Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பாதாள சாக்கடை பணிகள் ஓராண்டில் நிறைவு பெறும் நகராட்சி தலைவர் தகவல்

Print PDF

தினமலர் 22.02.2010

பாதாள சாக்கடை பணிகள் ஓராண்டில் நிறைவு பெறும் நகராட்சி தலைவர் தகவல்

பெரம்பலூர்:பெரம்பலூரில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் இன்னும் ஓராண்டில் நிறைவுபெற்று பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என்று நகராட்சி தலைவர் ராஜா கூறினார்.பெரம்பலூரில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் முடிவடைந்த வார்டுகளில் நடைபெற்று வரும் தார்ச்சாலை பணிகளை நகராட்சி தலைவர் ராஜா நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார். 6வது வார்டில் நடைபெற்று வரும் தார்ச்சாலை பணிகளை பார்வையிட்ட பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது, பெரம்பலூர் நகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து வார்டுகளிலும் ரூ.28.5கோடி செலவில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதில் அனைத்து இடங்களிலும் சாலைகளின் நடுவே பைப் பதித்து மேன்ஹோல்கள் கட்டப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்ட பாதாள சாக்கடை திட்டப்பணிகள் வெகு வேகமாக நடந்து வருகிறது. இந்த பணிகள் இன்னும் 6 மாதங்களில் முடிந்துவிடும். அதன் பின்னர் பாதாள சாக்கடை கழிவு நீர் சுத்திகரிப்பு நிலைய கட்டுமான பணிகள் அடுத்த 6 மாதங்களில் முடிந்து விடும்.

இந்த பணிகள் முடிந்தவுடன் பாதாள சாக்கடை திட்டம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். மேலும் பாதாள சாக்கடை திட்டம் முடிவடைந்த வார்டுகளான 6வதுவார்டில் ரூ.23 லட்சம் மதிப்பிலும்,7மற்றும் 14 வது வாடுகளில் ரூ.24 லட்சம் மதிப்பிலும், 8வதுவார்டில் ரூ.14.5 லட்சம் மதிப்பிலும், 9வது வார்டில் ரூ.13 லட்சம் மதிப்பிலும், 11வதுவார்டில் ரூ.30 லட்சம் மதிப்பிலும், 15வது வார்டில் ரூ.16 லட்சம் மதிப்பிலும், 20 மற்றும் 21 வதுவார்டுகளில் ரூ.54 லட்சம் மதிப்பிலும் என சுமார் ரூ.1.88 கோடி நிதி நகர்புற சாலை மேம்பாட்டு திட்டம் மற்றும் நகராட்சி பொது நிதியில் இருந்து ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இந்த நிதியை கொண்டு பாதாள சாக்கடை பணிகள் முடிந்த இந்த வார்டுகளிலும் தற்போது தார்சாலைகள் போடும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. 9வது வார்டில் தார்ச்சாலைப் பணிகள் ஒரு வாரத்திற்குள் துவங்கி விடும். தார்ச்சாலைகள் தரமானதாகவும் உறுதியானதாகவும் போடவேண்டும் என்று ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

12, 13வது வார்டு பகுதிகள் நகரின் இதயப்பகுதியாக இருப்பதால் போக்குவரத்தில் மாற்றம் செய்து அதன் பின்னர் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் துவங்கப்பட்டு பணிகள் விரைவாக முடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார். பேட்டியின் போது வருவாய் உதவியாளர்கள் அப்பநேசன், மகேஸ்வரன், இளநிலை உதவியாளர் குமரன், பைப்லைன் பிட்டர் குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

Last Updated on Monday, 22 February 2010 06:26