Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மதுரையில் துணை நகரம் அமைக்கும் பணி துவக்கம் 6 மாதத்தில் நிலம் பயனாளிகளிடம் ஒப்படைப்பு

Print PDF
தினமலர்      06.04.2013

மதுரையில் துணை நகரம் அமைக்கும் பணி துவக்கம் 6 மாதத்தில் நிலம் பயனாளிகளிடம் ஒப்படைப்பு


மதுரை : மதுரையில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான 588.86 ஏக்கர் நிலத்தில் "துணை நகரம்' (சாட்டிலைட் சிட்டி) அமைப்பதற்கான பணி நேற்று துவங்கியது. ஆறு மாதத்தில், நிலத்தை பயனாளிகளிடம் ஒப்படைக்கும்படி, அதிகாரிகளுக்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

மதுரையில் மக்கள் தொகைக்கு ஏற்ப, கட்டமைப்பு வசதிகள் இல்லை. நகரும் விரிவாகவில்லை. நகரை மையமாகக் கொண்டு, எண்ணற்ற அடுக்குமாடி குடியிருப்புகள் பெருகி வருகின்றன. எனினும் நடுத்தர மற்றும் குறைந்த வருவாய் பிரிவு மக்களுக்கு, "மதுரையில் சொந்த வீடு' என்பது குதிரை கொம்பாகவே இருந்து வருகிறது. இப்பிரச்னைக்கு தீர்வு காணவும், நகரை விரிவாக்கவும் மதுரை - திருமங்கலம் இடையே தோப்பூர், உச்சபட்டி பகுதியில் வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான 588.86 ஏக்கர் நிலத்தில், "துணை நகரம்' அமைக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.

இங்கு அமையும் துணை நகரத்தில் 19,500 மனைகள் உருவாக்கப்படவுள்ளது. சாலைகள், குடிநீர், பாதாள சாக்கடை, தெருவிளக்கு, பூங்காக்கள், போலீஸ் ஸ்டேஷன், பள்ளிகள், ஷாப்பிங் மால் என நவீன வசதிகளுடன் அமைகிறது. இதற்கான முதற்கட்டப்பணி தோப்பூரில் நேற்று துவங்கியது. உச்சபட்டி மற்றும் ஆஸ்டின்பட்டி மருத்துவமனை பின் புறத்தில் 520 ஏக்கர் நிலமும், தோப்பூரில் 23 சென்ட், 50 சென்ட் என தனித்தனியாக 200 ஏக்கர் நிலமும் உள்ளன. இவற்றை அளந்து பிரிப்பதற்காக வீட்டு வசதி வாரியத்தின் தலைமை சர்வேயர் தலைமையில், 25 துணை சர்வேயர்கள் நிலத்தை அளக்கும் பணியில் துரிதமாக ஈடுபட்டுள்ளனர்.

ஒரு சென்ட் ரூ.3.20 லட்சம்:

உச்சபட்டி, தோப்பூரில் மனைகள் பிரிக்கப்பட்டு ஆறு மாதங்களில் பயனாளிகளுக்கு வழங்க வேண்டும், என அதிகாரிகளுக்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். நான்கு வழிச்சாலைக்கு மிகவும் அருகாமையில் நிலம் இருப்பதால், சென்ட் ஒன்றின் விலை ரூ.3.20 லட்சம் வரை என வீட்டு வசதி வாரியம் நிர்ணயித்துள்ளது. ஆறு மாதங்களுக்கு முன், பிளாட் கேட்டு விண்ணப்பித்தவர்களிடம் இருந்து, குறிப்பிட்ட தொகையை வீட்டு வசதி வாரியம் டெபாசிட்டாக பெற்றுள்ளது. இவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் மனைகள் ஒதுக்கப்படும் எனவும், தோப்பூர் நான்கு வழிச்சாலை பாலம் அருகே, 50 ஏக்கர் நிலத்தில் அடுக்குமாடி வீடுகள் கட்டவும் திட்டமிட்டிருப்பதாக வீட்டு வசதி வாரிய வட்டார தகவல் தெரிவிக்கிறது.