Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை: ஆட்சியர், எம்.பி. நேரில் ஆய்வு

Print PDF

தினமணி 17.11.2009

மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை: ஆட்சியர், எம்.பி. நேரில் ஆய்வு

ராமநாதபுரம், நவ. 16: ராமநாதபுரம் நகரில் மழைநீர் தேங்காமல் இருக்க மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் த.. ஹரிஹரன், ஜெ.கே.ரித்தீஸ் எம்.பி. மற்றும் அதிகாரிகள் திங்கள்கிழமை நேரில் ஆய்வு செய்தனர் (படம்).

தொடர்மழை காரணமாக நகரில் பல இடங்களில் மழை நீர் சூழந்துள்ளது. தங்கப்பா நகர், மருதுபாண்டியர் நகர், ஜீவா நகர், நேரு நகர் 9 மற்றும் 10 வது தெரு, நாகநாதபுரம், பாரதி நகர் ஆகிய பகுதிகளில் மழை நீர் தேங்கி வீடுகளையும் சூழந்துள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியில் வரமுடியாத நிலை இருந்து வருகிறது.

நகரில் ரயில்வே கேட் அருகில் செயல்படும் துணை மின் நிலைய வளாகத்தில் மழை நீர் சூழ்ந்துள்ளதால் 42 கிராமங்களில் மின் தடை ஏற்படும் அபாயம் உள்ளது.

இந்நிலையில் நகரில் தேங்கும் மழை நீரை உடனுக்குடன் வெளியேற்ற மாவட்ட ஆட்சியர், எம்.பி. ஆகியோர் தலைமையில் நகராட்சி ஆணையாளர் முஜிபுர் ரகுமான், வருவாய் கோட்டாட்சியர் து.இளங்கோ, வட்டாட்சியர் இந்திரஜித், நகராட்சி பொறியாளர் கருப்புச்சாமி, பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளர்கள் நாகரெத்தினம், குருதி வேல்மாறன் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.

பாம்பூரணியில் சேரும் மழைநீர் நிரம்பி ஊருக்குள் வருவதை தடுக்க குழாய்கள் பதித்து அதன் வழியாக மழைநீரை சக்கரக்கோட்டை கால்வாய்ப் பகுதிக்கு அனுப்பும் பணியையும் அவர்கள் பார்வையிட்டனர்.

நேரு நகர் 9 மற்றும் 10 வது தெருவில் தேங்கி நிற்கும் மழை நீரை சோத்தூரணியில் விடுவது குறித்தும் ஆய்வு செய்தனர்.

மழை நீர் மேலும் தேங்கி நிற்காமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு எம்.பி.யும் ஆட்சியரும் அதிகாரிகளை கேட்டுக் கொண்டனர்.

Last Updated on Tuesday, 17 November 2009 07:17