Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

வேலூர் மாநகராட்சியில் ரூ.2½ கோடியில் அதிநவீன கழிவறைகள் 13 இடங்களில் அமைக்கப்படுகிறது

Print PDF

தினத்தந்தி           19.11.2013

வேலூர் மாநகராட்சியில் ரூ.2½ கோடியில் அதிநவீன கழிவறைகள் 13 இடங்களில் அமைக்கப்படுகிறது

வேலூர் மாநகராட்சியில் ரூ.2½ கோடியில் அதிநவீன கழிவறைகள் 13 இடங்களில் அமைக்கப்படுகிறது.

வேலூர் மாநகராட்சி

வேலூர் மாநகராட்சி ஆவதற்கு முன்பு 48 வார்டுகள் இருந்தன. கடந்த உள்ளாட்சி தேர்தலின் போது பேரூராட்சிகள், நகராட்சிகள் என பல பகுதிகள் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டு 60 வார்டுகள் உள்ளன. தற்போது மாநகராட்சியில் 5 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர்.

மாநகராட்சி பகுதியில் பல இடங்களில் திறந்த வெளியில் மலம் கழிப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, நோய் பரவும் அபாயம் உள்ளது. இப்போதும் மாநகராட்சியில் சில இடங்களில் கழிவறைகள் இல்லாததால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

அதிநவீன கழிவறைகள்

இந்த நிலையில் உலக தரத்தில் அதிநவீன தொழில்நுட்பங்களை கொண்ட கழிவறைகள் (நம்ம டாய்லெட்) வேலூர் மாநகராட்சியில் 13 இடங்களில் அமைக்க முடிவு செய்யப்பட்டு இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி மேயர் கார்த்தியாயினியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:–

மாநகராட்சியில் பழைய பஸ் நிலையம் உள்பட 13 இடங்களில் உலகத்தரம் வாய்ந்த அதிநவீன தொழிற்நுட்பங்களை உள்ளடக்கிய ‘நம்ம டாய்லெட்’ திட்டத்தில் கழிவறைகள் அமைக்கப்பட உள்ளது. இதற்காக மாநில அரசு சிறப்பு நிதியாக ரூ.2½ கோடி கொடுத்துள்ளது.

மக்கள்தொகைக்கு ஏற்ப குறைந்தபட்சமாக ரூ.14 லட்சம் முதல் ரூ.24 லட்சம் செலவில் அதிநவீன கழிவறைகள் அமைக்கப்படும். இதனை மாற்றுத்திறனாளிகள் கூட பயன்படுத்தலாம்.

மக்கள் பயன்பாட்டுக்கு...

இந்த கழிவறைகளில் சிறுநீர் கழித்தபின்பு தண்ணீர் ஊற்ற வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் துர்நாற்றம் வீசாத வகையில் இதன் தொழில்நுட்பம் அமைகிறது. மேலும் உட்புற, வெளிபுற சுவற்றில் கிறுக்க முடியாது, போஸ்டர்கள் ஒட்ட முடியாது. வர்ணம் பூச முடியாது. கழிவறைகளை சுத்தம் செய்வது மிகவும் எளிது. தரையில் கறைகள் பிடிக்கவே பிடிக்காது. இந்த டாய்லெட்கள் அதிநவீன தொழில்நுட்பத்துடன் காம்போசிட் மெட்டீரியலால் ஆனது.

இதற்கான டெண்டர் முடிக்கப்பட்டுள்ளது. டெண்டர் எடுத்த நிறுவனங்களின் தரம் குறித்து வழங்கிய ஆவணங்கள் சரிபார்த்த பின்னர் பணி உத்தரவு வழங்கப்படும். பணி உத்தரவு வழங்கப்பட்ட 60 நாட்களில் கழிவறைகள் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்.

அனைத்து பகுதிகளிலும்

மாநகராட்சியில் அனைத்து பகுதிகளிலும் இதேபோன்று ‘நம்ம டாய்லெட்’ திட்டத்தில் கழிவறைகள் அமைக்க தேவையான நிதியை அரசிடம் இருந்து கேட்டு பெறப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.