Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Infrastructure

ரூ. 30 லட்சத்தில் ஆதரவற்றோருக்கான காப்பகம்: மேயர்

Print PDF

தினமணி           04.10.2013

ரூ. 30 லட்சத்தில் ஆதரவற்றோருக்கான காப்பகம்: மேயர்

திருநெல்வேலியில் தெருக்கள், சாலையோரங்களில் சுற்றித்திரியும் ஆதரவற்றோர் தங்கும் வகையில் ரூ.30 லட்சம் மதிப்பில் மாநகராட்சி சார்பில் காப்பகம் கட்டப்படும் என மேயர் விஜிலாசத்யானந்த்  தெரிவித்தார்.

மாநகராட்சிப் பகுதியில் சாலையோரம், தெருக்களில் சுற்றித்திரியும் ஆதரவற்றோர், மனநிலை பாதிக்கப்பட்டோர், முதியோர் தங்கும் வகையில் காப்பகம் கட்ட வேண்டும் என்றும், மாநகராட்சியில் பயன்பாட்டில் இல்லாத கட்டடத்தை அப்புறப்படுத்தி அங்கு காப்பகம் கட்டவும், அதனை சரணாலயம் தொண்டு நிறுவனம் பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சி 18-வது வார்டில் குறுக்குத்துறையில் பயன்பாட்டில் இல்லாத குடிநீர் திட்டக் கட்டடம் உள்ள இடத்தில் ரூ.30 லட்சம் மதிப்பில் காப்பகம் கட்டுவதென மாநகராட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழகத்தில் முதன்முறையாக திருநெல்வேலியில் மாநகராட்சி மூலம் இக்காப்பகம் கட்டப்படுகிறது. இங்கு அவர்களுக்கு மருத்துவ வசதி, தொழில்பயிற்சி போன்ற உதவிகள் தொண்டு நிறுவனம் மூலம் செய்யப்படும் என மேயர் விஜிலாசத்யானந்த் தெரிவித்தார். 

காப்பகம் கட்டுவதற்கு மாநகராட்சி அனுமதி வழங்கியதை அடுத்து சரணாலயம் நிறுவனர் அந்தோணிகுருஸ் அடிகளார், இயக்குநர் மோசஸ்ராஜன், மேலாளர் மைக்கேல் உள்ளிட்டோர் மேயரை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

 

ரூ.2.81 கோடி மதிப்பில் மாநகராட்சிப் பள்ளிகளில் அடிப்படை வசதிகள்'

Print PDF

தினமணி           04.10.2013

ரூ.2.81 கோடி மதிப்பில் மாநகராட்சிப் பள்ளிகளில் அடிப்படை வசதிகள்'

வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடந்த கல்விக்குழு கூட்டத்தில் ரூ.2.81 கோடி மதிப்பில் மாநகராட்சி பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேற்கொள்ள அனுமதிக்கும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்துக்கு அதன் தலைவர் சூரியாச்சாரி தலைமை தாங்கினார். மேயர் பி.கார்த்தியாயினி, துணை மேயர் வி.டி.தருமலிங்கம், ஆணையர் ஜானகி ரவீந்திரன் மற்றும் கல்விக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் தீர்மானங்களையொட்டி விவாதம் நடைபெற்றது. அப்போது கல்விக்குழுவுக்கு ரூ.1.75 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இந்நிலையில் கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்ய கோருவது மேலும் மாநகராட்சிக்கு நிதிச் சுமையை ஏற்படுத்தும் என ஆணையர் தெரிவித்தார்.

இந்த நிதிச் சுமையை குறைப்பதற்கு வரி வசூலை அதிகரிப்பது, நிலுவையில் உள்ள வரியை வசூலிப்பது ஆகிய நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலமே தீர்வு காண முடியும் என்றும் அவர் கூறினார்.

கல்விக்குழு பணிகள் எதுவும் கடந்த இரு ஆண்டுகளாக நடைபெறவில்லை என்று அதன் தலைவர் சூரியாச்சாரி குறை கூறினார். ஆணையர் விடுமுறையில் செல்லும்போது பணிகள் பாதிப்பதாக சூரியாச்சாரி கூறியதை அடுத்து கூட்டத்தில் சிறிதுநேரம் கருத்து மோதல் ஏற்பட்டது.

 

காந்திமார்கெட்டில் ஆடு அறுக்கும் கூடம்: ரூ.1 கோடியில் கட்ட மாநகராட்சி முடிவு

Print PDF

தினமலர்             03.10.2013

காந்திமார்கெட்டில் ஆடு அறுக்கும் கூடம்: ரூ.1 கோடியில் கட்ட மாநகராட்சி முடிவு

திருச்சி: திருச்சி காந்திமார்கெட் பின்புறம் இறைச்சிக்காக ஆடு அறுக்கும் கூடம் உள்ளது. இங்கு போதுமான வசதிகள், நவீன வசதிகள் இல்லாததால், புதிதாக ஆடு அறுக்கும் கூடம் அமைக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.ஏற்கனவே உள்ள ஆடு அறுக்கும் இடத்திற்கு அருகே, அஸ்திவாரம் மட்டும் போடப்பட்ட நிலையில் மாநகராட்சிக்கு சொந்தமான இடம் உள்ளது.

அந்த இடத்தில் இந்த நவீன கூடத்தை கட்ட மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக ஒரு கோடி ரூபாய் மதிப்பில் திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில், மாநகராட்சி கமிஷனர் தண்டபாணி அந்த இடத்தை ஆய்வு செய்தார். உடன் செயற்பொறியாளர் அருணாச்சலம், தனியார் கன்சல்டன்ட் சண்முகா மற்றும் அதிகாரிகள் இருந்தனர்.ஆடுகளை அறுக்க தனித்தனி கேபின், கறிகளை வெளியில் கொண்டு வர கன்வேயர் பெல்ட், குளிர்பதன வசதி, அதிக எண்ணிக்கை ஆடுகளை அறுக்கும் வகையில் இரண்டு தளங்கள் வரை கட்டிடம் உள்ளிட்ட நவீன வசதிகளை உள்ளடக்கி திட்ட அறிக்கை தயார் செய்யுமாறு கன்சல்டன்ட் சண்முகத்திற்கு, கமிஷனர் தண்டபாணி அறிவுரை வழங்கினார்.

ஒரு ஆடு அறுக்கப்படுவதை மற்ற ஆடுகள் பார்த்தல் கூடாது, ஆடு அறுக்கும் போது மேற்கு பார்த்து நிற்க வேண்டும் உள்ளிட்ட சமூக விதிமுறைகள் படி கூடம் வடிவமைக்கப்பட உள்ளது. இதனால், திட்ட மதிப்பீடு ஒரு கோடி ரூபாயைக்கு மேல் ஆகும் என தெரிகிறது.

 


Page 43 of 238