Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குடியாத்தம் நகராட்சி மயானத்தில் நவீன எரிவாயு தகன மேடை

Print PDF

தினமணி             21.01.2014 

குடியாத்தம் நகராட்சி மயானத்தில் நவீன எரிவாயு தகன மேடை

குடியாத்தம் நகராட்சி சார்பில், சுண்ணாம்புபேட்டை மயானத்தில் அமைக்கப்பட்டுள்ள நவீன எரிவாயு தகன மேடையில் திங்கள்கிழமை சோதனை நடத்தப்பட்டது.

 தமிழக அரசின் கட்டமைப்பு இடை நிரப்புதல் திட்டத்தின்கீழ் ரூ.60 லட்சத்தில், இங்கு நவீன எரிவாயு தகன மேடை அமைக்கப்பட்டுள்ளது. சோதனை நிகழ்ச்சியாக அரசு மருத்துவமனையில் சில நாள்களாக வைக்கப்பட்டிருந்த ஒரு அனாதை ஆணின் சடலம் எரிக்கப்பட்டது.

சோதனையின்போது, நகர்மன்றத் தலைவர் அமுதா சிவப்பிரகாசம், நகராட்சி ஆணையர் (பொறுப்பு) ஜி. உமாமகேஸ்வரி, அதிமுக நகரச் செயலர் ஜே.கே.என். பழனி, நகர்மன்ற உறுப்பினர் வசந்தா ஆறுமுகம், முன்னாள் உறுப்பினர் வி.இ. கருணா, நகர்நல அலுவலர் நளினாதேவி, சுகாதார ஆய்வாளர் பிரகாஷ் உள்ளிட்டோர் இருந்தனர்.

 இதன் செயல்பாடு குறித்து, அதை அமைத்த குட் கேர் என்விரோ சிஸ்டம் நிறுவனத்தின் பொறியாளர் ரமேஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இங்கு அமைக்கப்பட்டுள்ள இயந்திரத்தின் ஒரு பகுதியில் விறகு கட்டைகளை சிறுசிறு துண்டுகளாக்கி வைத்து எரிக்கப்படும். அந்த நெருப்பிலிருந்து ஆக்சிஜன், கார்பன் டை ஆக்சைடு, கார்பன் மோனாக்சைடு, நைட்ரஜன், மீத்தேன் ஆகிய வாயுக்கள் உருவாகும்.

 அதில் கார்பன் டை ஆக்சைடு, கார்பன் மோனாக்சைடை பிரித்தெடுத்து விட்டு, மற்ற வாயுக்களை ஜுவாலையாக்கி குழாய்கள் மூலம் சடலத்தின் மீது செலுத்தினால் அது அரை மணி நேரத்தில் சாம்பலாகி விடும்.

இந்த செயல்பாட்டின்போது, ஏற்படும் புகை சுற்றுச் சூழலை பாதிக்காத வகையில் சுத்திகரிக்கப்பட்டு வெளியேற்றப்படுகிறது என்றார்.

தகன மேடையின் செயல்பாடு குறித்து நகர்மன்றத் தலைவர் அமுதாசிவப்பிரகாசம் கூறியது: இந்த தகன மேடை நகர்மன்றத்தின் ஒப்புதல் பெற்று, ஏதாவது ஒரு தொண்டு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும். அந்த நிறுவனம் தகன மேடையின் செயல்பாட்டை நிர்வகிக்கும். இந்த தகன மேடையின் நிர்வாகச் செலவுகளுக்கேற்ப சடலத்தை எரிக்க கட்டணம் நிர்ணயிக்கப்படும் என்றார்.