Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நாகர்கோவிலில் சுரங்க நடைபாதை திறப்பு : ஏராளமான மக்கள் உற்சாக பயணம்

Print PDF

தினமலர் 05.05.2010

நாகர்கோவிலில் சுரங்க நடைபாதை திறப்பு : ஏராளமான மக்கள் உற்சாக பயணம்

நாகர்கோவில் : குடிதண்ணீர் பிரச்னையை தீர்க்க 75 கோடி ரூபாயில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது என நாகர்கோவிலில் நடந்த சுரங்க நடைபாதை திறப்பு விழாவில் அமைச்சர் சுரேஷ்ராஜன் பேசினார்.

நாகர்கோவில் நகராட்சியில் சர்.சி.பி.ராமசாமி பூங்காவையும், அண்ணா பஸ் ஸ்டாண்டையும் இணைக்கும் வகையில் கேப் ரோட்டில் சுரங்கநடைபாதை அமைக்க 1 கோடி ரூபாயில் தமிழக அரசு நிர்வாக அனுமதி வழங்கியது. சுரங்க நடைபாதை பணிக்கு 61.60 லட்சம் ரூபாயில் ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்டு 47.40 லட்சம் ரூபாயில் ஆர்.பி.ஆர். குரூப்ஸ் நிறுவன உரிமையாளர் பாலகிருஷ்ணன் ஒப்பந்தம் பெற்றார்.

சுரங்கநடைபாதை பணி தவிர நடைபாதைக்கு தேவையான நடைபாதை மின்மயமாக்கல், வர்ணம் பூசுதல், இரும்பு கம்பியிலான கதவுகள் அமைத்தல், வடிகால் அமைத்தல், கைப்பிடி கம்பிகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்காகவும் நிதி ஒதுக்கப்பட்டது.

சுரங்கநடைபாதை 21.50 மீட்டர் நீளத்தில் 5.40 மீட்டர் அகலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. சாலையின் கீழ் உள்ள பகுதி 2.70 மீட்டர் உயரமும், பஸ் ஸ்டாண்டில் உள்ள பகுதி 3.85 மீட்டர் உயரத்திலும் அமைக்கப்பட்டுள்ளது. சுரங்கபாதையின் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் நகராட்சி சார்பில் கடைகள் அமைக்கப்பட உள்ளது.

சுரங்கபாதையின் இருபக்கமும் 6.20 மீட்டர் நீளம், 3 மீட்டர் அகலத்தில் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. சுரங்கபாதையின் அருகில் 5.30 மீட்டர் அகலத்தில் புதியதாக படிகள் அமைக்கப்பட்டு உள்ளது. சுரங்கபாதையின் படிகளில் எளிதாக ஏறி இறங்க கைப்பிடிகள் அமைக்கப்பட்டு உள்ளது. தடையின்றி மின்சாரம் கிடைக்க இன்வெர்ட் வைப்படுகிறது.

புதிய சுரங்க நடைபாதை திறப்பு விழா நடந்தது. விழாவிற்கு நகராட்சி சேர்மன் அசோகன் சாலமன் தலைமை வகித்தார். கமிஷனர் ஜானகி ரவீந்திரன் வரவேற்றார். மாவட்ட கலெக்டர் ராஜேந்திர ரத்னு குத்துவிளக்கு ஏற்றினார். அமைச்சர் சுரேஷ்ராஜன் சுரங்க நடைபாதையை திறந்து வைத்தார். நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் பழனியப்பன், ஹெலன்டேவிட்சன் எம்.பி., எம்.எல்..க்கள் ராஜன், ரெஜினால்டு, மாவட்ட பஞ்., சேர்மன் அஜிதா மனோதங்கராஜ், தமிழ்நாடு மீனவர் நலவாரிய துணை தலைவர் பெர்னார்டு, மாவட்ட வேளாண் விற்பனை குழு தலைவர் ஷா, நகராட்சி துணை சேர்மன் சைமன்ராஜ், கவுன்சிலர் அலிபாத்திமா ரபீக் பேசினர்.

அமைச்சர் சுரேஷ்ராஜன் பேசும்போது கூறியதாவது: தமிழகத்திலேயே அதிக பாலம், சாலைகள் அமைந்துள்ளது கன்னியாகுமரி மாவட்டத்தில் தான். காமராஜர் ஆட்சிக்கு பின் பாலம் மற்றும் சாலைகள் அதிகமாக அமைக்கப்பட்டிருப்பது தி.மு.. ஆட்சியில்தான்.

கன்னியாகுமரி சட்டசபை தொகுதியை பொறுத்தவரை இனிமேல் பால வேலை இல்லை என்ற அளவிற்கு குறுகிய பாலங்கள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. பழைய பாலங்கள் மாற்றப்பட்டு புதிய பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. தி.மு.. ஆட்சியில் குமரி மாவட்டத்திற்கு நான்கு மீன்பிடி துறைமுகங்கள், மாம்பழத்துறை ஆறு அணை திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இத்திட்டங்களை முதல்வர் கருணாநிதி தனது கைகளால் திறந்து வைப்பார் என நம்புகிறோம்.

கடந்த நான்கு ஆண்டுகளில் குமரி மாவட்டத்தில் 36 கோடி ரூபாயில் 117 பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. நெடுஞ்சாலைத்துறையில் 72 கிலோ மீட்டர் சாலை அமைக்கப்பட்டுள்ளது. வரும் நிதி ஆண்டில் 50 கோடி ரூபாயில் சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

உலக்கை அருவி திட்டத்திற்காக நகராட்சி 25 லட்சம் ரூபாய் பொதுப்பணித்துறைக்கு கொடுத்துள்ளது. உலக்கை அருவி வனத்துறையின் கீழ் உள்ளதால். நிலம் கையகப்படுத்துவதில் விதிகளை கையாள்வதில் காலதாமதம் ஏற்படுகிறது. விரைவில் இத்திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படும்.

கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவில் சட்டசபை தொகுதியில் நாகர்கோவில் நகராட்சி நீங்கலாக குடிதண்ணீர் பிரச்னைக்கு தீர்வு ஏற்படுத்தும் வகையில் 75 கோடி ரூபாயில் ஒரு திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இதன்மூலம் குடிதண்ணீர் பிரச்னை முற்றிலும் தீர்க்கப்படும்.

தமிழகத்தில் 9 இடைத்தேர்தல்கள் நடந்துள்ளன. அனைத்திலும் தி.மு.., காங்., கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. தி.மு.. அரசை விமர்சித்த எதிர்கட்சி பென்னாகரத்தில் டெபாசிட் இழந்தது போல் வரும் சட்டபை தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதியிலும் டெபாசிட் இழக்கும். ஏனென்றால் அவர்கள் ஏழைமக்களின் பிரச்னைக்கு உதவி செய்யவில்லை. நாகர்கோவில் நகராட்சியில் குடிதண்ணீர் பிரச்னை ஏற்படாமல் இருக்க எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் உறுதுணையாக இருப்பேன். இவ்வாறு அமைச்சர் சுரேஷ்ராஜன் பேசினார்.

நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள், அதிகாரிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். சுரங்க நடைபாதை திறக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடப்பட்டுள்ளதால் ஏராளமான மக்கள் உற்சாகமாக சுரங்க பாதையில் நடந்து சென்றனர்.

Last Updated on Monday, 05 April 2010 06:36