Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

திடக் கழிவுகளை அகற்ற ரூ. 1.26 கோடியில் வாகனங்களை வாங்கியது மாநகராட்சி

Print PDF

தினமணி 2.11.2009

திடக் கழிவுகளை அகற்ற ரூ. 1.26 கோடியில் வாகனங்களை வாங்கியது மாநகராட்சி

திருச்சி, நவ. 1: திருச்சி மாநகராட்சிப் பகுதியில் தேங்கும் திடக் கழிவுகளை அகற்ற, ரூ. 1.26 கோடியில் வாகனங்களை மாநகராட்சி நிர்வாகம் வாங்கியது.

மாநகராட்சி அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உள்ளாட்சி தின விழாவில், இந்த வாகனங்களுக்கான சாவிகளை ஓட்டுநர்களிடம் மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என். நேரு வழங்கினார்.

திருச்சி மாநகராட்சியில் 12-வது நிதிக்குழு பரிந்துரைப்படி, திடக் கழிவு மேலாண்மை பணிக்கென ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதியிலிருந்து ரூ. 1.26 கோடியில் 8 கன மீட்டர் கொள்ளளவு கொண்ட 30 கன்டெய்னர்கள், 6 டம்பர் பிளேசர் வாகனங்களை மாநகராட்சி நிர்வாகம் வாங்கியுள்ளது.

இந்த வாகனங்கள் மூலம் குப்பைகள் அகற்றுவதால் மூன்றில் ஒரு பங்கு நேரம் குறையும். மேலும், மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் உடனுக்குடன் குப்பைகளை அகற்ற இந்த வாகனங்கள் பயன்படும்.

ரூ. 14 லட்சம் செலவில் புதிய வாகனம்: திருச்சி மாநகராட்சியில் குடிநீர் விநியோக பகிர்மானக் குழாய்களில் ஏற்படும் கசிவுகளைக் கண்டறிந்து பழுதை அகற்றும் பணிக்காக, ரூ. 14 லட்சம் செலவில் புதிதாக வாங்கப்பட்ட மிதரக வாகனத்துக்கான சாவியையும் ஓட்டுநரிடம் அமைச்சர் நேரு வழங்கினார்.

இந்த வாகனத்தில் உள்ள கருவிகள் மூலம் நிலத்தடியில் 5 மீட்டர் வரை பதிக்கப்பட்டுள்ள பகிர்மான குழாயில் ஏற்படும் கசிவினை கண்டறிய முடியும். குடிநீர் கசிவு ஏற்பட்டுள்ள இடத்தில் குடிநீரின் தன்மையை கண்டறிந்து சரிசெய்ய முடியும்.

பரிசுகள் அளிப்பு: தொடர்ந்து, உள்ளாட்சி தினத்தையொட்டி நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு அமைச்சர் கே.என். நேரு பரிசுகளை வழங்கினார். நிகழ்ச்சியில், மேயர் எஸ். சுஜாதா, சட்டப்பேரவை உறுப்பினர்கள் அன்பில் பெரியசாமி, கே.என். சேகரன், மாநகராட்சி ஆணையர் த.தி. பால்சாமி, துணை மேயர் மு. அன்பழகன், மாவட்ட வருவாய் அதிகாரி வெ. தட்சணாமூர்த்தி, கோட்டத் தலைவர்கள் அறிவுடைநம்பி, பாலமுருகன், ஜெரோம் ஆரோக்கியராஜ், . குமரேசன், நகரப் பொறியாளர் எஸ். ராஜா முகமது, நிர்வாகப்பொறியாளர்கள் ஆர். சந்திரன், எஸ். அருணாச்சலம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.