Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சி வாகனங்களின் இயக்கத்தை கண்காணிக்க ஜி.பி.எஸ்., கருவி

Print PDF
தினமலர்     07.05.2013

மாநகராட்சி வாகனங்களின் இயக்கத்தை கண்காணிக்க ஜி.பி.எஸ்., கருவி


சேலம்: சேலம் மாநகராட்சியில் பயன்படுத்தப்பட்டு வரும், 70 வாகனங்களில், நேற்று ஜி.பி.எஸ்., (புவி அமைப்பு தெரிவிக்கும் கருவி) பொருத்தப்பட்டது. இதனால், அலட்சியமாக செயல்பட்டு வந்த டிரைவர்கள் கலக்கமடைந்துள்ளனர்.சேலம் மாநகராட்சியில், திடக்கழிவு மேலாண்மை திட்டப்பணி மற்றும் குடிநீர் வினியோகப்பணி ஆகியவற்றுக்காக டிராக்டர்கள், லாரிகள் உட்பட, 70 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மாநகரில், தேக்கம் அடையும் குப்பைகளை அள்ளும் வாகனங்களை ஓட்டும் டிரைவர்கள், ஆமை வேகத்தில் வாகனங்களை ஓட்டி சென்றும், குப்பை கொட்டும் இடங்களில் மணிக்கணக்கில் வாகனத்தை கிடப்பில் போட்டும் பணியில் அலட்சியம் காட்டினர்.

ஒரு நாளைக்கு, அதிகப்பட்சம், இரண்டு நடை (டிரிப்) மட்டுமே வாகனங்கள் ஓட்டுவதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.ஆனால், நடை கணக்கு எழுதும் புத்தகத்தில், கூடுதல் நடை சென்றதாக பொய்யான தகவலை பதிவு செய்து வருகின்றனர். குப்பை அள்ளும் பணியில் மட்டுமின்றி குடிநீர் வினியோகத்திலும், இதே குளறுபடிகளை செய்து வருகின்றனர்.அரசியல் கட்சி பிரமுகர்களின் நிர்பந்தம், கமிஷன் தொகை உள்ளிட்ட காரணங்களுக்காக, பல டிரைவர்கள், அதிகாரிகளுக்கு தெரியாமல், தனியார் ஹோட்டல்கள், திருமண மண்டபங்கள் ஆகியவற்றுக்கு கணக்கில் வராமல், குடிநீரை சப்ளை செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

டிரைவர்களின் இந்த நடவடிக்கையால், மாநகரில் குப்பைகள் தேக்கம் அடைவதோடு, சரியான நேரத்துக்கு குடிநீர் வினியோகம் செய்வதிலும் சிக்கல் ஏற்பட்டது. இதனால், மாநகராட்சிக்கு சொந்தமான வாகனங்களை முறையாக கண்காணிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.மாநகராட்சியில், திடக்கழிவு மேலாண்மைப்பணி மற்றும் குடிநீர் வினியோக பணியில் ஈடுபட்டுள்ள, 70 வாகனங்களுக்கு, நேற்று கோவையை சேர்ந்த ஜே டெக்னாலஜிஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தார் மூலம், 13 லட்சம் ரூபாய் செலவில், ஜி.பி.எஸ்., (புவி அமைப்பு தெரிவிக்கும் கருவி) பொருத்தப்பட்டது.
 
இதற்கான துவக்க விழாவில், மேயர் சவுண்டப்பன், மாநகராட்சி கமிஷனர் அசோகன், துணை மேயர் நடேசன், செயற்பொறியாளர்கள் அசோகன், காமராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.இந்த கருவி பொருத்தப்பட்டுள்ளதால், மாநகராட்சி வாகனங்கள் புறப்படும் இடம், சென்று சேரும் இடம், செல்லும் தூரம், எந்த இடத்தில் சென்று கொண்டிருக்கிறது, வாகனம் இயக்கத்தில் உள்ளதா, நிறுத்தப்பட்டுள்ளதா என்பது போன்ற விவரங்கள், மாநகராட்சி மைய அலுவலகத்தில் உள்ள கம்ப்யூட்டருக்கு தொடர்ந்து தகவல்கள் துல்லியமாக வந்து கொண்டிருக்கும்.மாநகராட்சி வாகனங்களை அலட்சியமாக இயக்கி வந்த டிரைவர்களை கண்காணிக்கும் விதமாக, ஜி.பி.எஸ்., கருவி பொருத்தப்பட்டதை, பல்வேறு தரப்பினரும் வரவேற்றுள்ளனர்.