Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கோவை மாநகரப் பகுதிக்கு ரூ.112 கோடிக்கு கட்டமைப்பு வசதிகள்

Print PDF

தினமணி 22.12.2009

கோவை மாநகரப் பகுதிக்கு ரூ.112 கோடிக்கு கட்டமைப்பு வசதிகள்

கோவை, டிச.21: உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி கோவை மாநகரப் பகுதியில் ரூ.112.58 கோடியில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும் என்று மாவட்ட ஆட்சியர் பி.உமாநாத் தெரிவித்தார்.

மாநாட்டையொட்டி அமைக்கப்பட்டுள்ள கோவை மாநகர மேம்பாட்டுக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குழுவின் தலைவரும், மேயருமான ஆர்.வெங்கடாசலம் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. ஆட்சியர் உமாநாத், மாநகராட்சி ஆணையர் அன்சுல் மிஸ்ரா, துணை மேயர் நா.கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சாலை, குடிநீர், தெருவிளக்கு, சுகாதார வசதிகள் விரைவில் செய்து முடிக்கப்படும். திட்டச் சாலைகளை மக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டு வர உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். மாநகரை அழகுபடுத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாநகராட்சி மேற்கொள்ளும் என்று மேயர் வெங்கடாசலம் தெரிவித்தார்.

கோவை மாநகரப் பகுதியில் ரூ.112.58 கோடியில் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட உள்ளன. கோவை மாநகராட்சி, தன்னார்வ நிறுவனங்கள், தமிழக அரசின் நிதி என 3 பகுதியாக திட்டம் நிறைவேற்றப்படும். சாலை, தெருவிளக்கு,

குடிநீர் வசதிகளுக்கான திட்டங்கள் இதில் அடங்கும். கொடிசியா தொழிற்காட்சி

வளாகத்தில் இருந்து தண்ணீர்பந்தல், விளாங்குறிச்சி வழியாக சத்தி சாலையை அடையும் வகையில் ரூ.1.5 கோடியில் புதிய சாலை அமைக்கப்படும். திட்டங்கள் அனைத்துக்கும் டெண்டர் விடும் பணிகளை மாநகராட்சியினர் துரிதப்படுத்த வேண்டும். சிறப்பாகச் செயல்படக் கூடிய ஒப்பந்ததாரர்கள் மூலமாக பணிகள் தரமாக அமைவதை உறுதி செய்ய வேண்டும் என ஆட்சியர் உமாநாத் கேட்டுக் கொண்டார்.

கோவை மாநகராட்சி நிதியில் இருந்து ரூ.24 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று மாநகராட்சி ஆணையர் அன்சுல் மிஸ்ரா தெரிவித்தார். மேலும் மாநகரப் பகுதியில் மேற்கொள்ள வேண்டிய கட்டமைப்பு வசதிகளுக்காக ரூ.33 கோடி நிதி கோரி தமிழக அரசுக்கு கருத்துரு அனுப்பியுள்ளோம் என்றும் கூறினார்.

மாநகராட்சி அலுவலகங்கள், பள்ளிக் கட்டடங்கள், பூங்கா உள்ளிட்டவை அழகுபடுத்தப்படும். தெருவிளக்கு வசதி, உயர்கோபுர மின்விளக்குகள் கூடுதலாக அமைக்கப்படும். மேலும் நகரை அழகூட்டுவதற்குத் தேவையான அனைத்துப் பணிகளும் மேற்கொள்ளப்படும் என்று ஆணையர் அன்சுல் மிஸ்ரா தெரிவித்தார்.

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி கோவை அவிநாசி சாலையில் அண்ணா சிலை சந்திப்பில் இருந்து கொடிசியா தொழிற்காட்சி வளாகம் வரை சாலையின் இரு ஓரங்களிலும் மாநகராட்சி சார்பில் நடைபாதை அமைக்கப்படுகிறது. நடுப்புறச் சாலைத் தடுப்பில் அலங்கார கோபுர விளக்குகள் அமைக்கப்பட உள்ளன. நவஇந்தியா சாலை, ரங்கவிலாஸ் மில் சாலை, மசக்காளிபாளையம் சாலை ஆகிய திட்டச் சாலைகள் மேம்படுத்தப்பட உள்ளன.

மாநாட்டு ஒருங்கிணைப்பு அலுவலர் எஸ்.பிரபாகரன், குடிநீர் வடிகால் வாரிய தலைமைப் பொறியாளர் ரவிச்சந்திரன் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.