Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குறிச்சி குளத்தில் நடைபாதை, பூங்கா அமைக்க திட்டம் : தடையின்மை சான்று பெற தீர்மானம்

Print PDF

தினமலர்              30.08.2013

குறிச்சி குளத்தில் நடைபாதை, பூங்கா அமைக்க திட்டம் : தடையின்மை சான்று பெற தீர்மானம்


கோவை : கோவை மாநகராட்சி தெற்கு எல்லையிலுள்ள, குறிச்சி குளத்தின் கரையில் நடைபாதை மற்றும் பூங்கா அமைக்க பொதுப்பணித்துறையில் தடையின்மை சான்று பெற மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

நொய்யல் ஆற்றுப்படுகையில் உள்ள கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் 32 குளங்கள் உள்ளன. இதில், கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள எட்டு குளங்களை தூர்வாரி புனரமைக்க, 90 ஆண்டு கால குத்தகைக்கு மாநகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்பு திட்டத்தில் குளங்களை மேம்படுத்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.இந்நிலையில், "ராக்', "சிறுதுளி', தனியார் அறக்கட்டளை மற்றும் பொதுமக்கள் இணைந்து உக்கடம் பெரியகுளத்தை தூர்வாரி கரை அமைத்துள்ளனர். பொதுப் பணித்துறை வசமுள்ள குறிச்சி குளத்தை தூர்வாரி கரை அமைக்கும் பணியை தனியார் அறக்கட்டளை மேற்கொண்டுள்ளது.

மாநகராட்சி சார்பில் குறிச்சி குளத்தின் கரையில் நடைபாதை மற்றும் பூங்கா அமைக்க வேண்டுமென, தெற்கு மண்டல தலைவர் பெருமாள்சாமி, மாநகராட்சி மேயருக்கு கடிதம் கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில், நேற்று நடந்த மாநகராட்சி அவசர கூட்டத்தில், சிறப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

"தெற்கு மண்டல தலைவர் கேட்டுக்கொண்டபடி, மாநகராட்சி சார்பில் நடைபாதை மற்றும் பூங்காக்கள் ஏற்படுத்தி பராமரிக்க, பொதுப்பணித்துறையிடம் தடையின்மை சான்று கேட்டு கடிதம் கொடுக்கப்படும்' என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேயர் விளக்கமளித்தபோது, ""குளத்தில் கழிவுநீர் கலப்பதை தடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. வாலாங்குளம் விரைவில் தூர்வாரி முழுமையாக கரை அமைக்கப்படும். பெரியகுளத்தில் நடைபாதை, பூங்கா அமைக்க "மாஸ்டர் பிளான்' தயாரிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்த நிறைய பேர் ஆர்வமாக உள்ளனர். வெறும் அறிவிப்பாக இல்லாமல், திட்டத்திற்கு விரைவில் செயல்வடிவம் கொடுக்கப்படும்.

இதேபோன்று குறிச்சி குளத்திலும் நடைபாதை, பூங்கா அமைத்து, கோவையை பசுமை நகரமாக்க நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.

"நல்லுள்ளங்களுக்கு நன்றி!'""பெரியகுளம் தூர்வாரி, கரை அமைத்தபோது தன்னார்வ அமைப்புகள் மட்டுமின்றி, கோவையிலுள்ள பெரிய தொழிலதிபர்கள், நிறுவனங்கள், போலீஸ் அதிகாரிகள் அனைவரும் எவ்வித பாகுபாடும் பார்க்காமல் குளத்தில் இறங்கி கரசேவையில் ஈடுபட்டனர். "தினமலர்' நாளிதழ் சார்பில் ஊழியர்கள் அனைவரும் கரசேவையில் ஈடுபட்டனர். இவ்வேளையில், அனைத்து நல்லுள்ளங்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்'' என, மேயர் தெரிவித்தார்.