Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

திருச்செங்கோட்டில் ரூ.113.75 கோடியில் பாதாள சாக்கடை

Print PDF

தினமணி 30.04.2010

திருச்செங்கோட்டில் ரூ.113.75 கோடியில் பாதாள சாக்கடை

திருச்செங்கோடு, ஏப்.29: திருச்செங்கோடு நகராட்சிப் பகுதியில் பாதாள சாக்கடை அமைக்க ரூ.113.75 கோடியில் திட்டம் தயாரிக்கப்பட்டு அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக, நகர்மன்றத் தலைவர் ஆர்.நடேசன் தெரிவித்தார்.

திருச்செங்கோடு நகராட்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற நகர்மன்றக் கூட்டத்தில் அவர் கூறியது:

பாதாள சாக்கடைக்கான திட்ட அறிக்கை குடிநீர் வடிகால் வாரியத்தால் தயாரிக்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது. அரசு ஒப்புதல் அளித்தால் இந்தத் திட்டம் சுமார் 30-36 மாதங்களில் நிறைவேறும். அப்போது, அனைத்து வீடுகளின் கழிவு நீரும் சேகரிக்கப்பட்டு சந்தைப்பேட்டைக்கு கொண்டு வரப்படும். பின்னர் பம்ப் செய்யப்பட்டு கூட்டப்பள்ளியில் அமையவுள்ள சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பப்படும். சுத்திகரிக்கப்பட்ட நீர் கூட்டப்பள்ளி ஏரியில் விடப்படும். இதன் மூலம் 33 வார்டுகளிலும் உள்ள 30 ஆயிரம் வீடுகள் பயன்பெறும். தேர்வு நிலை நகராட்சியான இதன் மக்கள் தொகை 80 ஆயிரம்.

திருச்செங்கோட்டில் குடிநீர் பஞ்சத்தைப் போக்க சீத்தாராம்பாளையம் மாரியம்மன் கோயில், செங்கோடம்பாளையம், எட்டிமடைப்புததூர், கோம்பை நகர், நெசவாளர் காலனி, சூரியம்பாளையம் 3-வது தெரு, கூட்டப்பள்ளி அருந்ததியர் தெரு, சூரியம்பாளையம் காட்டு வளவு, சின்னான்கிணறு, வாலரைகேட் கொக்கராயன்பேட்டை சாலை, எஸ்என்டி சாலை, வடக்கு ரத வீதி, நாடார் தெரு, காமாட்சியம்மன் கோயில் சந்து, 19-20 மற்றும் 26-வது வார்டுகளில் தலா ரூ.3 லட்சம் செலவில் புதிதாக குழாய்க்கிணறு அமைத்து மின் மோட்டார் பொருத்த நகராட்சி தீர்மானித்துள்ளது என்றார்.

கூட்டத்தில் நடந்த விவாதம்:

சரவண சுந்தரம்: எனது வார்டில் பணிகள் பாதியில் நிற்கின்றன. அவற்றை முடித்துத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தலைவர் நடேசன்: கட்டுமானப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளதால் ஒப்பந்ததாரர்கள் வேலைகளை முடிக்க சிரமப்படுகின்றனர். புதிய டெண்டர்களையும் எடுக்க வருவதில்லை. ஒப்பந்ததாரரிடம் பேசி வேலைகளை முடிக்க உறுப்பினர்கள் முயற்சி எடுக்க வேண்டும்.

டி.என். பரமசிவம்: ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர் திருமலையில் வீர ஆஞ்சநேயர் கோயில் அருகில் சுமார் 10 ஏக்கர் நிலம் உள்ளது. அங்கு காற்றாலை அமைத்தால்

நகர மக்களுக்கு வேண்டிய மின்சாரம் கிடைககும். நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தலைவர் நடேசன்: காற்றாலை சுமார் 26 அடி உயரம் இருக்கும். அதனை அப்பகுதிக்கு கொண்டு செல்ல முடியுமா என்பது தெரியவில்லை.

இருப்பினும் இது குறித்து பரிசீலனை செய்யலாம்.

மாணிக்கம்: போக்குவரத்து நெரிசலைப்போக்க வட்டப்பாதை அமைக்க வேண்டும்.

தலைவர் நடேசன்: ஏற்கெனவே நாமக்கல்-ராசீபுரம் சாலையை மலை சுற்றுப்பாதை வழியாக ஈரோடு சாலைவுடன் இணைக்கும் திட்டம் உள்ளது. படிப்படியாக இதனை நிறைவேற்றலாம்.

டி.என். ரமேஷ்: மலைக்குச் செல்லும் பக்தர்களை சில போலி மாந்தீகர்கள் வலுக்கட்டாயமாக இழுத்து தோஷம் கழிக்கிறேன் என்று கூறி ஆயிரக்கணக்கில் பணம் பறித்து ஏமாற்றுகின்றனர்.

தலைவர் நடேசன்: பெயரைக் குறிப்பிட்டு புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆணையர் இளங்கோ, பொறியாளர் ரவி முன்னிலை வகித்தனர். பாவாயி, மாதேஸ்வரன், முத்துசாமி, விசாலாட்சி, ஈஸ்வரன், தமிழ்செல்வி, ராஜவேலு, சுரேஷ்பாபு உள்ளிட்டோர் பேசினர்.

கோவையில் வாகன நிறுத்தங்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை

கோவை, ஏப்.29: கோவையில் வாகன நிறுத்தும் இடங்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் அன்சுல் மிஸ்ரா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி:

கோவை மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில் இரு சக்கர மற்றும் 4 சக்கர வாகனங்கள் நிறுத்துமிடங்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் வந்தன.

இதைத்தொடர்ந்து மாநகராட்சி பகுதியில் உள்ள இரு சக்கர வாகன நிறுத்றுமிடங்களில் அதிகாரிகள் வியாழக்கிழமை திடீர் ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது காந்திபுரம் மத்திய பஸ் நிலையம் அருகேயுள்ள வாகன நிறுத்த மையத்தில் கூடுதல் கட்டணம் வசூலித்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து கூடுதல் கட்டணம் வசூலித்தது தொடர்பாக சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

மாநகராட்சி பகுதியில் உள்ள வாகன நிறுத்தமிடங்கள், கட்டண கழிப்பிடங்கள் ஆகியவற்றில் மாநகராட்சி நிர்ணயித்த தொகை தொடர்பான அறிவிப்பு பலகை வைக்க வேண்டும். அறிவிப்பு பலகை வைக்காத ஒப்பந்ததாரர்கள், கூடுதல் கட்டணம் வசூலிப்பவர்கள் ஆகியோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.