Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Infrastructure

செங்கல்பட்டு நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் வருமா?

Print PDF

தினகரன்                   15.11.2010

செங்கல்பட்டு நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் வருமா?

செங்கல்பட்டு, நவ. 15: செங்கல்பட்டு நகராட்சியில் 33வது வார்டுகள் உள்ளன. இப்பகுதி வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், திறந்தவெளி கால்வாய் மூலம் அருகில் உள்ள 600 ஏக்கர் பரப்பளவு கொண்ட கொளவாய் ஏரியில் கலக்கப்படுகிறது. இதனால், கொளவாய் ஏரி நீர் மாசடைந்து துர்நாற்றம் வீசுகிறது.

எனவே, செங்கல்பட்டு நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்ற வேண்டும் என்று பொதுமக்கள் நீண்ட நாளாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதன் பலனாக, 4 ஆண்டுக்கு முன்பு ரூ27 கோடியில் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்ற அரசு நிதி ஒதுக்கியது. நகராட்சி சார்பில் முதற்கட்டமாக குடிநீர் வடிகால் வாரியத்துக்கு ரூ16 லட்சம் வழங்கப்பட்டது. திட்டமதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டு, அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

பின்னர், நகரமன்றம் சரிவர செயல்படவில்லை. ஒரு வருடங்களுக்கு மேலாக நகரமன்ற கூட்டமே நடக்கவில்லை. எவ்வித தீர் மானமும் நிறைவேற்றப்படுவதில்லை.

இதனால், பணிகள் தொடங்காததால், குடிநீர் வடிகால் வாரியம் ரூ16 லட்சத்தை செங்கல்பட்டு நகராட்சிக்கே திருப்பி கொடுத்தது. மேலும், பாதாள சாக்கடை திட்டத்துக்காக, செங்கல்பட்டு நகராட்சிக்கு ஒதுக்கிய நிதியை அரசு வேறு நகராட்சிக்கு மாற்றியது. இதன் காரணமாக, அரசு நிதி ஒதுக்கியும் பாதாள சாக்கடை திட்டம் செங்கல்பட்டு நகராட்சிக்கு வராமல் போனது.

இதற்கிடையே, செங்கல்பட்டு அருகே பில்லேரிமேடு பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க 5 ஏக்கர் நிலத்தை நகராட்சி நிர்வாகம் வாங்கியது. இங்கும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்காததால் அந்த திட்டமும் வீணானது. திறந்தவெளி கழிவுநீர் கால்வாயால் துர்நாற்றம் வீசுகிறது. பன்றி, கொசுத் தொல்லை அதிகரித்துள்ளது. தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

மேலும், நகராட்சியில் கடுமையான குடிநீர் பிரச்னையும் நிலவுகிறது. 5 நாளுக்கு ஒருமுறை தான் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. கொளவாய் ஏரி நீரை குடிநீராக பயன்படுத்தலாம். ஆனால் அதில் கழிவுநீர் கலப்பதால் அந்த வழியும் இல்லாமல் உள்ளது. இதற்கு ஒரே தீர்வு நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் அமைப்பது தான். இதன் மூலம் கொளவாய் ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க முடியும். குடிநீர் பிரச்னையையும் தீர்க்க முடியும். எனவே, செங்கல்பட்டு நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டத்தை கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

துணைமுதல்வர் அடிக்கல் நாட்டினார் ஈரோட்டில் ரூ15 கோடியில் மஞ்சள் வணிக வளாகம்

Print PDF

தினகரன்                   15.11.2010

துணைமுதல்வர் அடிக்கல் நாட்டினார் ஈரோட்டில் ரூ15 கோடியில் மஞ்சள் வணிக வளாகம்

ஈரோடு, நவ. 15: ஈரோட்டில் ரூ15 கோடியில் மஞ்சள் வணிக வளாகம் கட்டப்படுகிறது. அதற்கு துணை முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

ஈரோடு மாவட்ட மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு சுழல்நிதி வழங்கும் விழா, புதிய கட்டிடங்கள் திறப்பு விழா, வளர்ச்சி திட்ட பணிகள் அடிக்கல் நாட்டு விழா, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திண்டல் வேளாளர் கல்லூரியில் நேற்று நடைபெற்றது. கலெக்டர் சவுண்டையா தலைமை தாங்கினார்.

விழாவில் கலந்து கொண்ட தமிழக துணை முதல்வர் மு..ஸ்டாலின், பெருந்துறை அடுத்துள்ள கருமாண்டிசெல்லிபாளையத்தில் ரூ.15 கோடி செலவில் கட்டப்பட உள்ள மஞ்சள் வணிக வளாகம், பள்ளி கட்டிடங்கள், மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் புதிய கட்டிடங்கள் என ரூ.33 கோடியே 96 லட்சம் மதிப்பிலான 66 பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், ஊராக வளர்ச்சிதுறை, சுகாதாரத்துறை, குடிநீர்வசதி, இந்து அறநிலையத்துறை உள்பட ரூ.21 கோடியே 46 லட்சம் மதிப்பிலான கட்டிடங்களை திறந்து வைத்தும், தாட்கோ, சமூகபாதுகாப்பு திட்டம், தோட்டக்கலைத்துறை, மாற்றுத் திறனாளிகள் என ரூ.11 கோடியே 96 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கியும் 730 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.4.38 கோடி மதிப்பிலான மானியத்துடன் கூடிய சுழல்நிதி கடன், 70 மகளிர்களுக்கு ரூ.3.56 கோடி மதிப்பிலான பொருளாதார கடன் மற்றும் 200 மகளிர்களுக்கு ரூ.3 கோடி மதிப்பிலான நேரடி கடன் என ஆயிரம் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.10 கோடியே 74 லட்சம் மதிப்பிலான நிதி என மொத்தம் விழாவில் ரூ.82.40 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்கள்,நலத்திட்டங்களை துவக்கி வைத்து விழா சிறப்புரையாற்றினார்.

விழாவில் சட்டமன்ற உறுப்பினர்கள் என்கே.கே.பி.ராஜா, ஜீவாசுப்பிரமணியம், குருசாமி, பழனிச்சாமி, விடியல்சேகர், மேயர் குமார்முருகேஷ், பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் சாமிநாதன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட அலுவலர் சீனிவாசன் நன்றி கூறினார்.

ஈரோடு வேளாளர் மகளிர் கல்லூரியில் மஞ்சள் வளாகம் அடிக்கல் நாட்டி பல்வேறு திட்டப்பணிகளை துணை முதல்வர் மு..ஸ்டாலின் தொடங்கிவைத்தார். உடன் கலெக்டர் சவுண்டையா, மாவட்ட திமுக செயலாளர் என்கேகே.பி.ராஜா எம்.எல்.., எம்.எல்.ஏக்கள் ஆர்.எம்.பழனிச்சாமி, விடியல் சேகர், யூனியன் சேர்மன் கோகிலவாணிமணிராசு, மாவட்ட ஊராட்சி தலைவர் சரவணன், விற்பனைக்குழு வாரிய தலைவர் கணேசன்.

 

3 அணைகளை இணைத்து 42 கிலோமீட்டருக்கு சுரங்க கால்வாய் அமைக்க முடிவு

Print PDF

தினகரன்       11.11.2010

3 அணைகளை இணைத்து 42 கிலோமீட்டருக்கு சுரங்க கால்வாய் அமைக்க முடிவு

மும்பை,நவ.11: மும்பைக்கு கூடுதல் தண்ணீர் வழங்க குஜராத்தில் உள்ள ஒரு அணை உட்பட மூன்று அணைகளை இணைக்கும் வகையில் 42 கிலோமீட்டர் அளவுக்கு சுரங்க கால்வாய் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மும்பைக்கு தற்போது விநியோகம் செய்யப்படும் தண்ணீர் போதுமானதாக இல்லை. இதனால் தண்ணீரின் அளவை அதிகரிக்க மும்பைபெருநகர வளர்ச்சி ஆணையமும் மும்பை மாநகராட்சியும் தேவையான நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில் குஜராத்தில் ஓடும் தாமன்கங்கா, பிஞ்ஜார், வாக்(தானே) போன்ற மூன்று ஆற்றிலும் அணைகள் கட்டி அதிலிருந்து மும்பைக்கு தண்ணீர் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக மூன்று அணைகளையும் இணைக்கும் வகையில் 42 கிலோமீட்டர் நீளத்துக்கு சுரங்க கால்வாய் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் மும்பைக்கு கூடுதலாக 577 மில்லியன்லிட்டர் அளவுக்கு தண்ணீர் கிடைக்கும். இத்திட்டத்தை நிறைவேற்ற அடர்ந்த காட்டுப்பகுதியில் சுரங்கப்பாதை அமைக்கவேண்டியிருக்கிறது.

எனவே இதற்கு சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்தின் ஒப்புதலையும் பெறவேண்டியிருக்கிறது. மும்பை பெருநகர வளர்ச்சி ஆணையம் இத்திட்டத்தை செயல்படுத்த இருக்கிறது. அதேசமயம் மும்பை மாநகராட்சி நிர்வாகம் இதற்கு குறிப்பிட்ட அளவு நிதியுதவி செய்யும். இத்திட்டத்தில் பெறப்படும் தண்ணீர் மீராரோடு&பயந்தர், வசாய்& விரார் பகுதியில் விநியோகம் செய்யப்படும்.

 


Page 104 of 238