Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

வேளச்சேரியில் 32 கி.மீ., மழைநீர் கால்வாய் விரைவில் கட்டி முடிக்கப்படும் : மேயர் அறிவிப்பு

Print PDF

தினமலர் 22.04.2010

வேளச்சேரியில் 32 கி.மீ., மழைநீர் கால்வாய் விரைவில் கட்டி முடிக்கப்படும் : மேயர் அறிவிப்பு

சென்னை : ''வேளச்சேரி பகுதியில் மூன்று ஆண்டுகளில் 32 கி.மீ., நீளத்திற்கு மழை நீர் வடிகால் கால்வாய்கள் அமைக்கப்படும்,'' என மேயர் சுப்ரமணியன் கூறினார்.ஜவகர்லால் நேரு நகர்புற புனரமைப்பு திட்டத்தின் கீழ், சென்னை நகரில் வெள்ள தடுப்பு நடவடிக்கை பணிகள் மேற் கொள்ளப்பட்டுள்ளன. நகரின் நீர்பிடிப்பு பகுதிகளை 12 பிரிவுகளாகப் பிரித்து தனித்தனியே மழைநீர் வடிகால்வாய் கட்டுவது, நீர்வழித் தடங்களை ஆழப்படுத்தி கரைகளை பலப்படுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதில், மூன்று பிரிவு பணிகளுக்கு மாநகராட்சி ஒப்பந்தம் தேர்வு செய்துள்ளது. வேளச்சேரி பகுதியில் மழை நீர் வடிகால் கால்வாய் கட்டுதல், ராஜ் பவன் கால்வாய் மேம்படுத்துதல் போன்ற பணிகளுக்கு 47 கோடியே 52 லட்சம் ரூபாய் மதிப்பில் பணி ஒப்படைக்கப்பட்டது. ஒப்பந்த நிறுவனம் நேற்று காலை வேளச்சேரி அண்ணா நகரில் பணியைத் துவங்கியது. மேயர் சுப்ரமணியன் கலந்து கொண்டு பணியை துவங்கி வைத்து கூறியதாவது: வேளச்சேரி என்றாலே வெள்ளச்சேரி என்ற நிலை இருந்தது. நகரில் 1996ம் ஆண்டு மொத்தத்தில் 613 கி.மீ., மட்டுமே மழைநீர் வடிகால் கால்வாய் இருந்தது. ஸ்டாலின் மேயர் ஆன பின், 74 கோடி ரூபாய் செலவில் 135 கி.மீ., நீளத்திற்கு புதிய மழை நீர் வடிகால் கால்வாய் அமைத்ததோடு, 84 கி.மீ., நீளமுள்ள தூர்ந்த, பாழடைந்த மழை நீர் வடிகால் கால்வாய் சீர்படுத்தப்பட்டது. சமீபத்தில் ஆறு கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பில் 7.43 கி.மீ., நீளமுள்ள மழை நீர் வடிகால் கால்வாய், வேளச்சேரியில் கட்டப்பட்டது. கடந்த மழையில் வேளச்சேரி பகுதியில் பெரிய அளவு பாதிப்பில்லை. இருந்தாலும், முழுமையாக பாதிப்பில்லாமல் காக்க, வேளச்சேரி பகுதியில் மட்டும் 32 கி.மீ., நீளத்திற்கு 40 கோடியே 52 லட்சம் ரூபாய் மதிப்பில் மழைநீர் வடிகால் கால்வாய் கட்ட திட்டமிடப்பட்டு அதற்கான பணி இன்று துவங்கப்பட்டது.

அதோடு வேளச்சேரியில் இருந்து வரும் உபரி நீரை வெளியேற்ற, வீராங்கல் ஓடையில் இருந்து பக்கிங்காம் கால் வாயை இணைக்கும் வகையில் 82 கோடி ரூபாய் செலவில் புதிய கால்வாய் அமைக்க பொதுப்பணித் துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. வேளச்சேரி பகுதிக்கு மட்டும் தற்போது 129 கோடியே 53 லட்சம் ரூபாய் மதிப்பில் வெள்ள தடுப்பு பணிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. இந்த பணிகள் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் படிப்படியாக மூன்று ஆண்டுகளில் செய்து முடிக்கப்படும். இந்த பணி முடிந்தால், வேளச்சேரி பகுதியில் வெள்ளப் பாதிப்பு இருக்காது. இவ்வாறு மேயர் கூறினார்.இந்நிகழ்ச்சியில் கமிஷனர் ஆசிஷ் சட்டர்ஜி, தலைமை பொறியாளர் விஜயகுமார் மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.

Last Updated on Thursday, 22 April 2010 06:51