Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

வேலூர் நகராட்சி மண்டலத்தில் ரூ.5 கோடியே 38 லட்சம் மதிப்பீட்டிகள் பணிகள் அரக்கோணத்தில் ஆய்வு நடத்திய நகராட்சிகள் நிர்வாக இயக்குனர் தகவல்

Print PDF

தினத்தந்தி                18.06.2013 

வேலூர் நகராட்சி மண்டலத்தில் ரூ.5 கோடியே 38 லட்சம் மதிப்பீட்டிகள் பணிகள் அரக்கோணத்தில் ஆய்வு நடத்திய நகராட்சிகள் நிர்வாக இயக்குனர் தகவல்

வேலூர் நகராட்சி மண்டலத்தில் ரூ.5 கோடியே 38 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகின்றன என்று நகராட்சிகள் நிர்வாக இயக்குனர் நடராஜன் தெரிவித்தார்.

ஆய்வு

அரக்கோணம் நகராட்சி அலுவலகத்திற்கு நேற்று வேலூர் மண்டல நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் நடராஜன் வருகை தந்தார். அலுவலகத்தில் அவர் கோப்புகள் மற்றும் நடைபெற்று வரும் பணிகள், வருகை பதிவேடுகள் குறித்து ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

ரூ.5¼ கோடியில் பணிகள்

வேலூர் மண்டல நகராட்சி, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியது. இதில் மொத்தம் 18 நகராட்சிகள் உள்ளன. இவற்றில் 5 கோடியே 38 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அரக்கோணத்தில் ஒருங்கிணைந்த நகராட்சி அபிவிருத்தி திட்டத்தின்கீழ் சாலை பணிகள், கால்வாய் பணிகள், குடிநீர் பணிகள், வடிகால் வசதி பணிகள் 3 கோடி ரூபாய் செலவில் நடைபெற்று வருகிறது. வறட்சி நிவாரண திட்டத்தின்கீழ் 68 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு 36 வார்டுகளிலும் கை பம்பு, ஆழ்துழை கிணறு, மின்மோட்டார் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் 18 வார்டுகளில் பணிகள் நிறைவு பெற்று உள்ளன. மீதமுள்ள 18 வார்டுகளில் பணிகள் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அரக்கோணத்தில் உள்ள நகராட்சி ஒப்பந்தகாரர்களை அழைத்து பொதுமக்களின் நலன் கருதி வேகமாக பணிகளை முடித்துதர உத்தரவிடப்பட்டு உள்ளது.

எரிவாயு தகன மேடை

அரக்கோணம் நேருஜி நகர் பகுதியில் 60 லட்சம் ரூபாய் செலவில் எரிவாயு தகனமேடை கட்டி முடிக்கப்பட்டு விட்டது. மிகச்சிறிய மின் இணைப்பு பணிகள் மட்டுமே உள்ளன. இம்மாதம் 30–ந் தேதிக்குள் முழுமையான பணிகள் முடிக்கப்படும். அடுத்த மாதம் 10–ந் தேதிக்குள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்படும். அரக்கோணம் அரசு மருத்துவமனையில் இருந்து ஒரு பிணத்தை பெற்று எரிவாயு தகனமேடை முழுமையாக சரியாக செயல்படுகிறதா என்று சோதனை செய்யப்படும். சாதாரணமாக பிணத்தை எரிப்பதற்கு ரூ.12 ஆயிரம், ரூ.15 ஆயிரம் என்று பொதுமக்கள் செலவு செய்கிறார்கள். ஆனால் எரிவாயு தகனமேடையில் ஒரு பிணத்தை எரிப்பதற்கு 700 ரூபாயில் இருந்து அதிகபட்சமாக ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படும். அதற்கு ரசீதுகள் கொடுக்கப்படும்.

மழை நீர் சேகரிப்பு பணி

 மழைநீர் சேகரிப்பு பணிகள் வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் நகராட்சிகளில் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது. தனிக்குழுக்கள் அமைக்கப்பட்டு நகராட்சிகளில் ஒவ்வொரு வார்டு பகுதிகளிலும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மழைநீர் சேகரித்தால்தான் நாம் நிலத்தடி நீரை பெற முடியும் என்பதை கருத்தில் கொண்டு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்.

வேலூர் மண்டலத்தில் மொத்தம் 61 குளங்கள் உள்ளன. இவற்றில் மழைநீர் வரத்திற்கான கால்வாய்கள் சரிசெய்யப்பட உள்ளது. இதன் மூலமாக குளங்களில் மழைநீர் தேங்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஆலோசனை கூட்டம்

பேட்டியின்போது நகராட்சி ஆணையாளர் செந்தில்முருகன், பொறியாளர் டி.ராஜவிஜயகாமராஜ் ஆகியோர் உடனிருந்தனர். முன்னதாக நகராட்சி ஒப்பந்தகாரர்களுடன் நிர்வாக இயக்குனர் நடராஜன் பணிகளை விரைந்து முடிப்பது குறித்து ஆலோசனை கூட்டம் நடத்தினார். இந்த கூட்டத்தில் ஒப்பந்தகாரர்கள் வி.ஆர்.பி.ராஜா, கோபண்ணாரவி, வீரராகவன், சதீஷ், பத்மநாபன், முனுசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.