Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Infrastructure

மதுரை அருகே 19500?பிளாட்டுகளுடன்?துணைநகரம் தோப்பூரில் பணிகள் துவங்கின

Print PDF
தினகரன்                    06.04.2013
 
மதுரை அருகே 19500?பிளாட்டுகளுடன்?துணைநகரம் தோப்பூரில் பணிகள் துவங்கின

மதுரை: மதுரை அருகே துணை நகரம் அமைக்கப்படும் என சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்ததை தொடர்ந்து முதற்கட்டமாக 450 பிளாட்டுகளை உருவாக்க தோப்பூர், உச்சப்பட்டி பகுதிகளில் வீட்டுவசதி வாரிய அதிகாரிகள் பணிகளை வேகப்படுத்தியுள்ளனர்.

மதுரை அருகே 19 ஆயிரத்து 500 வீடுகள் அமைக்கும் வகையில் துணை நகரம் அமைக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் அறிவித்தார். இந்த திட்டம் மதுரை-திருமங்கலம் நான்கு வழிச்சாலையில் தோப்பூர், உச்சப்பட்டியில் வீட்டுவசதி வாரியத்திற்கு சொந்தமான இடத்தில் செயல்படுத்தப்படவுள்ளது.

கூத்தியார் குண்டு பஸ்ஸ்டாப் முதல் தோப்பூர்வரை ரோட்டின் மேற்கு பகுதியில் ஆஸ்டின்பட்டி அரசு மருத்துவமனை, தனியார் பொறியியல் கல்லூரியை சுற்றியுள்ள பகுதியில் வீட்டுவசதி வாரியத்திற்கு சொந்தமாக 800 ஏக்கர் நிலம் உள்ளது. இங்கு ஏற்கனவே 300க்கும் மேற்பட்ட மனைகள் உருவாக்கப்பட்டுள்ளன. மீதியுள்ள நிலங்கள் அனைத்தையும் 10, 10 ஏக்கராக மனைகளாக மாற்ற வீட்டுவசதி வாரியம் திட்டமிட்டது.

இதற்கிடையே நிலத்தின் வழிகாட்டி மதிப்பீட்டையும் அரசு அதிகரித்தது. இதனால் இப்பகுதியில் ஒரு சென்ட் நிலத்தின் விலை ரூ.2 லட்சத்தை தாண்டியது. இதனால் எதிர்பார்க்கும் அளவிற்கு விற்பனை நடக்கவில்லை. இதனால் இப்பகுதியை முழுமையாக மேம்படுத்த திட்டமிடப்பட்டது. இதற்காக ரூ.120 கோடியில் திட்டம் உருவாக்கப்பட்டது. இத்திட்டத்தை செயல்படுத்தியபின் 586.86 ஏக்கரில் 19 ஆயிரத்து 500 பிளாட்டுகளை உருவாக்க திட்டமிடப்பட்டது. இந்த திட்டத்தைதான் முதல்வர் அறிவித்துள்ளார். வீட்டுவசதி வாரியத்தின் நிதியிலிருந்தே மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

இதன்படி 4 வழிச்சாலையிலிருந்து இரு இடங்களில் 40 அடி இணைப்பு ரோடு, பாதாள சாக்கடை, தண்ணீர் தொட்டி, தெருவிளக்குகள், பாலங்கள், தெருக்குழாய்கள், பூங்கா, வணிக வளாகம், தீயணைப்பு, போலீஸ் ஸ்டேஷன்கள், மருத்துவனை, கல்வி நிறுவனங்கள், தெருக்கள் முழுவதும் மரங்கள் என பல மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

முதற்கட்டமாக திட்டம் 3ல் 450 பிளாட்டுகள் 23.7 ஏக்கரில் உருவாக்கப்படவுள்ளன. இதற்காக ரூ.2.5 கோடியில் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள டெண்டர் விடப்பட்டது. முதல்வர் அறிவிப்பை தொடர்ந்து மேம்பாட்டு பணிகள் நேற்று துவங்கின. நேற்று இந்த பகுதியை  வீட்டுவசதி வாரிய அதிகாரிகள் பார்வையிட்டனர்.

அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘50 ஏக்கர்களாக பிரித்து தனித்தனி திட்டமாக அறிவித்து மனைகள் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே இங்கு மனைகளை வாங்க விரும்புவோரிடம் மனுக்கள் பெறப்பட்டுள்ளன. குறைந்த அளவு டெபாசிட் பணத்தை செலுத்த கோரியுள்ளதால் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மனுக்களை அளித்துள்ளனர். மேலும் மனுக்கள் பெறப்படும். மனைகள் உருவாக்கப்படுவதை பொறுத்து விரும்புவோருக்கு வழங்கப்படும். உடனுக்குடன் வீடுகளை கட்டினால் மிகப்பெரிய துணை நகரம் உருவாகும். மதுரை நகருக்குள் அதிகரித்துவிட்ட நிலத்தின் விலை, நெரிசல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு இந்த துணைநகரம் தீர்வாக அமையும்’ என்றார். 
 

13 பாலங்கள் நவீனப்படுத்தப்படும்; 4 இடங்களில் மேம்பாலம் அமைக்க ஆய்வு

Print PDF
தினமணி         12.03.2013

13 பாலங்கள் நவீனப்படுத்தப்படும்; 4 இடங்களில் மேம்பாலம் அமைக்க ஆய்வு


சென்னை மாநகராட்சியால் பராமரிக்கப்படும் 13 மேம்பாலங்கள் நவீனப்படுத்தப்படும் என்று சென்னை மாநகராட்சி பட்ஜெட் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க 13 மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. இந்த மேம்பாலங்களின் உறுதி, தரம் மற்றும் பயன்பாடு மதிப்பை உயர்த்தும் வகையில் அவை அனைத்தும் துருப்பிடிக்காத கைப்பிடிகள் அமைத்து வண்ணம் தீட்டப்படும்.

சேதமடைந்த தடுப்புச் சுவர்கள் புனரமைக்கப்பட்டு சலவைக் கற்கள் ஒட்டப்படும் என்று மாநகராட்சி பட்ஜெட் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

4 இடங்களில் புதிய மேம்பாலம்: சென்னையில் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். சாலை, திருமலைப்பிள்ளை சாலை மற்றும் வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலை சந்திப்பில் ஒரு மேம்பாலமும், மத்திய கைலாசம் சந்திப்பில் பறக்கும் ரயில் பாதைக்கு இணையாக பக்கிங்காம் கால்வாய்க்கு குறுக்கே கஸ்தூரிபாய் ரயில் நிலையத்தில் இருந்து கோட்டூர்புரம் நோக்கி ஒரு மேம்பாலமும், டி.டி.கே. சாலை - செயின்ட் மேரி சாலை, சேமியர்ஸ் சாலை மற்றும் அடையாறு சந்திப்பில் ஒரு மேம்பாலமும் அமைக்க ஆய்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

மேலும் விருகம்பாக்கம் காளியம்மன் கோயில் தெரு மற்றும் என்.எஸ்.கே. சாலை சந்திப்பில் புதிய மேம்பாலம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்யப்பட உள்ளது.

சுரங்கப் பாதைகள்: என்.எஸ்.கே. சாலை மீனாட்சி பொறியியல் கல்லூரி, வடபழனி பஸ் நிலையம், டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை சந்திப்பு அருகில், புரசைவாக்கம் நெடுஞ்சாலை கங்காதீசுவரர் கோயில் அருகில், கொன்னூர் நெடுஞ்சாலை மற்றும் அயனாவரம் மேடவாக்கம் டாங்க் சாலை சந்திப்பு ஆகிய இடங்களில் பாதசாரிகளுக்கான சுரங்கப் பாதைகள் அமைக்க ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இதேபோல பக்கிங்காம் கால்வாயின் குறுக்கே நீலாங்கரை பாண்டியன் சாலை மற்றும் துரைப்பாக்கம் முருகேசன் நகர் ஆகியவற்றை இணைக்கும் வகையில் உயர்மட்ட பாலம் அமைக்கப்படவுள்ளது.

ரயில்வே பாலங்கள்: கொருக்குப்பேட்டை மற்றும் வியாசர்பாடி ரயில் நிலையங்களுக்கு இடையில் எண்ணூர் நெடுஞ்சாலை மற்றும் மணலி சாலையில் ரயில் மேம்பாலமோ சுரங்கப்பாதையோ அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ரயில்வே துறையுடன் இணைந்து திட்ட அறிக்கை தயாரிக்கப்படவுள்ளது.

இதேபோல, மாம்பலம் ரயில் நிலையத்தில் இருந்து தியாகராய நகர் பஸ் நிலையம் வரை உள்ள சாலை மற்றும் பாரிமுனையிலிருந்து  கோட்டை ரயில் நிலையம் வரை உள்ள சாலை ஆகியவற்றில் ஆகாய நடைபாதைகள் அமைக்கவும் ஆய்வு மேற்கொள்ளப்படும்.

இந்த அறிவிப்புகளை மேயர் சைதை துரைசாமி அறிவித்தார்.
 

விரிவாக்கப்பட்ட மண்டலங்களில் புதிய மருத்துவமனைகள்

Print PDF
தினமணி         12.03.2013

விரிவாக்கப்பட்ட மண்டலங்களில் புதிய மருத்துவமனைகள்


மாநகராட்சியின் விரிவாக்கப்பட்ட மண்டலங்களில் புதிதாக மருத்துவமனைகள் மற்றும் சுகாதார மையங்கள் அமைக்கப்படும் என்று 2013-14ஆம் ஆண்டு பட்ஜெட் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிப்பு விவரம்:

மண்டலம் 1-ல், பகுதிக்கு ஒன்றாக 3 சித்த மருத்துவமனைகள், மண்டலம் 3-ல் காந்தி பிரதான தெருவில் ஆரம்ப சுகாதார நிலையம், கங்கையம்மன் கோயில் தெருவில் 24 மணிநேர மகப்பேறு மருத்துவமனை ஆகியவை அமைக்கப்படும். மண்டலம் 7 வார்டு 84 மற்றும் மண்டலம் 15-ல் கண்ணகி நகரில் சுகாதார மையமும், சரஸ்வதி நகரில் மருத்துவமனையும், ஈஞ்சம்பாக்கத்தில் ஒருங்கிணைந்த மகப்பேறு மருத்துவமனை மற்றும் விபத்து முதலுதவியுடன் கூடிய மருத்துவமனையும் கட்டப்படும்.

நெடுஞ்செழியன் சாலையில் ஒருங்கிணைந்த மருத்துவமனை வளாகம் கட்ட பணிகள் மேற்கொள்ளப்படும்.

சமூக நலக்கூடம்: இதேபோல, 1, 7, 9, 10, 11, 12, 15 ஆகிய மண்டலங்களிஸ் அனைத்து வசதிகளுடன் கூடிய சமூக நலக்கூடங்கள் கட்டப்படும் என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


Page 71 of 238