Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

புதிய மீன் மார்க்கெட் வளாகத்தில் தரை மேடையை உடனடியாகப் பயன்படுத்தலாம்

Print PDF

தினமணி              31.12.2013

புதிய மீன் மார்க்கெட் வளாகத்தில் தரை மேடையை உடனடியாகப் பயன்படுத்தலாம்

வேலூர் பெங்களூர் சாலையில் ரூ.1.25 கோடியில் கட்டப்பட்டுள்ள மீன் மார்க்கெட் வளாகத்தில் உள்ள தரைமேடையை மீன் வியாபாரிகள் உடனடியாகப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன் தெரிவித்தார்.

வேலூர் ஆபிஸர்ஸ் லைனில் 60 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த மீன்மார்க்கெட்டுக்கு பதிலாக, பெங்களூர் சாலையில் நவீன வசதிகளுடன் கூடிய மீன்மார்க்கெட் வளாகத்தை மாநகராட்சி நிறுவியது. இதில் ஷட்டர் போடப்பட்ட கடைகள், தரை மேடை கடைகள் உள்பட 110 கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த இடத்துக்கு வருவதற்கு பழைய மீன் மார்க்கெட் வியாபாரிகள் உடன்படவில்லை. இதனால் பழைய மீன் மார்க்கெட்டை 30ஆம் தேதியுடன் மூடுவதாக மாநகராட்சி அறிவித்தது.

இரு தரப்பினருக்கும் பிரச்னை நிலவியதையடுத்து, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு ஜனவரி 8ஆம் தேதிக்குள் பழைய மீன்மார்க்கெட் வளாகத்தை காலி செய்ய கால அவகாசம் அளித்தது.

 வியாபாரிகள் தரப்பில் வைக்கப்பட்ட ஒருசில கோரிக்கைகளும் ஏற்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, ஜனவரி 7-ம் தேதி நடைபெறும் புதிய மீன் மார்க்கெட் வளாகத்தில் உள்ள கடைகளுக்கான ஏலத்தில் கலந்துகொள்ள சம்மதம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், மாநகராட்சி நிர்வாகம் புதிய மீன் மார்க்கெட்டை பயன்பாட்டுக்கு திங்கள்கிழமை கொண்டு வந்தது. ஆனாலும் வியாபாரிகள் எவரும் இந்த வளாகத்தை திங்கள்கிழமை பயன்படுத்தவில்லை.

இதுதொடர்பாக ஆணையர் ஜானகி ரவீந்திரனிடம் கேட்டபோது, வியாபாரிகள் ஷட்டர் போடப்பட்ட கடைகளுக்கான ஏலத்தில் கலந்துகொள்ள சம்மதம் தெரிவித்துள்ளனர். தரை மேடை கடைகளை உடனடியாக அவர்கள் பயன்படுத்த அனுமதிக்கப்படுவர் என தெரிவித்தார்.