Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

வரும் ஏப்ரலுக்குள் மாட்டுத்தாவணி சென்ட்ரல் மார்க்கெட் பணி முடியும்

Print PDF

தினமணி 02.03.2010

வரும் ஏப்ரலுக்குள் மாட்டுத்தாவணி சென்ட்ரல் மார்க்கெட் பணி முடியும்

மதுரை, மார்ச் 1: மதுரை மாட்டுத்தாவணியில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் சென்ட்ரல் மார்க்கெட் பணி வரும் ஏப்ரலுக்குள் முடியும் என்று மாநகராட்சி ஆணையாளர் எஸ்.செபாஸ்டின் தெரிவித்தார்.

மதுரை மாநகராட்சி வருவாய் வரி வசூல் சம்பந்தமான இனங்களுக்கான ஆய்வுக் கூட்டம் கருத்தரங்கு கூடத்தில் நடைபெற்றது. ஆணையாளர் எஸ்.செபாஸ்டின் தலைமை வகித்தார். கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி வசூல் செய்வதற்காக ஒவ்வொரு வார்டுகளுக்கும் உதவிப் பொறியாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு தீவிரமாக வசூல் செய்யப்படுகின்றன.

மேலும் மீனாட்சி பஜார், மாட்டுத்தாவணி பஸ் நிலைய வணிக வளாகம் உள்ளிட்ட 2 ஆயிரம் கடைகளுக்கான நிலுவைத் தொகைகள் வசூல் செய்யப்படுகிறது. காய்கறி மார்க்கெட், சந்தை உள்ளிட்ட குத்தகைக்கு இந்த மாதத்திற்குள் உரிமம் முடிந்தால், நிலுவை செலுத்தினால் மட்டுமே புதுப்பித்துத் தரப்படும்.

புதிதாகக் கட்டப்பட்டு வரும் மாட்டுத்தாவணி சென்ட்ரல் மார்க்கெட்டில் மேற்கூரைகள் அமைக்கும் பணி நடைபெறுகிறது. மேலும் சாலை, குடிநீர், கழிவு நீர் வசதிகள் உள்ளிட்ட பணிகள் அனைத்தும் இந்த மாதத்திற்குள் முடியும்.

ஏப்ரல் முதல் வாரத்தில் மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் மு.க.அழகிரி திறந்து வைக்க உள்ளார். மேலும் தற்போது உள்ளவர்களுக்கே கடைகள் ஒதுக்கீடு செய்யப்படும்.

கடை உரிமையாளர்களுக்கு எந்தவிதப் பிரச்னையும் ஏற்படாமல் இருக்க அடையாள அட்டைகள் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

கூட்டத்தில் தலைமைப் பொறியாளர் கே.சக்திவேல், வருவாய் ஆணையாளர் இரா.பாஸ்கரன் உள்ளிட்ட அனைத்து அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

Last Updated on Tuesday, 02 March 2010 09:34