Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

காணொலிக் காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார் முதல்வர்

Print PDF

தினமணி              31.12.2013

காணொலிக் காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார் முதல்வர்

சேலம் மாநகராட்சி புதிய கட்டடத்துக்கு முதல்வர் ஜெயலலிதா, காணொலிக் காட்சி மூலம் திங்கள்கிழமை அடிக்கல் நாட்டினார்.

 சேலம் நகராட்சி கடந்த 1866-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. கடந்த 1979-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி சிறப்பு நிலை நகராட்சியாகவும், 1994-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 1-ஆம் தேதி மாநகராட்சியாகவும் தரம் உயர்த்தப்பட்டது. சேலம் நகராட்சி அலுவலகத்துக்காக கடந்த 147 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அலுவலகம் கட்டப்பட்டது.

 இப்போது அது மாநகராட்சி வளாகத்தில் சுகாதாரப் பிரிவு அலுவலகமாக செயல்படுகிறது. இதைத் தொடர்ந்து கடந்த 1958-ஆம் ஆண்டில் கூடுதல் கட்டடம் கட்டப்பட்டது. 1963-ஆம் ஆண்டில் நகராட்சியின் நூற்றாண்டு விழாவின்போது, ராஜாஜி பெயரில் இப்போது செயல்படும் மாமன்றக் கூடமும் கட்டப்பட்டன. இப்போது மேயர், ஆணையர் அலுவலகங்களாகச் செயல்படும் கட்டடம் கடந்த 2003-ஆம் ஆண்டில் கட்டப்பட்டது.

 சுமார் 2 லட்சமாக இருந்த நகராட்சியின் மக்கள் தொகை, மாநகராட்சியாக உயர்ந்த நிலையில் இப்போது, சுமார் 9 லட்சத்தை எட்டியுள்ளது. இதனால், நிர்வாக வசதிக்காக கூடுதல் கட்டடம் கட்ட வேண்டிய நிலை ஏற்பட்டது. இதுகுறித்து அரசுக்கு பரிந்துரை அனுப்பப்பட்ட நிலையில், ரூ.7.68 கோடியில் அடித்தளம், தரைத்தளம், 2 மாடிகளைக் கொண்ட ஒருங்கிணைந்த கட்டடம் கட்ட அரசு அனுமதி வழங்கியுள்ளது.

 மேலும், ஒப்பந்தப்புள்ளி நிறைவடைந்து ஆர்.ஆர்.துளசி கன்ஸ்ட்ரக்சன்ஸ் என்ற தனியார் நிறுவனத்துக்கு பணி ஆணையும் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, புதிய கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. தமிழக முதல்வர் ஜெயலலிதா காணொலிக் காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்.

 இதைத் தொடர்ந்து, மாநகராட்சி வளாகத்தில் திரண்டிருந்த மேயர் எஸ்.செüண்டப்பன், ஆணையர் மா.அசோகன், சேலம் எம்.பி. செம்மலை, எம்.எல்.ஏ. செல்வராஜ், மாநகராட்சி உறுப்பினர்கள், அதிகாரிகள் இனிப்பு வழங்கி, அடிக்கல் நாட்டு விழாவைக் கொண்டாடினர்.

 இந்த புதிய கட்டடம், தமிழக அரசின் உள்கட்டமைப்பு இடைநிரப்பு நிதி ரூ.5 கோடி, மாநகராட்சி பொது நிதி ரூ.2.68 கோடி ஆகியவற்றைக் கொண்டு கட்டப்படுகிறது. சுமார் 39,605 சதுர அடி பரப்பளவில், வாகன நிறுத்துமிடம், லிப்ட் போன்ற வசதிகளுடன் கட்டப்படுகிறது.

 இந்தக் கட்டடத்தில் மாமன்ற கூட்ட அறை, மேயர், ஆணையர் ஆகியோருக்கான அலுவலகம், பார்வையாளர்கள் அறை, தகவல் மையம், மாமன்ற உறுப்பினர்களின் ஓய்வு அறை, கருவூலம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்கள் இடம் பெற உள்ளதாகவும், கட்டுமானப் பணி 2 ஆண்டுகளில் நிறைவடையும் என்றும் மேயர் எஸ்.செüண்டப்பன் தெரிவித்தார்.