Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

அரசு மருத்துவமனையில் "அம்மா' உணவகம் ரூ.9.8 லட்சத்தில் புதிய கட்டடத்திற்கு ஒப்பந்தம்

Print PDF
தினமலர்             04.06.2013

அரசு மருத்துவமனையில் "அம்மா' உணவகம் ரூ.9.8 லட்சத்தில் புதிய கட்டடத்திற்கு ஒப்பந்தம்


சென்னை:சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் மாநகராட்சி புதிதாக துவங்கப்பட உள்ள மலிவு விலை உணவகத்திற்கு, 9.8 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய கட்டடம் கட்ட ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது.

சென்னை ராஜிவ் காந்தி, கீழ்ப்பாக்கம், ராயப்பேட்டை, ஸ்டான்லி ஆகிய நான்கு அரசு மருத்துவமனைகளிலும் மலிவு விலை உணவகம் துவங்கப்பட உள்ளது. இதில், முதல் கட்டமாக ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் இந்த மாத இறுதிக்குள் உணவகத்தை துவக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

விரைவில் துவக்கம்

இதற்காக அந்த மருத்துவமனையில் எம்.ஆர்.ஐ., ஸ்கேன் எடுக்கும் கட்டடத்திற்கு அருகே 5,000 ச.அடி பரப்பளவில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்பட்டுள்ள இடம், பழைய சென்ட்ரல் ஜெயில் அமைந்து உள்ள சாலையில், கூவம் ஆற்றை கடக்கும் மேம்பாலத்தின் கீழ் பகுதியாகும். உணவகம் அமைய உள்ள இடத்தில் மேல்பகுதியில் தளம் இருப்பதால், பக்கவாட்டு சுவர் மட்டுமே கட்டப்பட வேண்டும்.

இதற்காக மாநகராட்சி 9.8 லட்சம் ரூபாய் மதிப்பில் ஒப்பந்தம் கோரி உள்ளது. கட்டுமான பணிகள் விரைவில் துவங்கப்பட உள்ளன.

மறு பரிசீலனை

இதற்கிடையில், அரசு பொது மருத்துவமனையில், உணவகம் அமைய உள்ள இடத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து, துறைமுகம் தொகுதி, அ.தி.மு.க., பிரமுகர் ஒருவர் கூறியதாவது:

அரசு பொது மருத்துவமனையில், உணவகம் அமைக்க, தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இடம், பொதுமக்களின் கழிப்பறையாக பயன்படுத்தப்படுகிறது. இந்த இடத்திற்கு இருபுறமும், கட்டண கழிப்பறைகள் உள்ளன. பின்புறம், உணவு கழிவுகள் உள்ளிட்டவை கொட்டப்பட்டு அசுத்தமாக உள்ளது.

எனவே, அசுத்தமான இடத்தில் உணவகம் அமைப்பதற்கு பதிலாக, தற்போது மருத்துவமனை வளாகத்தில், பொதுப்பணி துறைக்கு சொந்தமான இடத்தில், 20 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும், "கேன்டீன்' உள்ள இடத்தில், உணவகத்தை அமைக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.