Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மேட்டுப்பாளையம் நகராட்சியில் மின் வினியோக சேவையை மேம்படுத்த ரூ.10 கோடியில் திட்டம் தலைமை பொறியாளர் தகவல்

Print PDF

தினத்தந்தி            13.12.2013

மேட்டுப்பாளையம் நகராட்சியில் மின் வினியோக சேவையை மேம்படுத்த ரூ.10 கோடியில் திட்டம் தலைமை பொறியாளர் தகவல்

மேட்டுப்பாளையம் நகராட்சியில் மின் வினியோக சேவையை மேம்படுத்த ரூ.10 கோடியில் ஆர்.ஏ.பி.டி.ஆர்.பி. திட்டம் இந்த மாதம் தொடங்கப்படும் என்று கூடுதல் தலைமை பொறியாளர் என்.அனந்தகிருஷ்ணன் கூறினார்.

ஆலோசனைக்கூட்டம்

மேட்டுப்பாளையம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மின் வினியோக சேவையை மேம்படுத்த தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகம் திட்டமிட்டுள்ளது. இதற்காக சுமார் ரூ.10 கோடி செலவில் மத்திய அரசின் நகர புனரமைப்பு நிறுவன உதவியுடன் ஆர்.ஏ.பி.டி.ஆர்.பி. என்ற திட்டம் உருவாக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்காக விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்துவது குறித்த ஆலோசனைக்கூட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சி நகர்மன்ற கூட்ட அரங்கில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு கோவை மின் பகிர்மான கூடுதல் தலைமை பொறியாளர் என்.அனந்தகிருஷ்ணன் தலைமை தாங்கினார். நகரசபைத்தலைவர் சதீஷ்குமார் முன்னிலை வகித்தார். செயற்பொறியாளர் முகமது முபாரக் வரவேற்று பேசினார்.

கூட்டத்தில் கூடுதல் தலைமை பொறியாளர் என்.அனந்தகிருஷ்ணன் பேசியதாவது:–

இந்த திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் மேட்டுப்பாளையம் நகருக்கு பிரத்யேக உயரழுத்த மின் பாதை அமைத்து அதன்மூலம் தடையில்லா தொடர் மின் வினியோகம் வழங்கப்படும். நகரில் முதன்முறையாக உயரழுத்த புதைவட (கேபிள்) மின் திட்டம் அமைத்து மின் வினியோகம் வழங்கப்படும். இதற்காக மேட்டுப்பாளையம் –சிறுமுகை ரோட்டில் எல்.ஐ.சி. அலுவலகம் அருகில் இருந்து புதைவடம் அமைக்கும் பணி தொடங்கி, நியு எக்ஸ்டென்சன் வீதி, ஊட்டி மெயின்ரோடு காந்தி சிலை, ஆர்.எஸ்.ஆர்.சந்திப்பு, வனபத்ரகாளியம்மன் ரோடு, காட்டூர் ரெயில்வே கேட் வழியாக சான்–ஜோஸ் பள்ளி வரை 3.8 கிலோ மீட்டர் தூரத்தில் முடிவடையும்.

புதிதாக 130 மின் மாற்றிகள் மேட்டுப்பாளையம் நகராட்சி எல்லைக்குள் அமைத்து அதன் மூலம் நிலையான மின்சாரம் வழங்கப்படும். ஏற்கனவே செல்லும் உயரழுத்த மின் கம்பிகளை மாற்றியும், தரம் உயர்த்தியும், தொலை தூரத்திற்கும், ஏற்கனவே உள்ள தாழ்வழுத்த மின் பாதைகளில் உள்ள மின் கம்பிகளை மாற்றியும், தரம் உயர்த்தியும் சீரான மின் வினியோகம் செய்யப்படும். நகரில் அனைத்து வீடுகளிலும் உள்ள பழைய மீட்டர்களை எடுத்து விட்டு கணக்கீட்டை துல்லியமாக கண்டறிய புதிய டிஜிட்டல் மீட்டர்கள் பொருத்தப்படும். திட்டப்பணிகள் இந்த மாதம் தொடங்கப்பட்டு அடுத்த ஆண்டு ஜூன் மாதம் இறுதிக்குள் முடிக்கப்படும். இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த அனைவரும் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். இந்த திட்டம் தொடங்கப்படுவதற்கு முன் அந்தந்த வார்டு நகரமன்ற உறுப்பினர்கள் தங்களது ஆலோசனைகளை தெரிவிக்கலாம்.

இவ்வாறு என்.அனந்தகிருஷ்ணன் பேசினார்.

கூட்டத்தில் மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் கருணாமூர்த்தி, வெங்கடேசன், உதவிபொறியாளர்கள் சுரேஷ், பழனிச்சாமி, நகர்மன்ற உறுப்பினர்கள், அலுவலர்கள் மின்வாரிய அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) ஜி.இளங்கோவன் நன்றி கூறினார்.