Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

களியக்காவிளை காய்கறி சந்தையில் வணிக வளாகம்: பேரூராட்சி முடிவு

Print PDF

தினமணி 22.04.2010

களியக்காவிளை காய்கறி சந்தையில் வணிக வளாகம்: பேரூராட்சி முடிவு

களியக்காவிளை, ஏப். 21: களியக்காவிளை பேரூராட்சியில் 2010-11-ம் ஆண்டுக்கான அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின்கீழ் பணிகள் மேற்கொள்ள ரூ. 50 லட்சம் ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. இதற்கான பணிகள், திங்கள்கிழமை நடைபெற்ற மன்றக் கூட்டத்தில் தேர்வு செய்யப்பட்டன.

களியக்காவிளை பேரூராட்சி மன்ற அவரசக் கூட்டம் தலைவி எஸ். இந்திரா தலைமையில் நடைபெற்றது. செயல் அலுவலர் இரா. சங்கர் முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் சலாவுதீன் தீர்மானங்களை வாசித்தார்.

பேரூராட்சியில் உள்ள பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்தும் முக்கிய சாலைகளை அமைக்க அரசாணையில் தெரிவிக்கப்பட்டிருந்ததைத் தொடர்ந்து, பேரூராட்சியில் உள்ள 5 வார்டு பகுதிகள் பயனடையும் வகையில் மஞ்சவிளை-குந்நுவிளை சாலையைச் சீரமைக்க முடிவு செய்யப்பட்டது.

பேரூராட்சிகளின் பயன்பாட்டுக்கும், பொதுமக்கள் பயன்படுத்தும்வகையிலும் சமுதாய நலக்கூடம் கட்ட ரூ. 10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இந் நிதியில் பேரூராட்சிக்கு அதிக வருவாயை அளிக்கும்வகையில் களியக்காவிளை காய்கறிச் சந்தையில் வணிக வளாகம் கட்ட தீர்மானிக்கப்பட்டது. ஊருணி அல்லது குளங்களை மேம்படுத்த ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியில் 2-வது வார்டுக்கு உள்பட்ட மேக்கோடு, தூற்றுக்குளத்தைத் தூர்வாரி சீரமைக்கவும், குறுகிய சாலைகளை சிமென்ட் சாலைகளாக்கும் பணிக்கு பணிக்கு பாலக்குளம் சாலை, ஆர்.சி.தெரு. கல்லறைத் தோட்டம் சாலை, குழிஞ்ஞான்விளை-எள்ளுவிளை சாலை உள்ளிட்ட சில சாலைகளை கான்கிரீட் சாலைகளாக்கவும் முடிவு செய்யப்பட்டது.

பஸ் நிலையம் அல்லது சந்தை கட்டுமானப் பணிகள் மற்றும் அடிப்படை வசதிகள் மேம்படுத்துதல் பணிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த ரூ. 10 லட்சத்தில் களியக்காவிளை காய்கறிச் சந்தையின் ஒரு பகுதியில் மேலும் வணிக வளாகங்கள் அமைக்கத் தீர்மானிக்கப்பட்டது.

சுடுகாடு, இடுகாடுகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ. 5 லட்சத்தை, இப் பேரூராட்சியில் சுடுகாடு, இடுகாடு இல்லாததால் பேரூராட்சியின் அனைத்து வார்டுகளிலும் தெருவிளக்குகள் அமைக்கத் தீர்மானிக்கப்பட்டது. மேலும், பேரூராட்சிகள் தங்களது விருப்பப்படி அத்தியாவசிய தேவைகளை மேற்கொள்ள ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த ரூ. 5 லட்சத்தில், 12-ம் வார்டுக்கு உள்பட்ட கீழ களியக்கல் பகுதியிலும், 7-ம் வார்டில் பூதப்பிலாவிளை, குளவிளை, கைப்பிரி உள்பட பேரூராட்சியின் பல பகுதிகளில் சின்டெக்ஸ் தொட்டிகள் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது.

வார்டு உறுப்பினர்கள் என். விஜயானந்தராம், ரமா, பத்மினி, ராயப்பன், சந்திரன், என். விஜயேந்திரன், வின்சென்ட், கமால், ஜெலின்பியூலா, . ராஜு, ராதா, தேவராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.