Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மதுரை அருகே 19500?பிளாட்டுகளுடன்?துணைநகரம் தோப்பூரில் பணிகள் துவங்கின

Print PDF
தினகரன்                    06.04.2013
 
மதுரை அருகே 19500?பிளாட்டுகளுடன்?துணைநகரம் தோப்பூரில் பணிகள் துவங்கின

மதுரை: மதுரை அருகே துணை நகரம் அமைக்கப்படும் என சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்ததை தொடர்ந்து முதற்கட்டமாக 450 பிளாட்டுகளை உருவாக்க தோப்பூர், உச்சப்பட்டி பகுதிகளில் வீட்டுவசதி வாரிய அதிகாரிகள் பணிகளை வேகப்படுத்தியுள்ளனர்.

மதுரை அருகே 19 ஆயிரத்து 500 வீடுகள் அமைக்கும் வகையில் துணை நகரம் அமைக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் அறிவித்தார். இந்த திட்டம் மதுரை-திருமங்கலம் நான்கு வழிச்சாலையில் தோப்பூர், உச்சப்பட்டியில் வீட்டுவசதி வாரியத்திற்கு சொந்தமான இடத்தில் செயல்படுத்தப்படவுள்ளது.

கூத்தியார் குண்டு பஸ்ஸ்டாப் முதல் தோப்பூர்வரை ரோட்டின் மேற்கு பகுதியில் ஆஸ்டின்பட்டி அரசு மருத்துவமனை, தனியார் பொறியியல் கல்லூரியை சுற்றியுள்ள பகுதியில் வீட்டுவசதி வாரியத்திற்கு சொந்தமாக 800 ஏக்கர் நிலம் உள்ளது. இங்கு ஏற்கனவே 300க்கும் மேற்பட்ட மனைகள் உருவாக்கப்பட்டுள்ளன. மீதியுள்ள நிலங்கள் அனைத்தையும் 10, 10 ஏக்கராக மனைகளாக மாற்ற வீட்டுவசதி வாரியம் திட்டமிட்டது.

இதற்கிடையே நிலத்தின் வழிகாட்டி மதிப்பீட்டையும் அரசு அதிகரித்தது. இதனால் இப்பகுதியில் ஒரு சென்ட் நிலத்தின் விலை ரூ.2 லட்சத்தை தாண்டியது. இதனால் எதிர்பார்க்கும் அளவிற்கு விற்பனை நடக்கவில்லை. இதனால் இப்பகுதியை முழுமையாக மேம்படுத்த திட்டமிடப்பட்டது. இதற்காக ரூ.120 கோடியில் திட்டம் உருவாக்கப்பட்டது. இத்திட்டத்தை செயல்படுத்தியபின் 586.86 ஏக்கரில் 19 ஆயிரத்து 500 பிளாட்டுகளை உருவாக்க திட்டமிடப்பட்டது. இந்த திட்டத்தைதான் முதல்வர் அறிவித்துள்ளார். வீட்டுவசதி வாரியத்தின் நிதியிலிருந்தே மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

இதன்படி 4 வழிச்சாலையிலிருந்து இரு இடங்களில் 40 அடி இணைப்பு ரோடு, பாதாள சாக்கடை, தண்ணீர் தொட்டி, தெருவிளக்குகள், பாலங்கள், தெருக்குழாய்கள், பூங்கா, வணிக வளாகம், தீயணைப்பு, போலீஸ் ஸ்டேஷன்கள், மருத்துவனை, கல்வி நிறுவனங்கள், தெருக்கள் முழுவதும் மரங்கள் என பல மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

முதற்கட்டமாக திட்டம் 3ல் 450 பிளாட்டுகள் 23.7 ஏக்கரில் உருவாக்கப்படவுள்ளன. இதற்காக ரூ.2.5 கோடியில் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள டெண்டர் விடப்பட்டது. முதல்வர் அறிவிப்பை தொடர்ந்து மேம்பாட்டு பணிகள் நேற்று துவங்கின. நேற்று இந்த பகுதியை  வீட்டுவசதி வாரிய அதிகாரிகள் பார்வையிட்டனர்.

அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘50 ஏக்கர்களாக பிரித்து தனித்தனி திட்டமாக அறிவித்து மனைகள் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே இங்கு மனைகளை வாங்க விரும்புவோரிடம் மனுக்கள் பெறப்பட்டுள்ளன. குறைந்த அளவு டெபாசிட் பணத்தை செலுத்த கோரியுள்ளதால் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மனுக்களை அளித்துள்ளனர். மேலும் மனுக்கள் பெறப்படும். மனைகள் உருவாக்கப்படுவதை பொறுத்து விரும்புவோருக்கு வழங்கப்படும். உடனுக்குடன் வீடுகளை கட்டினால் மிகப்பெரிய துணை நகரம் உருவாகும். மதுரை நகருக்குள் அதிகரித்துவிட்ட நிலத்தின் விலை, நெரிசல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு இந்த துணைநகரம் தீர்வாக அமையும்’ என்றார்.