Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ரூ.4.03 கோடியில் ஆறு நடை மேம்பாலங்கள்: மாநகராட்சி திட்டத்துக்கு தமிழக அரசு ஒப்புதல்

Print PDF
தினமலர்              23.01.2014

ரூ.4.03 கோடியில் ஆறு நடை மேம்பாலங்கள்: மாநகராட்சி திட்டத்துக்கு தமிழக அரசு ஒப்புதல்


திருப்பூர் : திருப்பூர் மாநகராட்சி பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு, பாதசாரிகள் பயன்படுத்தும் வகையில், 4.03 கோடி ரூபாய் மதிப்பீட்டில், ஆறு இடங்களில் நடை மேம்பாலம் அமைக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.திருப்பூர் மாநகராட்சியின் மைய பகுதிகளில், லட்சக்கணக்கான வாகனங்கள் சென்று வருவதாலும், மிக குறுகிய ரோடுகளாக இருப்பதாலும், போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. காமராஜர் ரோடு, பழைய பஸ் ஸ்டாண்ட், மாநகராட்சி ரோடு, குமரன் ரோடு, டவுன்ஹால் சந்திப்பு உள்ளிட்ட இடங்களில் அதிகப்படியான நெரிசல் உருவாகிறது. குறிப்பாக, காலை மற்றும் மாலை நேரங்களில், போக்குவரத்து போலீசாரே திணறும் அளவுக்கு நெரிசல் ஏற்படுகிறது.

நாளுக்கு நாள் அதிகரிக்கும் நெரிசலை கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பு, மாநகராட்சிக்கு முக்கிய பணியாக றியுள்ளது. அதிக நெரிசல் ஏற்படும் ஆறு இடங்களில், 4.03 கோடி ரூபாய் மதிப்பீட்டில், நடை மேம்பாலங்கள் அமைக்க, அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டது. தற்போது, அனுமதி வழங்கப்பட்டதை தொடர்ந்து, ஆயத்த பணியை துவக்க, மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

மாநகராட்சி கமிஷனர் செல்வராஜ் கூறியதாவது:

மாநகராட்சி அலுவலக ரோடு - மங்கலம் ரோடு சந்திப்பில் 89 லட்சம் ரூபாய்; ரயில்வே ஸ்டேஷன் - டவுன்ஹால் சந்திப்பில் 70 லட்சம்; ரயில்வே ஸ்டேஷன் - புஷ்பா தியேட்டர் சந்திப்பு பகுதியில் 43 லட்சம்; குமார் நகர் - அவிநாசி ரோடு சந்திப்பில் 58 லட்சம்; தாராபுரம் ரோடு - காங்கயம் ரோடு சந்திப்பில் ஒரு கோடி ரூபாய்; ராக்கியாபாளையம் பிரிவு - காங்கயம் ரோடு சந்திப்பு பகுதியில் 43 லட்சம் ரூபாய் என மொத்தம் 4.03 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடை மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இத்திட்டத்துக்கு அரசு தரப்பில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. உள்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகள் திட்டத்தில், இத்திட்ட பணிகளுக்கான தொகை மானியமாக பெறப்படும். பாலம் வடிவமைப்புடன் திட்ட மதிப்பீடு அனுப்பி, தொழில்நுட்ப அனுமதி, நிர்வாக அனுமதி பெறப்படும். அதன்பின், டெண்டர் கோரப்பட்டு, பணிகள் துவக்கப்படும்.

இரும்பு ஆங்கிள் மற்றும் கான்கிரீட் பலகை மூலமாக நடை மேம்பாலம் அமைக்கப்படும். இவ்வாறு, கமிஷனர் செல்வராஜ் கூறினார்.