Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பட்டு வாரியம்-எலக்ட்ரானிக் சிட்டி இடையே ரூ.880 கோடியில் கட்டப்பட்டுள்ள மேம்பாலம் இன்று திறப்பு

Print PDF

தினமணி 22.01.2010

பட்டு வாரியம்-எலக்ட்ரானிக் சிட்டி இடையே ரூ.880 கோடியில் கட்டப்பட்டுள்ள மேம்பாலம் இன்று திறப்பு

பெங்களூர், ஜன.21: பெங்களூர் மடிவாளா பட்டு வாரிய சந்திப்பு -எலக்ட்ரானிக் சிட்டி இடையே ரூ.880 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 9.5 கி.மீ. தூர விரைவு மேம்பாலம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக வெள்ளிக்கிழமை திறக்கப்படுகிறது.

நகரில் இருந்து தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், தொழிற்சாலைகள் அதிகம் உள்ள எலக்ட்ரானிக் சிட்டிக்கு காலை, மாலை நேரங்களில் ஒசூர் சாலையில் செல்ல ஒரு மணி நேரத்திற்கும் அதிகமாக ஆகிறது.

ரயிலில் சென்றால் இந்த ஒரு மணி நேரத்தில் பெங்களூரிலிருந்து ஒசூருக்கே சென்றுவிடலாம். அந்த அளவுக்கு இந்தச் சாலையில் தினமும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இந்த சாலையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில் மடிவாளா பொம்மனஹள்ளி அருகே உள்ள பட்டு வளர்ச்சி வாரிய சந்திப்பில் இருந்து எலக்ட்ரானிக் சிட்டி வரை 9.5 கி.மீ. தூரம் நான்கு வழிச்சாலை கொண்ட அதிவிரைவு மேம்பாலம் கட்ட அரசு முடிவெடுத்தது.

இந்த மேம்பாலம் கட்டும் பணி 2006-ம் ஆண்டில் துவங்கியது. 2008-ல் முடிய வேண்டிய இப்பணி 15 மாத கால தாமதத்திற்கு பிறகு ஜனவரியில் முடிவடைந்துள்ளது.

நாட்டிலேயே மிக நீளமான 2-வது மேம்பாலமாக இது பெயர்பெற்றுள்ளது. இதை பெங்களூர் எலிவேட்டட் டோல்வே நிறுவனம் கட்டியுள்ளது.

இந்த பாலத்தின் வழியாக நான்கு சக்கர வாகனங்களில் பயணம் செய்தால் 15 நிமிடங்களில் எலக்ட்ரானிக் சிட்டிக்கு சென்றுவிடலாம்.

கீழ்ப்பகுதியில் உள்ள சாலையில் ஏற்படும் வாகன நெரிசல் கணிசமாகக் குறையும். இந்த பாலத்தை மத்திய தரைவழிப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் கமல்நாத் வெள்ளிக்கிழமை திறந்து வைக்க உள்ளார்.

சிறிது காலம் மட்டும் இந்த மேம்பாலத்தில் இலவசமாக பயணிக்கலாம். பாலத்தை பயன்படுத்த பயன்பாட்டு கட்டணம் செலுத்தும் முறை விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது.

ஒருமுறை பயன்படுத்தும் இருசக்கர வாகனத்திற்கு 10 ரூபாயும் அதற்குமேல் பயன்படுத்தினால் ரூ.20-ம் கட்டணமாக வசூலிக்கப்படும். கார், ஜீப், வேன் போன்றவை ரூ.30-ம், இலகு ரக வாகனங்கள் ரூ.40-ம், சரக்கு வாகனங்கள், பஸ்கள், ரூ.85-ம் கட்டணமாக செலுத்த வேண்டும் என்று தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த மேம்பாலத்தால் ஒசூர் சாலையில் போக்குவரத்து நெரிசல் குறையும்.

இந்த பாலத்தில் அதிவேகமாக வாகனங்களை ஓட்டக்கூடாது. இன்டர்செப்டார் வாகனங்கள், நவீன கண்காணிப்புக் கேமராக்கள் மூலம் வாகனங்களின் வேகம் கண்காணிக்கப்படும்.

போக்குவரத்து போலீஸôரும் இப்பணியில் ஈடுபடுவார்கள் என்று நகர காவல் துறை (போக்குவரத்து) கூடுதல் ஆணையர் பிரவீன் சூட் தெரிவித்தார்.

Last Updated on Friday, 22 January 2010 11:04