Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பூந்தமல்லி அருகே கூவம் ஆற்றின் குறுக்கே ரூ.1 கோடியில் புதிய பாலம்: ஜெயலலிதா அறிவிப்பு

Print PDF

மாலை மலர்              23.01.2014

பூந்தமல்லி அருகே கூவம் ஆற்றின் குறுக்கே ரூ.1 கோடியில் புதிய பாலம்: ஜெயலலிதா அறிவிப்பு
 
பூந்தமல்லி அருகே கூவம் ஆற்றின் குறுக்கே ரூ.1 கோடியில் புதிய பாலம்: ஜெயலலிதா அறிவிப்பு

சென்னை, ஜன. 23 - தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:–

உணவு உற்பத்தியை அதிகரிப்பதற்கு இன்றியமையாதது நீர்ப்பாசன வசதியாகும். நீர்ப்பாசன வசதியினை மேம்படுத்தும் வகையில் நீர்ப்பாசன கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் தலைமையிலான அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டத்திலுள்ள 28 ஏரிகளுக்கு தண்ணீர் வழங்க பாலேகுளி ஏரியிலிருந்து புதிய கால்வாய் அமைக்கும் திட்டத்திற்கு 6 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கு நிர்வாக ஒப்புதல் வழங்கி ஏற்கெனவே முதல்– அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டார்..

இந்த புதிய கால்வாய் அமைக்கும் பணிகள் தற்பொழுது முடிவடையும் நிலையில் உள்ளன. தற்பொழுது அமைக்கப்பட்டு வரும் புதிய கால்வாய் திட்டத்தில் 28 ஏரிகளுக்கான தண்ணீர் வழங்கும் பணிகளில், 25 ஏரிகளுக்கு தண்ணீர் வழங்குவதற்கான பணிகள் முடிவுற்ற நிலையில், அந்த 25 ஏரிகளுக்கு, கிருஷ்ணகிரி அணைக்கு வரும் உபரி நீரை பாலேகுளி ஏரி வழியாக திறந்து விட்டு, இத்திட்டத்தினைப் பயன்பாட்டிற்குக் கொண்டு வருவதற்கு ஒப்புதல் வழங்கி முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இதன் மூலம் கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டத்திலுள்ள பாலேகுளி, நாகோஜன அள்ளி, வீர மலை, விளங்காமுடி, வெப்பாலம்பட்டி மற்றும் காட்டகரம் ஆகிய கிராமங்களில் உள்ள 334.60 ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

இதேபோன்று, கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டத்திலுள்ள விருப்பம்பட்டி ஏரியிலிருந்து அதன் கீழுள்ள 5 ஏரிகள் மற்றும் ஒரு குளம் பயன் பெற வழங்கு கால்வாய் அமைக்க 1 கோடியே 75 லட்சத்திற்கு நிர்வாக ஒப்புதல் வழங்கி ஏற்கெனவே முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.

இந்த வழங்கு கால்வாய் அமைக்கும் பணிகள் தற்பொழுது முடிவுற்ற நிலையில், விருப்பம்பட்டி ஏரியிலிருந்து அதன் கீழுள்ள மாலேத்தோட்டம் ஏரி, மூங்கன் ஏரி, ஒட்டுகல்லனூர் ஏரி, குட்டூர் ஏரி, திப்பம்பட்டி ஏரி ஆகிய 5 ஏரிகள் மற்றும் குளம் ஆகியவற்றிற்கு புதியதாக அமைக்கப்பட்ட வழங்கு கால்வாய் வழியாக தண்ணீர் வழங்குவதற்கும், அதன் மூலம் இப்புதிய திட்டத்தினை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கும் ஒப்புதல் வழங்கி முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இதன் மூலம், கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டத்திலுள்ள பாரண் டப்பள்ளி, அயலம்பட்டி, கரடனூர், ஓட்டு கல்லனூர், திப்பம்பட்டி மற்றும் பாலேத்தோட்டம் ஆகிய கிராமங்களில் உள்ள 83.76 ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி நகரத்தின் வழியே கொச்சியிலிருந்து தனுஷ்கோடி வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையும், தஞ்சாவூரிலிருந்து சாயல்குடி வரை செல்லும் மாநில நெடுஞ்சாலையும், செல்கின்றன. மேலும் இந்நகரத்தின் அருகில் உள்ள கிராமங்களில் வசிக்கும் மக்கள், தங்களின் அன்றாட தேவைகளுக்காக, பரமக்குடி வந்து செல்கின்றனர். இதனால் இந்த நகரம் அன்றாடம் போக்குவரத்து நெரிசலுக்கு உள்ளாகிறது.

இந்த நகரத்தின் போக்குவரத்து நெரிசலை பெருமளவு குறைத்திட, பரமக்குடி நகரை ஒட்டிச் செல்லும் வைகை ஆற்றின் வலது கரையில், சுமார் 3.60 கி.மீ நீளத்திற்கு, தேசிய நெடுஞ்சாலையின் தரத்திற்கு இணையாக, ஒரு துணை ஓடுபாதை ஏற்படுத்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இந்தச் சாலையை அமைக்க 6 கோடியே 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தும் முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இதன் மூலம் பரமக்குடி நகரத்தின் போக்குவரத்து நெரிசல் தவிர்க்கப்பட்டு, பயணிகள் இடையூறின்றி பயணம் செய்ய, இந்த துணை ஓடுபாதை பெரிதும் உதவிகரமாக இருக்கும்.

கூவம் ஆறு, கேசவபுரம் அணைக்கட்டில் ஆரம்பித்து 65 கிமீ பயணித்து கடலில் கலக்கிறது. இந்த ஆற்றின் வலது கரையோரம் திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி வட்டத்தில் சோரஞ்சேரி கிராமம் அமைந்துள்ளது. இந்த ஆற்றில் மழை வெள்ளப்பெருக்கு காலங்களில் அதிக அளவில் தண்ணீர் செல்லும்.

இதனால் இப்பகுதிகளில் வாழும் மக்கள் அருகிலுள்ள கிராமங்களுக்கு செல்வதற்கும், குழந்தைகள் பள்ளிகளுக்கு செல்வதற்கும், விவசாயிகள் தங்களது பொருட்களை வெளியூர்களுக்கு கொண்டு செல்வதற்கும் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள்.

இதனால் கூவம் ஆற்றின் குறுக்கே ஒரு பாலம் அமைக்க வேண்டும் என்று சோரஞ்சேரி கிராம மக்களிடமிருந்து கோரிக்கை வரப்பெற்றது. இதனை பரிசீலித்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா சோரஞ்சேரி கிராம மக்கள் பயன் பெறும் வகையில், கூவம் ஆற்றின் குறுக்கே பாலம் கட்டுவதற்கு உத்தரவிட்டுள்ளார்.

இப்பாலம் அமைப்பதற்காக 1 கோடியே 20 லட்சம் ரூபாய்க்கு நிர்வாக ஒப்புதல் வழங்கியும் முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இதன் மூலம், கூவம் ஆற்றின் இருகரைகளும் இணைக்கப் பெற்று மக்கள் எளிதில் ஆற்றை கடந்து செல்வதற்கு வழிவகை ஏற்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.