Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சி அலுவலகத்தில் ரூ.12.65 கோடியில் புதிய ‘மாமன்ற கூட்ட அரங்கு’

Print PDF

தினகரன்             02.01.2014

மாநகராட்சி அலுவலகத்தில் ரூ.12.65 கோடியில் புதிய ‘மாமன்ற கூட்ட அரங்கு’

கோவை, : கோவை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் ரூ.12.65 கோடி யில் புதிதாக ‘மாமன்ற கூட்ட அரங்கு‘ கட்டப்பட உள்ளது. இதற்கான பணியை விரைவில் துவக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் விக்டோரியா கூட்ட அரங்கு உள்ளது. இது, 1893ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது. இந்த கூட்ட அரங்கில்தான் மாநகராட்சி மாமன்ற கூட்டம் மாதம்தோறும் நடந்து வருகிறது. இது, மிகவும் பழமையானது.

இக்கட்டடத்தின் தரம், சிவில் இன்ஜினீயரிங் துறைக்கு சவால் விடும் அளவுக்கும், பிரமிப்பு ஊட்டுவதாகவும் உள்ளது. பழைய மாநகராட்சி எல்லைக்குள் மொத்தம் 72 வார்டுகள் மட்டுமே இருந்தன. அப்போது, இந்த கூட்ட அரங்கு போதுமானதாக இருந்தது. ஆனால், தற் போது, வார்டுகளின் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துவிட்டதால், மாதம்தோறும் இங்கு மாமன்ற கூட்டம் நடத்த இடம் போதுமானதாக இல்லை. இக்கூட்டத்தில் கலந்துகொள்ளும் கவுன்சிலர்கள், அதிகாரிகள், பத்திரிகையாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் அமர போதுமான இடவசதி இல்லை.

எனவே, புதிய மாமன்ற கூட்ட அரங்கு கட்ட கடந்த 2012-13ம் ஆண்டு மாநகராட்சி வரவு-செலவு திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

புராதன சின்னமாக விளங்கும் விக்டோரியா மன்றத்தை இடிக்காமல், மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்திலேயே ரூ.9.70 கோடியில் புதிதாக மாமன்ற கூட்ட அரங்கம் கட்டுவது என முடிவுசெய்யப்பட்டது.

இதற்காக, அனுமதி வேண்டி கடந்த 24.7.2013 அன்று தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டது. அரசு ஒப்புதல் கிடைத்துவிட்டது. இதையடுத்து, எஸ்.பி.எஸ்.அசோசியேட்ஸ் என்ற நிறுவனம் விரிவான திட்ட அறிக்கை (டி.பி.ஆர்) தயாரித்தது. அப்போது, பட்ஜெட் தொகை ரூ.12.65 கோடியாக உயர்ந்தது.

இதை, மாநகராட்சி பொது நிதியில் இருந்தே பெற்றுக்கொள்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது. தற்போது, கட்டட வரைபட அனுமதிக்காக நகரமைப்பு துறைக்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

மிக விரைவில் அனுமதி கிடைத்துவிடும், அதன்பிறகு டெண்டர் விடப்பட்டு, கட்டுமான பணிகள் மிக விரைவாக துவங்கும் என மேயர் செ.ம.வேலுசாமி அறிவித்துள்ளார்.