Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கொங்கணாபுரத்தில் ரூ.90 லட்சத்தில் புதிய பேருந்து நிலையம்

Print PDF

தினமணி            13.01.2014

கொங்கணாபுரத்தில் ரூ.90 லட்சத்தில் புதிய பேருந்து நிலையம்

கொங்கணாபுரத்தில் ரூ.90 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள புதிய பேருந்து நிலையத்துக்கு மாநில அமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி ஞாயிற்றுக்கிழமை அடிக்கல் நாட்டினார்.

சேலம் மாவட்டம், எடப்பாடி வட்டம் கொங்கணாபுரத்தில் ரூ.90 லட்சம் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் க.மகரபூஷணம் தலைமை வகித்தார்.

பேருந்து நிலையம் கட்டும் பணியைத் தொடக்கிவைத்து அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசியது:

எடப்பாடி தொகுதிக்கு உள்பட்ட கொங்கணாபுரத்தில் ஏராளமான அரசுத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. பரமத்திவேலூர் பகுதியில் இருந்து ஓமலூர் வரை அமைக்கப்படும் நான்கு வழிச்சாலை கொங்கணாபுரம் வழியாகச் செயல்படுத்தவுள்ளது.

எடப்பாடி அரசுக் கல்லூரிக்கு கட்டங்கள் கட்ட ரூ.7.5 கோடி ஒதுக்கப்பட்டு ஒப்பந்தப்புள்ளி விடப்பட்டுள்ளது. அதற்கான அடிக்கல் நாட்டு விழா அடுத்த மாதம் நடைபெற உள்ளது என்றார் அவர்.

இந்த நிகழ்ச்சியில் சேலம் எம்.பி. எஸ். செம்மலை, மாவட்ட வருவாய் அலுவலர் செல்வராஜ், கொங்கணாபுரம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் கரட்டூர் கே.மணி, எடப்பாடி நகர்மன்றத் தலைவர் கதிரேசன், பேரூராட்சித் தலைவர் பழனிசாமி, பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் பழனியம்மாள், செயல் அலுவலர் நாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதில், பேரூராட்சி பகுதியில் குப்பைகளை அகற்ற ரூ.15 லட்சத்தில் புதிய டிப்பர் லாரியை அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். மேலும்,புதிதாகக் கட்டப்பட்ட இரண்டு சுகாதார வளாகங்களையும், புதிய வணிக வளாகத்தையும் அமைச்சர் திறந்து வைத்தார்.