Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தருமபுரி நகராட்சிக்கு புதிய கட்டடம்: பணிகள் தொடக்கம்

Print PDF

தினமணி        14.11.2013

தருமபுரி நகராட்சிக்கு புதிய கட்டடம்: பணிகள் தொடக்கம்

தருமபுரி நகராட்சி அலுவலகத்துக்கு ரூ.2 கோடியில் கட்டடம் கட்ட சனிக்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது.

தருமபுரி 1.4.1964-ஆம் ஆண்டு நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. 1987-ஆம் ஆண்டு முதல் நிலை நகராட்சியாகவும், 1991-இல் இரண்டாம் நிலை நகராட்சியாகவும், 2.12.2008-இல் தேர்வு நிலை நகராட்சியாகவும் தரம் உயர்த்தப்பட்டு செயல்பட்டு வருகிறது.

மொத்தம் 33 வார்டுகள் உள்ள இந்த நகராட்சியின் மொத்த பரப்பளவு 11.65 சதுர கி.மீ. ஆகும். 2011-ஆம் ஆண்டின் கணக்கெடுப்புப்படி தருமபுரி நகராட்சியின் மக்கள்தொகை 68,595 பேர் ஆகும்.

சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டடத்தில் செயல்பட்டு வரும் தருமபுரி நகராட்சி அலுவலகத்துக்கு அனைத்து வசதிகளுடனும் ரூ.2 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடம் கட்டப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதற்காக ரூ.1.40 கோடியும், நகராட்சி பொது நிதியிலிருந்து ரூ.40 லட்சமும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

தருமபுரி நகராட்சி புதிய அலுவலகம் தரைத்தளத்துடன் இரு தளங்கள் கட்டப்பட உள்ளது. மொத்தம் 17760.45 ச.அடி பரப்பளவில் இந்தக் கட்டடம் கட்டப்பட உள்ளது. அடிக்கல் நாட்டு விழா:

இதற்கான அடிக்கல் நாட்டு விழா சனிக்கிழமை நகர்மன்றத் தலைவர் ஜெ.சுமதி தலைமையில் நடைபெற்றது.

மாநில உயர் கல்வித் துறை அமைச்சர் பி.பழனியப்பன் புதிய கட்டடத்துக்கான அடிக்கல்லை நாட்டி பணிகளைத் தொடக்கிவைத்தார்.

இதில், துப்புரவுப் பணியாளர்களுக்கு சீருடை, பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டன.

விழாவில், மாவட்ட ஆட்சியர் கே.விவேகானந்தன், கே.பி.அன்பழகன் எம்எல்ஏ, மாவட்ட வருவாய் அலுவலர் ப.ராமர், மாவட்ட ஊராட்சித் தலைவர் டி.ஆர். அன்பழகன், கோட்டாட்சியர் பி.மேனகா, ஆணையர் குருசாமி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.