Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Infrastructure

விநாயகா நகர் பிரதான சாலையில் மழைநீர் வடிகால்வாய் ரூ.2.41 கோடிக்கு மாநகராட்சி ஒப்பந்தம்

Print PDF

தினமலர்         18.11.2013 

விநாயகா நகர் பிரதான சாலையில் மழைநீர் வடிகால்வாய் ரூ.2.41 கோடிக்கு மாநகராட்சி ஒப்பந்தம்

சென்னை:ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலத்தில் வெள்ள பாதிப்பை சந்தித்து வந்த துரைப்பாக்கம், விநாயகா நகரில் 2.41 கோடி ரூபாய் செலவில் மழைநீர் வடிகால்வாய் அமைக்க மாநகராட்சி ஒப்பந்தம் அறிவித்துள்ளது.

சோழிங்கநல்லுார் மண்டலத்திற்கு உட்பட்ட 193வது வார்டு துரைப்பாக்கம், விநாயகா நகர், ஆனந்தா நகர் பகுதி.

அங்கு நுாற்றுக்கணக்கான குடியிருப்புக்கள் உள்ள நிலையில், சாலை, மழைநீர் வடிகால்வாய் வசதி இல்லாததால், ஒவ்வொரு ஆண்டு பருவமழைக்கும் விநாயகா நகர், ஆனந்தா நகர் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்குவதும், சாலைகள் போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் இருப்பதும் வாடிக்கையாக உள்ளது.

இதுகுறித்து, பகுதி நலச்சங்கத்தினர் தெரிவித்த தொடர் புகார்களை தொடர்ந்து, மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி இந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டார்.

சாலை மற்றும் மழைநீர் வடிகால்வாய் பணிகளை உடனடியாக மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். தொடர்ந்து, விநாயகா நகர், ஆனந்தா நகரில் சாலை அமைக்க கடந்த மாதம் மாநகராட்சி ஒப்பந்தம் வெளியிட்டது.

தற்போது வெள்ள பாதிப்பு பிரச்னையை தவிர்க்கும் வகையில் ஆனந்தா நகர் மற்றும் விநாயகா நகர் பிரதான சாலையில், விநாயகா நகர் 1வது குறுக்கு தெரு முதல் பள்ளிக்கரணை சதுப்பு நில பகுதி வரை 4 அடி அகலத்திற்கு கான்கிரீட் பெட்டக வடிவ மழைநீர் வடிகால்வாய் அமைக்க, 2.41 கோடி ரூபாயை மாநகராட்சி ஒதுக்கியுள்ளது. இந்த பணிகளுக்கு ஒப்பந்தம் வெளியிடப்பட்டுள்ளது.

இதே மண்டலத்தில் புதிய குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதிகளான கண்ணகி நகர் பிரதான சாலை முதல், மழைநீர் வடிகால்வாய் அமைக்க 3.72 கோடி ரூபாய், பெருங்குடி மண்டலத்தில் ராஜிவ் காந்தி சாலை முதல், தெற்கு பக்கிங்ஹாம் கால்வாய் வரை மழைநீர் வடிகால்வாய் அமைக்க 1.85 கோடி ரூபாய் பணிகளுக்கும் மாநகராட்சி ஒப்பந்தம் அறிவித்து உள்ளது.

மேலும், ஆற்காடு சாலையில் வடபழனி சிக்னல் மற்றும் அருணாசலம் சாலை முதல் குமரன் காலனி பிரதான சாலை வரையில் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணிகளுக்கும், நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

இந்த பணிகளுக்கு தற்போது ஒப்பந்தம் அறிவித்தாலும், பருவமழை துவங்கி இருப்பதால், மழை முடிந்த பிறகே பணிகள் துவங்க வாய்ப்புள்ளதாக, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

தருமபுரி நகராட்சிக்கு புதிய கட்டடம்: பணிகள் தொடக்கம்

Print PDF

தினமணி        14.11.2013

தருமபுரி நகராட்சிக்கு புதிய கட்டடம்: பணிகள் தொடக்கம்

தருமபுரி நகராட்சி அலுவலகத்துக்கு ரூ.2 கோடியில் கட்டடம் கட்ட சனிக்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது.

தருமபுரி 1.4.1964-ஆம் ஆண்டு நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. 1987-ஆம் ஆண்டு முதல் நிலை நகராட்சியாகவும், 1991-இல் இரண்டாம் நிலை நகராட்சியாகவும், 2.12.2008-இல் தேர்வு நிலை நகராட்சியாகவும் தரம் உயர்த்தப்பட்டு செயல்பட்டு வருகிறது.

மொத்தம் 33 வார்டுகள் உள்ள இந்த நகராட்சியின் மொத்த பரப்பளவு 11.65 சதுர கி.மீ. ஆகும். 2011-ஆம் ஆண்டின் கணக்கெடுப்புப்படி தருமபுரி நகராட்சியின் மக்கள்தொகை 68,595 பேர் ஆகும்.

சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டடத்தில் செயல்பட்டு வரும் தருமபுரி நகராட்சி அலுவலகத்துக்கு அனைத்து வசதிகளுடனும் ரூ.2 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடம் கட்டப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதற்காக ரூ.1.40 கோடியும், நகராட்சி பொது நிதியிலிருந்து ரூ.40 லட்சமும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

தருமபுரி நகராட்சி புதிய அலுவலகம் தரைத்தளத்துடன் இரு தளங்கள் கட்டப்பட உள்ளது. மொத்தம் 17760.45 ச.அடி பரப்பளவில் இந்தக் கட்டடம் கட்டப்பட உள்ளது. அடிக்கல் நாட்டு விழா:

இதற்கான அடிக்கல் நாட்டு விழா சனிக்கிழமை நகர்மன்றத் தலைவர் ஜெ.சுமதி தலைமையில் நடைபெற்றது.

மாநில உயர் கல்வித் துறை அமைச்சர் பி.பழனியப்பன் புதிய கட்டடத்துக்கான அடிக்கல்லை நாட்டி பணிகளைத் தொடக்கிவைத்தார்.

இதில், துப்புரவுப் பணியாளர்களுக்கு சீருடை, பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டன.

விழாவில், மாவட்ட ஆட்சியர் கே.விவேகானந்தன், கே.பி.அன்பழகன் எம்எல்ஏ, மாவட்ட வருவாய் அலுவலர் ப.ராமர், மாவட்ட ஊராட்சித் தலைவர் டி.ஆர். அன்பழகன், கோட்டாட்சியர் பி.மேனகா, ஆணையர் குருசாமி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய வாகனங்கள்

Print PDF

தினபூமி        13.11.2013

நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய வாகனங்கள்

http://www.thinaboomi.com/sites/default/files/imagecache/story_thumbnail/Mini-Gave-Car-keys(C).jpg 

சென்னை, நவ.13 - நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சட்டம், நீதிமன்றங்கள், மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளின் பயன்பாட்டிற்காக  நவீன வசதிகளுடன் கூடிய 60 புதிய நாய் பயண வாகனங்கள்  வழங்கும்  நிகழ்ச்சி.

தமிழக முதலமைச்சர் 6.10.2012 அன்று தெரு நாய்களுக்கு கருத்தடை செய்தல்  மற்றும் வெறி நாய் கடி தடுப்பு திட்டம்  செயல்பாடுகள் குறித்து விரிவான ஆய்வினை மேற்கொண்டு, ஆய்வின் அடிப்படையில்,  இத்திட்டத்தினை தமிழகம் முழுவதும் முனைப்புடன் சிறப்பாக செயல்படுத்திட பல்வேறு  அறிவுரைகளை வழங்கினார்.  

தமிழக முதலமைச்சர் ஆணைக்கிணங்க,  9 மாநகராட்சிகள் (சென்னை தவிர) மற்றும் 126 நகராட்சிப் பகுதிகளில் சுற்றித் திரியும்  தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்து பராமரிப்பதற்காக  80 எண்ணிக்கையிலான நாய்கள் காப்பகங்கள் கட்டவும்,   நாய்கள் பயண வாகனங்கள் 60 வாங்கிடவும் அரசு ரூ.5.40 கோடிக்கு நிதி ஒதுக்கீடு செய்து ஆணையிட்டுள்ளது. 

தமிழக முதலமைச்சர் ஆணைக்கிணங்க, நேற்று (12.11.2013) 60 எண்ணிக்கையிலான புதிய நாய்கள் பயண வாகனங்களை மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளுக்கு  நகராட்சி நிர்வாகம்,  ஊரக வளர்ச்சி, சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் கே.பி.முனுசாமி வழங்கப்பட்டன.   இந்த வாகனத்தின் சராச்சரி மதிப்பு ரூ.6.50 இலட்சம் ஆகும்.

இந்த நவீன நாய் வாகனங்கள் பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டவையாகும்.  மனித நேயத்துடன் நாய்களை பிடித்து, அறுவை சிகிச்சைக்கு கொண்டு செல்ல வசதியாக நவீன முறையில் நாய்கள் பயண வாகனம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வாகனத்தில்,  ஒவ்வொரு நாயும் தனித்தனியாக அமருவதற்கு வசதியாக போதிய வெளிச்சம் மற்றும் காற்றோட்டம் கொண்ட 6 தனித்தனி அறைகள் அமைக்கப்பட்டுள்ளது.  மேலும், நாய்களை  பிடிக்கும் பணியாளர்களுக்காக தனியாக இருக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளது.  இந்த வாகனங்களை பயன்படுத்துவதால் மனித நேயத்துடனும், விரைவாகவும், கூடுதலாகவும் நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சைகள் செய்து பராமரிக்க இயலும்.

இவ்வாறு அவர் செய்திக்குறிப்பு கூறுகிறது.

 


Page 36 of 238