Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மக்களின் அவதிக்கு ரூ.30 லட்சத்தில் தீர்வு : சுரங்கப்பாதையை சீரமைக்க நடவடிக்கை

Print PDF

தினமலர் 21.01.2010

மக்களின் அவதிக்கு ரூ.30 லட்சத்தில் தீர்வு : சுரங்கப்பாதையை சீரமைக்க நடவடிக்கை

கோவை : கோவை நகரிலுள்ள அவினாசி ரோடு மேம்பாலத்தின் சுரங்கப்பாதையில் 30 லட்சம் ரூபாய் மதிப்பில் கான்கிரீட் ரோடு, மின் விளக்குகள் அமைக்கப்படவுள்ளன.அவினாசி ரோடு மேம்பாலம் மீது ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க, பாலத்தின் மேல் நான்கு சக்கர வாகனங்களை மட்டுமே அனுமதிக்கும் முறையை கடந்த ஆண்டில் போலீசார் அமல்படுத்தினர். மேலும், டூ வீலர்கள் அனைத்தும் பாலத்தின் கீழ் சுரங்கப்பாதையில் திருப்பிவிடப்பட்டன.

இதனால், பாலத்தின் மேல் வாகன நெரிசல் குறைந்தது; அதே வேளையில் சுரங்கப்பாதையில் அதிகளவு வாகனங்கள் செல்வதால் நெரிசல் ஏற்பட்டு மக்கள் அவதிக்குள்ளாகின்றனர். இந்த சுரங்கப்பாதையில், புரூக்பாண்ட் ரோட்டுக்கு செல்லும் பாதை மற்றும் பாலத்தின் நடுவில் 24 மணி நேரமும் சாக்கடை கழிவு வழிந்தோடுகிறது.

கழிவு நீர் வடிந்து செல்ல, சிறு கால்வாய்கள் அமைக்கப்பட்டு இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. டூ வீலர்கள் இதை கடக்கும் போது, ஒவ்வொரு முறையும் அந்த இரும்பு தடுப்பு கழிவு நீரில் அமிழ்ந்து மக்கள் மீது கழிவு தெறிக்கிறது.அதே போன்று, எதிரும் புதிருமாக வரும் டூ வீலர்களால் அடிக்கடி முட்டல், மோதலும் நடக்கிறது.
சுரங்கப்பாதையில் இரவில் போதிய வெளிச்சமும் இல்லாததால் விபத்தும் அடிக்கடி நடக்கிறது. இந்த பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும் என பல தரப்பிலும் கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது.

மாவட்ட சாலை பாதுகாப்பு குழு கூட்டங்களில், "கோயம்புத்தூர் கன்ஸ்யூமர் காஸ்' அமைப்பின் செயலர் கதிர்மதியோன் பல முறை புகார் தெரிவித்துள்ளார். கடந்த மாதம் நடந்த கூட்டத்திலும் இதுபற்றி விவாதம் வந்தது. அப்போது, இப்பிரச்னைக்கு தீர்வு காண, திட்டம் தயாரிக்கப்பட்டிருப்பதாக மாநகராட்சி அதிகாரிகள் கூறினர்.அதன்படி, 30 லட்சம் ரூபாய்க்கு மதிப்பீடு தயாரிக்கப்பட்டு பணிகளைத் துவக்க பூஜை போடப்பட்டது. இத்தொகையில், புரூக்பாண்ட் ரோட்டுக்கு சென்று வரும் இரு வழிப்பாதைகளிலும் கான்கிரீட் ரோடு போட முடிவு செய்யப்பட்டுள்ளது.

இரு வழிகளிலும் கழிவு நீர் வழிவதை முற்றிலுமாக தடுக்கும் வகையில், கழிவு நீர் கசியும் இடங்களிலும் கான்கிரீட் போடப்படுகிறது.மேலும், தெருவிளக்குகளும் அமைக்கப்படவுள்ளன. காளீஸ்வரா மில் ரோட்டிலுள்ள கீழ் பாலத்தையும் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் வகையில், புதிய திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

அங்கு பெரும்பாலான நாட்களில் கழிவு நீர் மற்றும் மழை நீர் தேங்கி இருப்பதால், அந்த சுரங்கப்பாதையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. அங்கு தண்ணீர் தேங்கினால், தண்ணீரை உடனடியாக வெளியேற்றும் வகையில் தானியங்கி மோட்டார் வைக்கப்படவுள்ளது.சுரங்கப்பாதை சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளும் அதே நேரத்தில் நெரிசல் தவிர்க்க, புரூக்பாண்ட் ரோட்டிலிருந்து வரும் டூ வீலர்களை மட்டும் மேம்பாலம் மீது செல்ல அனுமதிக்கப்பட வேண்டும் என, மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Last Updated on Thursday, 21 January 2010 07:43