Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சியில் 8 இடங்களில் உயர்கோபுர மின் விளக்குகள்

Print PDF

தினமலர்             16.12.2013

மாநகராட்சியில் 8 இடங்களில் உயர்கோபுர மின் விளக்குகள்

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி பகுதியில், எட்டு இடங்களில் 54 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் உயர்கோபுர மின்விளக்கு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில், கடந்த அக்., மாதம் சாலை பாதுகாப்பு குழு கூட்டம் நடந்தது. அதில், வருவாய்த்துறை, போலீஸ் உயரதிகாரிகள், நெடுஞ்சாலைத்துறை, மாநகராட்சி அதிகாரிகள் பங்கேற்றனர். அப்போது, மக்கள் தொகை அதிகரித்துள்ளதாலும், வாகன போக்குவரத்து அதிகரித்துள்ளதாலும், இரவு நேரங்களில், சாலை சந்திப்பு பகுதிகளில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.

விபத்து ஏற்படுவதை தடுக்கும் வகையில், முக்கிய சந்திப்பு பகுதிகளில் உயர்கோபுர மின்விளக்கு அமைக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது. அதன்படி, மாநகராட்சி கமிஷனரின் அதிகார வரம்புக்கு உட்பட்டு, 16 மீட்டர் உயரத்தில், உயர்கோபுர மின் விளக்குகளை அமைக்க திட்டமிடப்பட்டது. அதற்காக, தலா 6.75 லட்சம் ரூபாய் அளவுக்கு மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது.

பழைய பஸ் ஸ்டாண்டின் மத்தியில் உயர்கோபுர மின் விளக்கு உள்ளது. கூடுதல் பாதுகாப்பை ஏற்படுத்தும் வகையில், பஸ் ஸ்டாண்டின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் புதிதாக உயர்கோபுர மின்விளக்கு அமைக்கப்படுகிறது. குமரன் ரோடு, எம்.ஜி.ஆர்., சிலை பகுதி, அவிநாசி ரோடு பெரியார் காலனி சந்திப்பு, 15 வேலம்பாளையம் சாலை சந்திப்பு, மங்கலம் ரோடு ஆண்டிபாளையம் குளம் பகுதி, பல்லடம் ரோடு தென்னம்பாளையம், காங்கயம் ரோடு பெரியகடை வீதி சந்திப்பு ஆகிய எட்டு இடங்களில் உயர்கோபுர மின்விளக்குகள் அமைக்கப்பட உள்ளன.

இப்பணி மேற்கொள்ள 54 லட்சம் ரூபாய்க்கு கோரப்பட்டுள்ள ஒப்பந்தப்புள்ளிக்கு, இன்று நடக்கும் மாமன்ற கூட்டத்தில் அனுமதி வழங்கியதும் பணி துவங்கும், என, அதிகாரிகள் தெரிவித்தனர்.