Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நங்கநல்லுார் 5வது பிரதான சாலை : பழவந்தாங்கல் சுரங்கப்பாதை இணைப்பு

Print PDF

தினமலர்           07.11.2013

நங்கநல்லுார் 5வது பிரதான சாலை : பழவந்தாங்கல் சுரங்கப்பாதை இணைப்பு


ஆலந்துார் : பழவந்தாங்கல் சுரங்கப்பாதை-நங்கநல்லுார் ஐந்தாவது பிரதான சாலை இரண்டையும் இணைக்கும் வகையில், நிலம் கையகப்படுத்தும் பணிகள் விரைவில் துவங்க உள்ளன.

நங்கநல்லுார், மூவரசம்பட்டு, மடிப்பாக்கம் பகுதிவாசிகள், ஜி.எஸ்.டி., சாலைக்கு செல்ல, நங்கநல்லுார் ஐந்தாவது பிரதான சாலை, பழவந்தாங்கல் ரயில்வே சுரங்கப்பாதை சாலையை பயன்படுத்தி வருகின்றனர். 50 அடிக்கும் மேல் அகலம் கொண்ட இந்த சாலை இருவழியாக பயன்படுத்தப் பட்டது.குடியிருப்புகளின் எண்ணிக்கை அதிகரித்ததால், கடந்த 50 ஆண்டுகளில் இந்த சாலையில் போக்குவரத்து பன்மடங்கு அதிகரித்துவிட்டது.இந்த நிலையில், பழவந்தாங்கல் சுரங்கப்பாதைக்கும், நங்கநல்லூர் ஐந்தாவது பிரதான சாலைக்கும் இடையே, 150 அடி நீளம், 30 அடி அகலம் கொண்ட 'ப' வடிவில் குறுகலான சாலை ஒன்று உள்ளது.போக்குவரத்து நெரிசலால், அந்த சாலை ஒருவழி பாதையாக மாற்றப்பட்ட பின்னும், நெரிசல் தொடர்ந்தது.

அதையடுத்து, ஆலந்துார் நகராட்சியாக இருந்தபோது, பழவந்தாங்கல் சுரங்கப்பாதை மற்றும் 5வது பிரதான சாலையை, 'ப' சாலையை விட்டு விட்டு, நேரடியாக இணைக்க, நலச்சங்கங்கள் கோரிக்கை விடுத்தன. கடந்த, 2005ல், நிலம் கையகப்படுத்த, வருவாய் துறைக்கு அனுமதி அளிக்கப் பட்டது. எனினும், பல்வேறு குறுக்கீடுகளால், கையகப்படுத்தல் நடக்கவில்லை.

இதையடுத்து தற்போது, சாலையை இணைக்கும் நடவடிக்கையில், மாநகராட்சி இறங்கி உள்ளது. இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது: சாலை இணைக்கப்பட வேண்டிய இடத்தில், வருவாய் துறை மூலம், கடந்த வாரம் நிலம் அளக்கப்பட்டது. 15 ஆயிரம் சதுர அடி பரப்பில் நிலம் தேவைப்படுகிறது. அந்த இடத்தில் தற்போது குடியிருப்புகள் உள்ளன. அவர்களுக்கு, மாநகராட்சி நிலம் மற்றும் உடைமைத் துறை மூலம், இழப்பீட்டு தொகை நிர்ணயம் செய்யப்படும்.இந்த சாலை இணைக்கப் படும் பட்சத்தில், 50 அடி அகல சாலையாக மாறி, இருவழியாக பயன்படுத்தப்பட்டு போக்குவரத்து நெரிசல் குறையும்,இவ்வாறு அவர் கூறினார்.