Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Infrastructure

மாநகராட்சி மத்திய மண்டலத்திற்கு ரூ. 2 கோடிக்கு பணிவழங்க ஒப்புதல்

Print PDF

தினமலர்       26.07.2012   

மாநகராட்சி மத்திய மண்டலத்திற்கு ரூ. 2 கோடிக்கு பணிவழங்க ஒப்புதல்

கோவை:கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட பகுதிக்கு ரூ.2 கோடியில் பணிகள் துவக்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. கோவை மாநகராட்சியின் மத்திய மண்டல கூட்டம், மண்டலத் தலைவர் ஆதி நாராயணன் தலைமையில் நடந்தது.

ஆம்னி பஸ் ஸ்டாண்டு கழிப்பறை பராமரிப்பு, பாதாள சாக்கடை குழாய் பதிப்பு, சிமென்ட் தளம் அமைத்தல், தார் தளம் அமைத்தல்,பொதுக் கழிப்பிட மராமத்து, மழைநீர் வடிகால் தூர்வாருதல், குப்பைத் தொட்டி மராமத்து உட்பட பல்வேறு பணிகளை நிறைவேற்ற மொத்தம் 2 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு இக்கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.

மேலும், ஐந்து லட்சம் ரூபாய் செலவில் ரோட்டிற்கு பேட்ச் பணி நடக்கும் தீர்மானம் வந்த போது, தி.மு.க., கவுன்சிலர் மீனா மற்றும் தே.மு.தி.க., கவுன்சிலர் சாவித்திரி பேசுகையில், ""எந்த வார்டில், எந்த பகுதியில் என குறிப்பிடாமல், பொதுவாக தீர்மானத்தை நிறைவேற்ற அனுமதிக்க முடியாது,'' என்றனர். அரங்கம் என்னாச்சு?: கடந்த ஆட்சியில் தெற்கு மண்டல அலுவலகத்துக்கென கட்டப்பட்ட புதிய அலுவலகம்தான், தற்போது மத்திய மண்டல அலுவலகமாக செயல்பட்டு வருகிறது.

கோடிக்கணக்கான ரூபாய் செலவில் கட்டப்பட்ட இக்கட்டடத்தில், கூட்ட அரங்கின் பணிகளை முடிக்க, எவரும் கவனம் செலுத்தவில்லை. இதனால் கூட்ட அரங்கு பூட்டியே கிடக்கிறது. வேறு வழியில்லாமல் மண்டலத் தலைவரின் அறையில் நேற்றைய கூட்டம் நடந்தது.

மண்டல அலுவலகத்தில் கேட்டதற்கு, "கூட்ட அரங்கில் மின்சார இணைப்பு பணி இன்னும் பாக்கியுள்ளது. பணி முடிந்தபின் கூட்ட அரங்கில் மண்டல கூட்டம் நடத்தப்படும்' என்றனர். மத்திய மண்டல அலுவலகத்துக்கு 3 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் செலவில் மின் இணைப்பு பெறுவதற்கான தீர்மானம், நேற்றைய கூட்டத்தில்தான் நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. துணைமேயர் லீலாவதி, வரிவிதிப்புக் கமிட்டித் தலைவர் பிரபாகரன், கணக்குக் குழுத் தலைவர் கணேசன், எதிர்க்கட்சித் தலைவர் நந்தகுமார், கவுன்சிலர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

 

புதுகையில் ரூ.35 கோடி பணிக்கு டெண்டர்

Print PDF

தினமலர்       26.07.2012   

புதுகையில் ரூ.35 கோடி பணிக்கு டெண்டர்

புதுக்கோட்டை: சிறப்புத் திட்டத்தின் கீழ் நடைபெறவுள்ள ரூ.35 கோடி செலவிலான பணிகளுக்கு டெண்டர் நடந்ததால் புதுக்கோட்டை நகராட்சி அலுவலகம் நேற்று திக்குமுக்காடியது.

புதுக்கோட்டை நகராட்சியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நகர்ப்பகுதி மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவம், உள்கட்டமைப்பு வசதிகளுக்காகவும் சிறப்புத் திட்டத்தின் கீழ் தமிழக முதல்வர் ஜெயலலிதா ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு வழங்கியுள்ளார். புதுக்கோட்டை தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதால் பணிகள் துவங்குவதில் சற்று காலதாமதமானது.இந்நிலையில் ரூ.35 கோடி மதிப்பிலான பணிகளுக்கு நேற்று டெண்டர் நடந்தது. தார் சாலைகளுக்கு ரூ.16 கோடி, சிமின்ட் சாலைகளுக்கு ரூ.9 கோடி என சாலைப் பணிகளுக்கு மட்டும் ரூ.25 கோடி செலவிடப்படுகிறது.நகரின் முக்கிய வீதிகளில் புதிதாக வடிகால்கள் அமைத்தல், சிதிலமடைந்துள்ள வடிகால்களை சீரமைத்தல், நவீன கழிப்பறை அமைத்தல், தெரு விளக்கு அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்கு ரூ.10 கோடி செலவிடப்படுகிறது. இதற்கான டெண்டர் 25ம் தேதி நடைபெறும் என நகராட்சி நிர்வாகம் அறிவித்தது.சிறப்புத் திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகள் என்பதால் இவற்றை டெண்டர் எடுப்பதில் நகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறை காண்ட்ராக்டர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவியது.

இதை சமாளிக்கவும், கமிஷன் தொகை நிர்ணயிக்கவும் காண்ட்ராக்டர்களுடன் பேச்சுவார்த்தை நடந்தது. அனைத்து பணிகளுக்கும் சரிசமமாக 12 சதவீத கமிஷன் நிர்ணயிக்கப்பட்டதால் கடந்த ஒருவாரமாக தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.இதையடுத்து நேற்றுமுன்தினம்(24ம் தேதி) இரவு புதுக்கோட்டை எஸ்.பி., அலுவலகம் எதிரில் உள்ள நெடுஞ்சாலைத்துறை தங்கும் விடுதியில் நடந்த இறுதிகட்ட பேச்சுவார்த்தையில் கமிஷன் குறித்த நிபந்தனை சற்று தளர்த்தப்பட்டது.

தார் சாலை பணிகளுக்கு 12, சிமின்ட் சாலை பணிகளுக்கு 10, புதிய கட்டிடப் பணிகளுக்கு 5, வடிகால் மற்றும் பராமரிப்பு பணிகளுக்கு 10 சதவீதம் என கமிஷன் தொகை நிர்ணயிக்கப்பட்டது.

பணிகளை டெண்டர் எடுக்க விரும்பும் காண்ட்ராக்டர்கள் கமிஷன் தொகையை முன்கூட்டியே வழங்க வேண்டும் எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டது. இதை காண்ட்ராக்டர்கள் ஏற்றுக்கொண்டதால் உடன்பாடு ஏற்பட்டது.இதையடுத்து திட்டமிட்டபடி நகராட்சி அலுவலகத்தில் ரூ.35 கோடி மதிப்பீட்டிலான பணிகளுக்கு நேற்று டெண்டர் நடந்தது. இதற்காக நகராட்சி அலுவலக ஆணையர் அறையின் அருகில் காலை 10 முதல் மாலை 3 மணி வரை டெண்டர் பெட்டி தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது.இதற்கிடையே எதிர்பார்த்த வேலை கிடைக்காததால் ஆத்திரம் அடைந்துள்ள காண்ட்ராக்டர்கள் நிர்ணயிக்கப்பட்ட மதிப்பீட்டை விட குறைத்து(லெஸ்) டெண்டர் கோரப் போவதாக வதந்தி பரவியது.இவ்வாறு டெண்டர் கோரினால் நிர்ணயிக்கப்பட்ட கமிஷன் கிடைக்காது என்பதை உணர்ந்த அ.தி.மு.க., கவுன்சிலர்கள் போட்டியை முறியடிப்பதற்காக ஆதரவாளர்களுடன் நகராட்சி அலுவலகத்தில் குவிந்தனர்.

டெண்டர் எடுப்பதில் மோதல்கள் ஏற்பட்டதால் அதை சமாளிப்பதற்காக போலீஸாரும் குவிக்கப்பட்டனர். டெண்டர் நடப்பதை வேடிக்கை பார்க்க பார்வையாளர்களும் குவிந்ததால் நகராட்சி அலுவலக வளாகம் நேற்று காலை முதல் மாலை வரை திக்குமுக்காடியது.

 

விழுப்புரம் நகராட்சிக்கு ரூ.1 கோடி ஒதுக்கீடு : வடிகால் வாய்க்கால் பணிகள் தீவிரம்

Print PDF

தினமலர்                                          25.07.2012

விழுப்புரம் நகராட்சிக்கு ரூ.1 கோடி ஒதுக்கீடு : வடிகால் வாய்க்கால் பணிகள் தீவிரம்

விழுப்புரம் : விழுப்புரம் நகராட்சி பகுதிகளில் மழைநீர் தேங்குவதை தவிர்க்க 1 கோடி ரூபாய் மதிப்பில் வடிகால் வாய்க்கால் அமைக் கும் திட்டப் பணி துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

விழுப்புரம் நகராட்சியில் உள்ள பல்வேறு பகுதிகளில் மழைக்காலங்களில் தண்ணீர் வெளியேற வழியில்லாமல் குளம்போல் தேங்கி நிற்கிறது. குறிப்பாக புதிய பஸ் நிலையம் கலைஞர் நகர், அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் குடியிருப்பு பகுதி மற்றும் என்.எஸ்.கே., நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழைக்காலங்களில் தேங்கி நிற்கும் தண்ணீரால் பொதுமக்கள் மிகுந்த அவதிப்பட்டு வருகின்றனர்.

இதனையடுத்து விழுப்புரம் நகராட்சி பகுதிகளில் மழை நீர் தேங்கி நிற்பதை தவிர்க்கும் வகையில் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணி மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பணியை மேற்கொள்வதற்கு ஒருங்கிணைந்த நகர்புற வளர்ச்சி திட்டத்தின் கீழ் விழுப்புரம் நகராட்சிக்கு ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த நிதி, விழுப்புரம் நகராட்சியில் உள்ள அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் குடியிருப்பு பகுதிக்கு 7 லட்சத்து 10 ஆயிரமும், எருமனந்தாங்கலுக்கு 4 லட்சத்து 50 ஆயிரமும், காகுப்பத்திற்கு 8 லட்சத்து 50 ஆயிரமும், பானாம்பட்டு திருநகருக்கு 6 லட்சமும், பானாம்பட்டு காலனிக்கு 5 லட்சத்து 90 ஆயிரமும், சாலாமேடு சிதம்பரநாதர் தெருவிற்கு 6 லட்சமும், சாலாமேடு என்.எஸ்.கே., நகருக்கு 9 லட்சமும், புதிய பஸ் நிலையம் கலைஞர் நகர் முதல் சாலாமேடு ஏரி வரையில் 39 லட்சத்து 70 ஆயிரமும் பிரித்து ஒதுக்கீடு செய்துள்ளனர்.

இதேபோல் வழுதரெட்டி கணேஷ் நகருக்கு 5 லட்சமும், வழுதரெட்டி காமராஜர் நகருக்கு 5 லட்சத்து 60 ஆயிரமும், பூந்தமல்லி தெரு மற்றும் ரஹிம் லே அவுட் பகுதிக்கு 2 லட்சத்து 70 ஆயிரம் என நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இந்த பகுதிகளில் உள்ள சாலைகளின் ஓரத்தில் இரண்டு அடி ஆழத்தில் பள்ளம் தோண்டி, அதன் இருபுறமும் சிமென்ட் கான்கிரீட் மூலம் வடிநீர் வாய்க்கால் அமைப்படுகிறது. இந்த வடிநீர் வாய்க்காலில் மழை தண்ணீர் மட்டும் செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தற்போது நகராட்சி பகுதிகளில் வடிநீர் வாய்க்கால் அமைக்கும் இடங்களிலிருந்து அனைத்து பகுதிகளில் தேங்கும் நீரை வாய்க்கால் மூலமாக மருதூர் ஏரிக்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.

விழுப்புரம் நகராட்சி பகுதிகளில் மழை நீர் தேங்கி குளம்போல் நிற்பது தவிர்க்கப்படும் வகையில் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது மழைக்காலம் துவங்கியுள்ள நிலையில் வடிகால் வாய்க்கால் பணியை விரைந்து முடிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

 


Page 87 of 238