Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

டர்ன்புல்ஸ் சாலை - செனடாப் சாலை மேம்பாலம் அடுத்த மாதம் திறப்பு

Print PDF

தினமணி 25.09.2009

டர்ன்புல்ஸ் சாலை - செனடாப் சாலை மேம்பாலம் அடுத்த மாதம் திறப்பு

சென்னை, செப். 24: சென்னை நந்தனத்தில் டர்ன்புல்ஸ் சாலை, செனடாப் சாலை சந்திப்பில் அமைக்கப்பட்டுவரும் மேம்பாலம் அக்டோபர் இறுதியில் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட உள்ளது.

சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் மாநகராட்சி சார்பில் பல்வேறு பகுதிகளில் மேம்பாலங்கள், வாகனச் சுரங்கப்பாதை ஆகியவை அமைக்கப்பட்டு வருகின்றன.

நந்தனத்தில் டர்ன்புல்ஸ் சாலை -செனடாப் சாலை சந்திப்பில் சுமார் ரூ. 19 கோடி செலவில் 458 மீட்டர் நீளமும், 8 மீட்டர் அகலமும் கொண்ட மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த மேம்பாலப் பணியை துணை முதல்வர் மு.. ஸ்டாலின் வியாழக்கிழமை ஆய்வு செய்தார்.

ஆய்வுக்குப் பின்னர் ஸ்டாலின் கூறியதாவது:

நந்தனம் மேம்பால பணிக்காக 7 கிரவுண்ட் 1425 சதுர அடி கொண்ட நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதற்கு இழப்பீடு தொகையாக ரூ. 10 கோடி வழங்கப்பட்டுள்ளது. மேம்பாலப் பணி முடிவடையும் நிலையில் உள்ளது. அக்டோபர் இறுதியில் போக்குவரத்துக்கு திறக்கப்படும்.

ஜோன்ஸ் சாலை ரயில்வே சந்திக்கடவின் குறுக்கே ரூ. 7.33 கோடி செலவில் அமைக்கப்பட்டு வரும் வாகனச் சுரங்கப்பாதை பணி மற்றும் அடையாறு ஆற்றின் குறுக்கே ஆலந்தூர் சாலையில் ரூ. 6.3 கோடி செலவில் அமைக்கப்பட்டு வரும் உயர்நிலை பாலப் பணி அக்டோபர் மாதத்தில் முடிவடையும்.

வியாசர்பாடி கணேசபுரம் ரயில்வே சுரங்கப்பாதை மீது ரூ. 61.70 கோடி செலவில் மேம்பாலம் அமைக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கு நிலம் கையகப்படுத்தும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

சென்னை புறநகர் பகுதிகளை இணைத்து கூடுதலாக இரண்டு மாநகராட்சிகளை அமைப்பது தொடர்பாக சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் முதல்வரிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது. இதுகுறித்து பரிசீலித்து முடிவு எடுக்கப்படும் என்றார் ஸ்டாலின்.

இந்த ஆய்வின்போது மாநகராட்சி மேயர் மா. சுப்பிரமணியன், மாநகராட்சி கமிஷனர் ராஜேஷ் லக்கானி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

Last Updated on Friday, 25 September 2009 06:21