Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

வடமதுரையில் ரூ. 13.5 லட்சத்தில் சமுதாயக் கூடம் திறப்பு

Print PDF

தினமணி 20.09.2009

வடமதுரையில் ரூ. 13.5 லட்சத்தில் சமுதாயக் கூடம் திறப்பு

திண்டுக்கல், செப். 19 திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை பேரூராட்சியில் ரூ.13.5 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய சமுதாயக் கூடத்தை வருவாய் துறை அமைச்சர் இ.பெரியசாமி சனிக்கிழமை திறந்து வைத்தார்.

வேடசந்தூர் ஊராட்சி ஒன்றியம், அம்மாபட்டி ஊராட்சி, எருதப்பன்பட்டியில் 483 நபர்களுக்கு இலவச எரிவாயு அடுப்புகள், சிங்காரக் கோட்டையில் 683 வண்ணத் தொலைக்காட்சி பெட்டிகள், வேல்வார்கோட்டையில் 958 பேருக்கு இலவச எரிவாயு அடுப்புகள் வழங்கும் விழா மற்றும் வடமதுரை பேரூராட்சி சமுதாயக் கூடம் திறப்பு விழா மாவட்ட வருவாய் அலுவலர் கா.பேச்சியம்மாள் தலைமையில் நடைபெற்றது.

பயனாளிகளுக்கு நலத்திட்டங்களை வழங்கியும், புதிய கட்டடத்தை திறந்து வைத்தும் அமைச்சர் பேசியது:

நாட்டில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் ஆண்டுக்கு ரூ.10 முதல் ரூ.15 லட்சம் வரை எரிவாயு இணைப்புகளை மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்கி வருகிறது. தமிழக அரசின் திட்டங்கள் அனைத்து கிராமப்புற மக்களையும் சென்றடைய வேண்டும் என்ற வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

வரும் டிசம்பர் மாத இறுதிக்குள் காவிரி கூட்டுக் குடிர்த் திட்டத்தை முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதே போல் முதியோர் உதவித் தொகை பணம் கிடைப்பதில் ஏற்படும் தாமதத்தை தவிர்த்து உதவித் தொகை உரிய காலத்தில் தடையின்றி கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மாவட்டத்தில் இதுவரை 6 சமத்துவபுரங்கள் மற்றும் 253 கிராம ஊராட்சிகளில் 2.68 லட்சம் இலவச வண்ணத் தொலைக்காட்சி பெட்டிகள் வழங்கப்பட்டுள்ளன. விரைவில் நகராட்சிப் பகுதிகளில் தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்கப்படும் என்றார்.

வடமதுரை அரசு மேல்நிலைப் பள்ளியில் நபார்டு உலக வங்கித் திட்டம் பகுதி 9ன் கீழ் ரூ.2.7 கோடி மதிப்பில் கட்டப்படவுள்ள 45 வகுப்பறை கட்டடங்களுக்கான பூமிபூஜையை அமைச்சர் தொடங்கி வைத்தார்.

விழாவில் வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் மா.தண்டபாணி, மாவட்ட ஊராட்சித் தலைவர் ஆர்.கவிதா பார்த்திபன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.