Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நெல்லை டவுன் நயினார் குளத்தில் ரூ.2½ கோடியில் படகு போக்குவரத்துடன் பூங்கா மேயர் தகவல்

Print PDF

தினத்தந்தி            30.08.2013

நெல்லை டவுன் நயினார் குளத்தில் ரூ.2½ கோடியில் படகு போக்குவரத்துடன் பூங்கா மேயர் தகவல்

நெல்லை டவுன் நயினார் குளத்தில் ரூ.2½ கோடி செலவில் படகு போக்குவரத்துடன் பூங்கா அமைக்கப்படும் என நேற்று நடந்த மாநகராட்சி கூட்டத்தில் மேயர் விஜிலா சத்யானந்த் தெரிவித்தார்.

மாநகராட்சி கூட்டம்

நெல்லை மாநகராட்சி கூட்டம் மேயர் விஜிலா சத்யானந்த் நேற்று நடந்தது. துணை மேயர் ஜெகநாதன் என்ற கணேசன், ஆணையாளர் த.மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டம் தொடங்கிய உடன், “நரிக்குறவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என பிரதமருக்கு கடிதம் எழுதியதற்கும், வனவிலங்குகள் தண்ணீர் குடிக்க காட்டிற்குள் ஆழ்குழாய் கிணறு அமைக்க நடவடிக்கை எடுத்த முதல்–அமைச்சருக்கு நன்றி தெரிவித்து“ தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:–

நயினார் குளம் பகுதியில் பூங்கா

மோகன் (நெல்லை மண்டல தலைவர்):– நெல்லை டவுன் பகுதியில் மக்களுக்கு பொழுதுபோக்குவதற்கு எந்தவிதமான வசதியும் இல்லை. எனவே நயினார் குளம் பகுதியில் பூங்கா அமைக்க வேண்டும்.

மேயர்:– நெல்லை டவுன் நயினார் குளம் பகுதியில் நவீன பொழுது போக்கு பூங்கா அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அந்த பகுதியில் ரூ.2½ கோடி செலவில் படகு போக்குவரத்து மற்றும் குழந்தைகள் விளையாடுவதற்கு வசதியாக நவீன பூங்கா அமைக்கப்படும்.

மேலும், நெல்லை மண்டல பகுதி மக்கள் வசதிக்காக வ.உ.சி. மணிமண்டபம் அருகே ரூ.1 கோடி செலவில் நவீன திருமண மண்டபம் கட்டப்படுகிறது. இந்த மண்டபம் மனோஜ்பாண்டியன் எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கட்டப்படும்.

வரி கட்டாத கட்டிடம்

எம்.சி.ராஜன் (பாளையங்கோட்டை மண்டல தலைவர்):– நெல்லை மாநகராட்சியில் நிதி பற்றாக்குறை உள்ளது. இந்த நிலையில் பல கட்டிடங்களுக்கு வரி செலுத்தாமல் உள்ளன. அந்த கட்டிடங்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும். இதுபோன்ற நடவடிக்கை மேற்கொண்டால், மாநகராட்சிக்கு வருவாய் கிடைக்கும்.

மேயர்:– வரி கட்டாத கட்டிங்கள் அதிகாரிகளால் கண்காணிக்கப்படும். அதன் உரிமையாளர்கள் பெயர்கள் விரைவில் பொது இடங்களில் எழுதி வைக்கப்பட்டு, வரி பாக்கி வசூல் செய்யப்படும்.

ஹைதர் அலி (மேலப்பாளையம் மண்டல தலைவர்):– மேலப்பாளையம் பகுதியில் அடுக்கு மாடி குடியிருப்புகளில் உள்ளவர்கள் குறைவான குடிநீர் இணைப்பு பெற்று கொண்டு, கூடுதல் வீடுகளுக்கு குடிநீர் சப்ளை செய்கிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேயர்:– குடிநீர் இணைப்பை முறைகேடாக பயன்படுத்தும் அடுக்கு மாடி குடியிருப்புகள் கண்காணிக்கப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆக்கிரமிப்புகள்

மாதவன் (தச்சநல்லூர் மண்டல தலைவர்):– தச்சை மண்டல பகுதியில் உள்ள மாநகராட்சி இடங்கள் வேலி அமைக்கப்படாமல் உள்ளது. அந்த இடங்களில் வேலி அமைக்க வேண்டும். ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடங்களை மீட்க வேண்டும். மின் கட்டணம், டெலிபோன் கட்டணம் ஒரே இடத்தில் செலுத்துவதற்கு வசதியாக பல்நோக்கு சேவை மையம் அமைக்க வேண்டும்.

அப்போது, சில கவுன்சிலர்கள் எழுந்து நின்று “மண்டல தலைவர்களுக்கு மட்டும் பேசுவதற்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது. கவுன்சிலர்களுக்கும் பேசுவதற்கு வாய்ப்பு அளிக்க வேண்டும்“ என்று எழுந்து நின்று கோஷம் போட்டனர். பின்னர் கவுன்சிலர்கள் பேசுவதற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.

ஐ.விஜயன்(சுயேட்சை) பேசும் போது, “பெண் நிருபர் கற்பழிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் கொண்டு வர வேண்டும்“ என்றார். இதற்கு பதில் அளித்து பேசிய மேயர், “இது போன்ற சம்பவங்கள் வட மாநிலங்களில் தான் நடக்கிறது. தமிழ்நாட்டில் நடக்க வில்லை. எனவே இதற்கு மத்தியில் ஆளும் அரசு தான் பொறுப்பு“ என்றார். அதற்கு காங்கிரஸ் கவுன்சிலர் உமாபதி சிவன் எதிர்ப்பு தெரிவித்தார். இவ்வாறு கூட்டத்தில் விவாதம் நடந்தது.

எம்.ஜி.ஆர். பெயர்

தொடர்ந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நெல்லை புதிய பஸ் நிலையத்துக்கு “பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம்“ என பெயர் சூட்ட அரசு அனுமதி வழங்கி உள்ளது. எனவே, திருவனந்தபுரம் சாலையில் உள்ள நுழைவு வாயில் போர்டிகோ பகுதிகளை அபிவிருத்தி செய்யவும், புறவழிச்சாலையில் உள்ள நுழைவு வாயிலில் புதிதாக வளைவு அமைத்து “திருநெல்வேலி மாநகராட்சி– பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம்“ என பெயர் பலகை வைக்கவும் ரூ.55 லட்சம் அனுமதிக்கப்படுகிறது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.