Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சி கவுன்சில் கூட்டத்தில் மிக முக்கியமான தீர்மானங்கள் நேற்று நிறைவேற்றப்பட்டன

Print PDF

தினமலர்               19.06.2013

மாநகராட்சி கவுன்சில் கூட்டத்தில் மிக முக்கியமான தீர்மானங்கள் நேற்று நிறைவேற்றப்பட்டன


கோவை:கோவையை பசுமை நகரமாக மாற்ற, மாநகராட்சி கவுன்சில் கூட்டத்தில் மிக முக்கியமான தீர்மானங்கள் நேற்று நிறைவேற்றப்பட்டன.

கோவை மாநகராட்சி கவுன்சில் சாதாரண கூட்டம், மேயர் தலைமையில் நேற்று நடந்தது. நேற்றைய கூட்டத்தில், கோவை மேயரிடம் மிகப்பெரிய மாற்றத்தை நேற்று பார்க்க முடிந்தது. ஏரியா பிரச்னைகளைப் பற்றி பேசுவதற்கு யார் எழுந்தாலும், அவர்களைப் பேச அனுமதித்த மேயர், பேசாமலிருந்த கவுன்சிலர்களையும் எழுந்து பேசுமாறு கூறி, ஆச்சரியப்படுத்தினார். அந்த ஆச்சரியத்தில் எல்லோரும் இருக்கும்போதே, மேயர் பேசிய பேச்சும், கொண்டு வந்த தீர்மானங்களும் எல்லோரையும் திக்கு முக்காட வைத்தது.அவரது பேச்சு விபரம்: உக்கடம் பெரியகுளத்தை ராக், சிறுதுளி, விஜயலட்சுமி அறக்கட்டளையைச் சேர்ந்தவர்கள், சமூக மற்றும், பொதுநல அமைப்பினர் பலரும் இணைந்து தூர் வாரி கொடுத்துள்ளனர்.

அவர்களுக்கு எனது சிறப்பான நன்றியைத் தெரிவிக்கிறேன். பொதுமக்கள், போலீஸ், தனியார் அமைப்பினர், தனி நபர்கள் என பல தரப்பினரும் முன்வந்து தங்களை இந்த பணியில் ஈடுபடுத்திக்கொண்டு, மாநிலத்திலேயே முன்மாதிரியான மாவட்டம் கோவை என்பதை நிரூபித்துள்ளனர். அனைவருக்கும் நன்றி சொல்ல மாநகராட்சி கடமைப்பட்டுள்ளது. மக்களிடம் விழிப்புணர்வு இல்லாமல் எந்த திட்டம் கொண்டு வந்தும், எவ்வளவு நிதி ஒதுக்கியும் பயனில்லை. குளங்களை காக்க மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ள நிலையில், ஜவஹர்லால்நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்பு திட்டத்தில் 8 குளங்களையும் தூர் வார உகந்த சூழல் ஏற்பட்டுள்ளது.

குளங்களை தூர் வாரி புனரமைப்பதில், தன்னார்வ அமைப்புகளுடன், கவுன்சிலர்களும் கைகோர்த்து களமிறங்க வேண்டும். குறிச்சி குளத்திற்கு கரையமைக்கும் பணி நடக்கிறது. அதை மேம்படுத்தி, நடைபாதை, பூங்கா அமைத்தால் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். சிங்கப்பூர் நகரில், நிலப்பரப்பையும், சூரிய சக்தியையும் வீணடிக்காமல் பயன்படுத்துவதை போன்று, கோவையிலும் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு மேயர் பேசினார்.

நிதிக்குழு தலைவர் பிரபாகரன் பேசுகையில், ""குளங்களில் சாக்கடை கழிவுநீர் கலக்காமல் தடுக்க வேண்டும். உக்கடம் கழிவுநீர் பண்ணையில் சுத்திகரித்து வெளியேற்றும் தண்ணீரை, சாக்கடையில் கலக்காமல், குளங்களுக்கு கொண்டு செல்ல திட்டமிட வேண்டும்'' என்றார்.

தெற்கு மண்டல தலைவர் பெருமாள்சாமி பேசுகையில்,

""உக்கடம் குளத்தை தூர்வாரியதை போன்று, குறிச்சி குளத்தையும் தூர் வார வேண்டும். பார்க்கிங் வசதியுடன் நடைபாதை, பொழுதுபோக்கு பூங்கா அமைக்க "மாஸ்டர் பிளான்' கொண்டு வர வேண்டும்'' என்றார். கவுன்சிலர்கள் பலரும், பல விதமான ஆலோசனைகளைத் தெரிவித்தனர். அதன்பின், கோவையை பசுமை நகராக்க சிறப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதுகுறித்து மேயர் பேசுகையில், ""தேசிய, மாநில நெடுஞ்சாலையில் "சென்டர் மீடியனில்' விளம்பரம் வைக்க அனுமதியில்லாததால், அதிலுள்ள பூங்காவை பராமரிப்பதில்லை.

அதனால் "சென்டர் மீடியனை' மாநகராட்சியே எடுத்து பராமரிக்கலாம்,'' என்றார்.மேலும் அவர் கூறுகையில்,

""அடுக்குமாடி குடியிருப்பு, தொகுப்பு குடியிருப்பு கட்டட அனுமதிக்கு வரும்போது, மழைநீர் சேமிப்பு, மரம் வளர்க்கும் திட்டம் கட்டாயமாக்கப்படுகிறது.

அதேபோல, பழைய மற்றும் புதிய லே-அவுட்களில் "ரிசர்வ் சைட்'களில் திறந்தவெளியிடங்களில் மரம் வளர்க்க உறுதி அளிக்க வேண்டும்; அப்படி மரம் வளர்க்காவிட்டால் மாநகராட்சி நடவடிக்கை எடுக்கும். இதற்காக கொண்டு வரப்பட்ட சிறப்பு தீர்மானம் ஏக மனதாக நிறைவேற்றப்படுகிறது'' என்றார்.

குளங்களைப் பாதுகாக்கவும், நகரை பசுமையாக்கவும், மரங்கள் வளர்ப்புக்கு முக்கியத்துவம் கொடுத்தும் மேயர் கொண்டு வந்த தீர்மானத்தை அனைத்துக் கட்சி கவுன்சிலர்களும் வரவேற்று "மேஜையை' தட்டி வரவேற்றனர். மக்கள் பிரதிநிதிகளிடம் வந்துள்ள இந்த மாற்றத்தை, நடைமுறைப் படுத்த வேண்டிய பொறுப்பிலுள்ள அதிகாரிகளிடமும் நல்ல மாற்றங்கள் வர வேண்டுமென்பதுதான் கோவை மக்களின் எதிர்பார்ப்பு.

Last Updated on Wednesday, 19 June 2013 09:39