Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

60 வார்டுகளுக்கும் கொசு மருந்தடிக்கும் இயந்திரம் வாங்க திருச்சி மாநகராட்சி முடிவு

Print PDF

தினமணி 23.02.2010

60 வார்டுகளுக்கும் கொசு மருந்தடிக்கும் இயந்திரம் வாங்க திருச்சி மாநகராட்சி முடிவு

திருச்சி, பிப். 22: திருச்சி மாநகராட்சியின் 60 வார்டுகளுக்கும் கொசு மருந்தடிக்கும் இயந்திரங்கள் (தலா 60 கைத் தெளிப்பான், புகை மருந்து அடிக்கும் இயந்திரம்) வாங்க மாமன்றம் ஒப்புதல் அளித்தது.

திருச்சி மாநகரில் கொசுக்கள் அதிகம் உற்பத்தியாகி பரவலாக மக்களுக்கு காய்ச்சலை ஏற்படுத்தி வருகிறது. மாநகராட்சி, மாவட்ட நிர்வாகம் தரப்பில் அவ்வப்போது இதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டாலும், "சாதாரண காய்ச்சல்தான்' என்ற நிலையில் அவர்களும் ஒப்புக்கொண்டார்கள். இந்நிலையில், கொசுக்களைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கையை மாநகராட்சி மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை பல்வேறு தரப்பிலிருந்தும் முன்வைக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மாமன்ற உறுப்பினர்கள் ரெ. ஸ்ரீராமன், து. தங்கராஜ், வை. புஷ்பம் ஆகியோர் கடந்த ஜனவரி 25-ம் தேதி அன்று நடைபெறத் திட்டமிடப்பட்டிருந்த மாமன்றக் கூட்டத்தில் ஒரு தீர்மானத்தை முன்மொழிந்திருந்தனர். 60

வார்டுகளிலும் தலா ஒரு கொசு மருந்து அடிக்கும் கைத்தெளிப்பான், ஒரு புகை மருந்து அடிக்கும் இயந்திரம் என 120 இயந்திரங்கள் வாங்க வேண்டும் என அந்தத் தீர்மானத்தில் கூறப்பட்டிருந்தது. ஒவ்வொரு வார்டுக்கும் இந்த இயந்திரங்களைக் கொடுத்து, துப்புரவுப் பணியாளர்கள் மூலம் கொசுக்களைக் கட்டுப்படுத்தும் பணி தீவிரப்படுத்தப்படும் என்றும் நகர்நல அலுவலர் டாக்டர் கே.சி. சேரன் கூறினார்.

ஆனால், மாமன்றக் கூட்டங்கள் கடந்த இரண்டு முறையும் இரங்கல் தீர்மானங்களுடன் ஒத்திவைக்கப்பட்டன. இதனால், கொசுக்களைக் கட்டுப்படுத்தும் இந்தத் தீர்மானம் "தள்ளித்தள்ளிப் போய்' ஒரு வழியாக திங்கள்கிழமை நடைபெற்ற சாதாரணக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது.

தீர்மானம் படிக்கப்படுவதற்கு முன்பே சுகாதார பிரச்னைகள் குறித்து மாமன்றத்தில் காரசாரமான விவாதம் நடைபெற்றதால், இந்தத் தீர்மானத்தின் மீது யாரும் அதிகம் பேசவில்லை. தேமுதிக உறுப்பினர் ஜோசப் ஜெரால்டு மட்டும் "இயந்திரங்களுடன் சேர்த்து போதியளவுக்கு மருந்தும் வாங்க வேண்டும்' எனக் குறிப்பிட்டார். இதைத் தொடர்ந்து இவற்றை வாங்குவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆணையர் த.தி. பால்சாமி அறிவித்தார்.

ராணுவ இடத்துக்கு ரூ. 17 லட்சம்: முன்னதாக கிராப்பட்டி பகுதியில் ராணுவ நிலத்தை மாநகராட்சிக்குக் கோருவது குறித்த நடவடிக்கையில் இப்போதைய நிலை என்ன? என உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். இதற்குப் பதிலளித்த ஆணையர் த.தி. பால்சாமி, ராக்போர்ட் காலனி பகுதியிலுள்ள ஒரு பகுதி ராணுவ நிலத்தை ரூ. 17 லட்சம் செலுத்தி மாநகராட்சிக்கு வாங்குவதற்கு அனுமதி கிடைத்துள்ளதாகக் கூறினார்.

Last Updated on Tuesday, 23 February 2010 10:21