைக் கற்கள் ஒட்டப்படும் என்று மாநகராட்சி பட்ஜெட் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

4 இடங்களில் புதிய மேம்பாலம்: சென்னையில் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். சாலை, திருமலைப்பிள்ளை சாலை மற்றும் வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலை சந்திப்பில் ஒரு மேம்பாலமும், மத்திய கைலாசம் சந்திப்பில் பறக்கும் ரயில் பாதைக்கு இணையாக பக்கிங்காம் கால்வாய்க்கு குறுக்கே கஸ்தூரிபாய் ரயில் நிலையத்தில் இருந்து கோட்டூர்புரம் நோக்கி ஒரு மேம்பாலமும், டி.டி.கே. சாலை - செயின்ட் மேரி சாலை, சேமியர்ஸ் சாலை மற்றும் அடையாறு சந்திப்பில் ஒரு மேம்பாலமும் அமைக்க ஆய்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

மேலும் விருகம்பாக்கம் காளியம்மன் கோயில் தெரு மற்றும் என்.எஸ்.கே. சாலை சந்திப்பில் புதிய மேம்பாலம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்யப்பட உள்ளது.

சுரங்கப் பாதைகள்: என்.எஸ்.கே. சாலை மீனாட்சி பொறியியல் கல்லூரி, வடபழனி பஸ் நிலையம், டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை சந்திப்பு அருகில், புரசைவாக்கம் நெடுஞ்சாலை கங்காதீசுவரர் கோயில் அருகில், கொன்னூர் நெடுஞ்சாலை மற்றும் அயனாவரம் மேடவாக்கம் டாங்க் சாலை சந்திப்பு ஆகிய இடங்களில் பாதசாரிகளுக்கான சுரங்கப் பாதைகள் அமைக்க ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இதேபோல பக்கிங்காம் கால்வாயின் குறுக்கே நீலாங்கரை பாண்டியன் சாலை மற்றும் துரைப்பாக்கம் முருகேசன் நகர் ஆகியவற்றை இணைக்கும் வகையில் உயர்மட்ட பாலம் அமைக்கப்படவுள்ளது.

ரயில்வே பாலங்கள்: கொருக்குப்பேட்டை மற்றும் வியாசர்பாடி ரயில் நிலையங்களுக்கு இடையில் எண்ணூர் நெடுஞ்சாலை மற்றும் மணலி சாலையில் ரயில் மேம்பாலமோ சுரங்கப்பாதையோ அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ரயில்வே துறையுடன் இணைந்து திட்ட அறிக்கை தயாரிக்கப்படவுள்ளது.

இதேபோல, மாம்பலம் ரயில் நிலையத்தில் இருந்து தியாகராய நகர் பஸ் நிலையம் வரை உள்ள சாலை மற்றும் பாரிமுனையிலிருந்து  கோட்டை ரயில் நிலையம் வரை உள்ள சாலை ஆகியவற்றில் ஆகாய நடைபாதைகள் அமைக்கவும் ஆய்வு மேற்கொள்ளப்படும்.

இந்த அறிவிப்புகளை மேயர் சைதை துரைசாமி அறிவித்தார்.