Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.24,000 கோடி மூலதனம் தேவை

Print PDF

தினமணி 28.01.2010

நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.24,000 கோடி மூலதனம் தேவை

காரைக்கால், ஜன. 27: நாட்டின் உள்கட்டமைப்பை அதிகரிக்க உள்நாடு, வெளிநாட்டினரிடமிருந்து ரூ.24,000 கோடி மூலதனத்தை எதிர்பார்த்து அதற்கான பணிகளில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது என்றார் மத்திய இணையமைச்சர் வி. நாராயணசாமி.

÷காரைக்காலில் ரூ.1,200 கோடியில் அமைக்கப்பட்டு வரும் தனியார் கப்பல் துறைமுகத்தில், முதல் கட்டமாக 2 கப்பல்கள் வந்து நிற்கும் வகையிலான பகுதி செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

÷அதேபோல, நாகூலிருந்து காரைக்கால் வரையில் அகல ரயில் பாதைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில், நாகூரிலிருந்து துறைமுகம் வரை பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

÷இதையடுத்து, நாகூர்- துறைமுகம் இடையே சரக்கு ரயில் சேவையைத் தொடங்க முடிவு செய்யப்பட்டு, அதற்கான தொடக்க நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், ரயில் போக்குவரத்தை கொடியசைத்துத் தொடக்கிவைத்து, மத்திய திட்டம் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் வி.நாராயணசாமி பேசியது:

÷காரைக்காலில் அமைக்கப்பட்டுவரும் துறைமுகம் மூலம் அடுத்த 3 ஆண்டுகளில் 1 லட்சம் பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு கிடைக்கவுள்ளது. சென்னை, தூத்துக்குடி துறைமுகங்களுக்கு அடுத்தபடியாக காரைக்கால் துறைமுகம் வளரும் வகையில் இங்கு அதிக முதலீடு செய்யப்படுகிறது.

÷நாட்டில் பல்வேறு வகைகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வெளிநாட்டினர், உள்நாட்டினரிடமிருந்து ரூ.23,92,000 கோடியை எதிர்பார்க்கிறோம். அதற்கான வேலைகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.

÷காரைக்காலில் அமையவுள்ள தேசிய தொழில்நுட்ப நிறுவனத்துக்காக ரூ.320 கோடியை மத்திய அரசு முதலீடு செய்யவுள்ளது. இதன் மூலம் இன்னொரு புதிய நகரம் இங்கு உருவாகும்.

÷தேர்தலின் போது அளித்த வாக்குறுதியின்படி அடுத்த 4 மாதங்களில் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்கப்படும். ரூ.1-க்கு மாணவர்கள் பஸ்ஸில் செல்லும் திட்டம் அடுத்த சில நாள்களில் காரைக்காலில் தொடங்கப்படும் என்றார் நாராயணசாமி.

÷புதுச்சேரி துணை நிலை ஆளுநர் இக்பால்சிங் பேசியது: சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத வகையில் துறைமுகத்தின் செயல்பாடு இருக்க வேண்டும். உலக வெப்பமயமாதலுக்கு நிலக்கரியும், சிமென்டும் ஒரு காரணம். எனவே, துறைமுகத்தில் இவைகளைக் கையாளும் போது அதிக கவனம் தேவை. துறைமுகத்தின் 2-ம் கட்டப் பணி நிறைவடைந்தால், மேலும் 2 கப்பல்கள் இங்கு வந்து நிற்க முடியும். இதன் மூலம் 2.10 கோடி மெட்ரிக் டன் நிலக்கரி இறக்குமதி செய்து உள்நாட்டு தேவைகளுக்கு அனுப்ப முடியும். துறைமுகத்தின் மூலம் காரைக்கால் தொழில் துறை, சுற்றுலா உள்ளிட்டவை வளரும் என்றார் ஆளுநர் இக்பால்சிங்.

÷புதுச்சேரி முதல்வர் வி.வைத்திலிங்கம், புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் இ. வல்சராஜ், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ஏ.எம்.எச். நாஜிம், சட்டப்பேரவை உறுப்பினர் வி.எம்.சி. சிவக்குமார் ஆகியோர் பேசினர்.

÷சட்டப்பேரவை உறுப்பினர்கள் அ.மாரிமுத்து, பி.ஆர்.சிவா, திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் எஸ்.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

÷முன்னதாக மார்க் நிறுவனத் தலைவர் ஜி.ஆர்.கே. ரெட்டி வரவேற்றார். காரைக்கால் துறைமுக அதிகாரி ஆச்சாரியலு நன்றி கூறினார்.

÷முதல் கட்டமாக அரியலூர் பகுதி ஈச்சங்காடு பகுதிக்கு 3800 டன் நிலக்கரி ரயில் மூலம் அனுப்பிவைக்கப்பட்டது.

Last Updated on Thursday, 28 January 2010 10:23