Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சேலத்தில் ரூ.1000 கோடியில் புதிய மேம்பாலங்கள் அமைச்சர் இடைப்பாடி பழனிசாமி தகவல்

Print PDF

தினத்தந்தி            04.01.2014  

சேலத்தில் ரூ.1000 கோடியில் புதிய மேம்பாலங்கள் அமைச்சர் இடைப்பாடி பழனிசாமி தகவல்

போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த சேலம் மாநகரில் ரூ.1,000 கோடியில் பல இடங்களில் புதிய மேம்பாலங்கள் கட்டப்பட உள்ளது என சேலத்தில் நேற்று நடந்த விழாவில் அமைச்சர் இடைப்பாடி பழனிசாமி கூறினார்.

ஆனந்தா பாலம்

சேலம் மாநகரில் முதல்அக்ரஹாரத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் திருமணிமுத்தாற்றின் குறுக்கே ஆக்ஸ்போர்டு-ஆனந்தா மேம்பாலம் கட்டப்பட்டு அதன் இணைப்பு சாலைகள் விரிவாக்க பணிகள் ரூ.1.40 கோடியில் அமைக்கப்பட்டுள்ளது.

இதேபோல், திருமணிமுத்தாற்றின் குறுக்கே குண்டுபோடும் தெரு மற்றும் திருச்சி மெயின்ரோடு சாலையினை இணைக்கும் வகையில் உயர்மட்ட மேம்பாலம் கட்டப்பட்டு ரூ. 87 லட்சத்தில் இணைப்பு சாலைகளின் பணிகளும் முடிக்கப்பட்டிருந்தது.

இணைப்பு சாலைகள் திறப்பு

இந்தநிலையில், திருமணிமுத்தாறு ஆனந்தா பாலம் இணைப்புசாலை மற்றும் குண்டுபோடும் தெரு பாலம் இணைப்புசாலை திறப்பு விழா நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு மாநகராட்சி மேயர் சவுண்டப்பன் தலைமை தாங்கினார். மாநகராட்சி ஆணையாளர் அசோகன் அனைவரையும் வரவேற்றார். மாவட்ட கலெக்டர் மகரபூஷணம், எம்.எல்.ஏ.க்கள் எம்.கே.செல்வராஜ், ஜி.வெங்கடாசலம், துணை மேயர் நடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் இடைப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு, குண்டுபோடும் தெருபாலம் மற்றும் ஆனந்தா பாலம் இணைப்பு சாலைகளை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறந்து வைத்து பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

திருமணிமுத்தாறு ஆனந்தா பாலம் கடந்த தி.மு.க.ஆட்சியில் பணிகள் தொடங்கப்பட்டது. இருப்பினும், பாலம் கட்டினால் மட்டும் போதுமா?. அதற்கு தேவையான இணைப்பு சாலைகளும் தேவை. அப்போது தான் பாலம் முழுவடிவம் பெறும்.

வாக்குறுதி நிறைவேற்றம்

தேர்தல் நேரத்தில் தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா, சேலத்தில் உள்ள ஆனந்தா பாலம் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவருவேன் என வாக்குறுதி அளித்தார். அதன்படி ரூ. 7 கோடிக்கு மேல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பல்வேறு பணிகள் நடந்தது. ஆனால் ஆனந்தா பாலத்தின் கட்டுமான பணிகள் நடைபெறும்போது பல்வேறு இடையூறுகள், பிரச்சினைகள் உருவானது. இருப்பினும் அனைத்து பிரச்சினைகளும் முடிவுக்கு கொண்டுவந்து தற்போது ஆனந்தா பாலம் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலம் முதல்-அமைச்சர் கூறிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சேலம் மாநகரம் வளர்ந்து வரும் நகரமாகும். இங்கு நாளுக்குநாள் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதை கருத்தில் கொண்டு சேலம் 5 ரோட்டில் இருந்து 4 ரோடு அருகேயுள்ள நேஷனல் ஓட்டல் வரையிலும் உயர்மட்ட மேம்பாலம் ரூ. 600 கோடியில் அமைக்கப்பட உள்ளது. இதேபோல், 5 ரோட்டில் இருந்து சாரதா கல்லூரி சாலை வரை உயர்மட்ட பாலமும், குரங்குசாவடி மற்றும் மணல்மேடு பகுதியில் ஒரு பாலமும், முள்ளுவாடி கேட் பகுதியில் 2 மேம்பாலமும், செவ்வாய்பேட்டையில் ஒரு மேம்பாலமும் கட்டப்பட உள்ளது.

52 கிலோ மீட்டருக்கு ரிங்ரோடு


குறிப்பாக சொல்லபோனால் சேலம் மாநகரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த ரூ. 1,000 கோடிக்கு பல்வேறு மேம்பாலங்கள் அமைக்கப்பட உள்ளது. இதுதவிர அரபிக்கல்லூரியில் ஆரம்பித்து அதே அரபிக்கல்லூரியில் இணையும் வகையில் சேலம் நகரை சுற்றிலும் 52 கிலோ மீட்டருக்கு ரிங்ரோடு அமைக்கப்பட உள்ளன. இந்த பணிகள் அனைத்தும் அ.தி.மு.க.ஆட்சியிலே தொடங்கப்படும் என்று தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழ்நாட்டில் மற்ற மாநகராட்சியில் இல்லாத வகையில் சேலம் மாநகர மக்களுக்கு தேவையான அனைத்து சாலை வசதிகளும் இங்கு ஏற்படுத்தப்படும். பொதுமக்களின் வசதிக்காக பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ள ஆனந்தா பாலத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு அமைச்சர் பேசினார்.

இதர திட்டப்பணிகள்

முன்னதாக 50-வது வார்டில் எஸ்.ஆர்.எம்.தோட்டம் பகுதியில் சீரமைக்கப்பட்ட கிணற்றிலிருந்து நீரேற்றி மேல்நிலை நீர்தேக்க தொட்டி மூலம் பொதுமக்களுக்கு தண்ணீர் வழங்கும் திட்டத்தையும், குகை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சீரமைக்கப்பட்ட கூடுதல் வகுப்பறைக் கட்டிடத்தையும் அமைச்சர் இடைப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

பங்கேற்றவர்கள்

இந்த நிகழ்ச்சியில், மண்டலக்குழு தலைவர்கள் மாதேஸ்வரன், ஜெயபிரகாஷ், சண்முகம், தியாகராஜன், சேலம் நகர கூட்டுறவு வங்கி தலைவர் துரைராஜ், செவ்வாய்பேட்டை நகர கூட்டுறவு வங்கி தலைவர் எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி மற்றும் மாநகராட்சி கவுன்சிலர்கள், கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.