Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

விநாயகா நகர் பிரதான சாலையில் மழைநீர் வடிகால்வாய் ரூ.2.41 கோடிக்கு மாநகராட்சி ஒப்பந்தம்

Print PDF

தினமலர்         18.11.2013 

விநாயகா நகர் பிரதான சாலையில் மழைநீர் வடிகால்வாய் ரூ.2.41 கோடிக்கு மாநகராட்சி ஒப்பந்தம்

சென்னை:ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலத்தில் வெள்ள பாதிப்பை சந்தித்து வந்த துரைப்பாக்கம், விநாயகா நகரில் 2.41 கோடி ரூபாய் செலவில் மழைநீர் வடிகால்வாய் அமைக்க மாநகராட்சி ஒப்பந்தம் அறிவித்துள்ளது.

சோழிங்கநல்லுார் மண்டலத்திற்கு உட்பட்ட 193வது வார்டு துரைப்பாக்கம், விநாயகா நகர், ஆனந்தா நகர் பகுதி.

அங்கு நுாற்றுக்கணக்கான குடியிருப்புக்கள் உள்ள நிலையில், சாலை, மழைநீர் வடிகால்வாய் வசதி இல்லாததால், ஒவ்வொரு ஆண்டு பருவமழைக்கும் விநாயகா நகர், ஆனந்தா நகர் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்குவதும், சாலைகள் போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் இருப்பதும் வாடிக்கையாக உள்ளது.

இதுகுறித்து, பகுதி நலச்சங்கத்தினர் தெரிவித்த தொடர் புகார்களை தொடர்ந்து, மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி இந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டார்.

சாலை மற்றும் மழைநீர் வடிகால்வாய் பணிகளை உடனடியாக மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். தொடர்ந்து, விநாயகா நகர், ஆனந்தா நகரில் சாலை அமைக்க கடந்த மாதம் மாநகராட்சி ஒப்பந்தம் வெளியிட்டது.

தற்போது வெள்ள பாதிப்பு பிரச்னையை தவிர்க்கும் வகையில் ஆனந்தா நகர் மற்றும் விநாயகா நகர் பிரதான சாலையில், விநாயகா நகர் 1வது குறுக்கு தெரு முதல் பள்ளிக்கரணை சதுப்பு நில பகுதி வரை 4 அடி அகலத்திற்கு கான்கிரீட் பெட்டக வடிவ மழைநீர் வடிகால்வாய் அமைக்க, 2.41 கோடி ரூபாயை மாநகராட்சி ஒதுக்கியுள்ளது. இந்த பணிகளுக்கு ஒப்பந்தம் வெளியிடப்பட்டுள்ளது.

இதே மண்டலத்தில் புதிய குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதிகளான கண்ணகி நகர் பிரதான சாலை முதல், மழைநீர் வடிகால்வாய் அமைக்க 3.72 கோடி ரூபாய், பெருங்குடி மண்டலத்தில் ராஜிவ் காந்தி சாலை முதல், தெற்கு பக்கிங்ஹாம் கால்வாய் வரை மழைநீர் வடிகால்வாய் அமைக்க 1.85 கோடி ரூபாய் பணிகளுக்கும் மாநகராட்சி ஒப்பந்தம் அறிவித்து உள்ளது.

மேலும், ஆற்காடு சாலையில் வடபழனி சிக்னல் மற்றும் அருணாசலம் சாலை முதல் குமரன் காலனி பிரதான சாலை வரையில் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணிகளுக்கும், நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

இந்த பணிகளுக்கு தற்போது ஒப்பந்தம் அறிவித்தாலும், பருவமழை துவங்கி இருப்பதால், மழை முடிந்த பிறகே பணிகள் துவங்க வாய்ப்புள்ளதாக, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.