Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நகராட்சிப்பள்ளிகள் புதுப்பொலிவாகிறது : ·ரூ.2.25 கோடியில் பணிகள் தீவிரம்

Print PDF

தினமலர்                03.01.2014

நகராட்சிப்பள்ளிகள் புதுப்பொலிவாகிறது : ·ரூ.2.25 கோடியில் பணிகள் தீவிரம்

பொள்ளாச்சி : பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட பகுதியிலுள்ள பள்ளிகள் 2.25 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கும் பணிகள் நடைபெறுகிறது. பொள்ளாச்சி நகராட்சி பகுதிகளில், தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 17க்கும் மேற்பட்ட பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில், போதுமான அடிப்படை வசதிகள் இல்லாததால், மாணவர்கள் அவதிக்குள்ளாகி வருவதாகவும்; சுற்றுப்புற சுகாதாரம் பாதிக்கப்பட்டு வருவதாகவும் புகார்கள் தெரிவிக்கப்பட்டு வந்தன. பள்ளிகளில், போதிய வசதிகள் இல்லாத நிலையில், இரவு நேரங்களில், சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவருவதும்; சமூக விரோத செயல்கள் நடைபெறுவதுடன், பள்ளி வளாகத்திலுள்ள கட்டடங்கள் சேதப்படுத்துவது போன்ற சம்பவங்கள் நடந்து வருவதாகவும் பொதுமக்கள் தரப்பில், புகார் தெரிவிக்கப்பட்டது.

மேலும், ஏழை மற்றும் நடுத்தர வகுப்பை சேர்ந்த மாணவர்கள் பயிலும் பள்ளிகளில், அடிப்படை வசதிகள், போதிய கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இந்நிலையில், நகராட்சி சார்பில், பள்ளிகள் புதுப்பிக்கும் பணிகள் மேற்கொள்ள நகராட்சி நிர்வாகம் திட்டமிட்டது. இதனையடுத்து, 2.25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்றுவருகின்றன.

அதிக பழுதாகியுள்ள பள்ளிகளுக்கு 50 லட்சம் ரூபாய் செலவிலும், மற்ற பள்ளிகளுக்கு குறைந்த பட்சம் ரூ.5 லட்சம் முதல் 25 லட்சம் ரூபாய் வரை நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெறுகிறது.

முதற்கட்டமாக, சமத்தூர் ராமஅய்யங்கார் மேல்நிலைப்பள்ளி, கோட்டூர் ரோடு நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளில், தலா 50 லட்சம் ரூபாய் செலவிலும்; ஏ.பி.டி., ரோடு நடுநிலைப்பள்ளி மற்றும் வடுகபாளையம் நடுநிலைப்பள்ளிகளில், தலா 24 லட்சம் ரூபாய் செலவிலும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளதாகவும்; பாலகோபாலபுரம் நடுநிலைப்பள்ளியில், 14 லட்சம் ரூபாயிலும், பாலக்காடு ரோடு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், 24 லட்சம் ரூபாய் செலவிலும், மரப்பேட்டை வீதி நடுநிலைப்பள்ளியில், 50 லட்சம் ரூபாய் செலவிலும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

நகராட்சி அதிகாரிகள் கூறுகையில்," நகராட்சி பகுதியில் உள்ள பள்ளிகள் புதுப்பிக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. தமிழக முதல்வர் தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசுப்பள்ளிகளையும் தரம் உயர்த்த உத்தரவிட்டுள்ளார். அதன்படி, பள்ளிகள் புதுப்பிப்பு பணிகள் நடைபெறுகிறது. இப்பணிகள் வரும் மே மாதத்திற்குள் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. வரும் கல்வியாண்டில், பள்ளிகள் புதுப்பொலிவாக மாற்றப்படும்,' என்றனர்.