Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Infrastructure

நவீன எரிவாயு தகன மேடை அமைக்கும் பணி விரைவுபடுத்தப்படுமா?

Print PDF

தினமணி                02.11.2010

நவீன எரிவாயு தகன மேடை அமைக்கும் பணி விரைவுபடுத்தப்படுமா?

விருதுநகர், நவ . 1: விருதுநகரில் பொதுமயானத்தில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் நவீன எரிவாயு தகன மேடை அமைக்கும் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் எனப் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

விருதுநகர் நான்கு வழிச்சாலையை ஒட்டி பொதுமயானம் உள்ளது. இங்கு பிணங்களை எரிப்பதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. இதற்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் ரூ. 50 லட்சம் செலவில் பொதுமயானத்தில் நவீன எரிவாயு தகன மேடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இப்பணி கடந்த நான்கு ஆண்டுகளாக முடிவடையாமல் உள்ளது. மேலும் கட்டப்பட்டுள்ள கட்டடப் பகுதிகளும் பெயர்ந்தும், கண்ணாடிகள் உடைந்தும் காணப்படுகின்றன.

மயானத்தில் சுற்றுச் சுவர் இல்லாததால் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. சுற்றுப்பகுதிகளில் உள்ளவர்களும் இந்த இடத்தை பொதுக்கழிப்பிடமாகப் பயன்படுத்துகின்றனர். இதனால் சுகாதாரக் கேட்டை விளைவிக்கும் இடமாகவும் மாறி வருகிறது.

இது குறித்து நகராட்சித் தலைவர் கார்த்திகா கரிக்கோல்ராஜ் கூறுகையில், தமிழகம் முழுவதும் மயானத்தின் அனைத்து வேலைகளை ஒரே ஒப்பந்ததாரர் செய்து வருகிறார். எரிவாயு தகன மேடை அமைக்கும் பணியை விரைவில் முடிக்குமாறு ஒப்பந்ததாரரை நகராட்சி வலியுறுத்தி உள்ளது என்றார்.

Last Updated on Tuesday, 02 November 2010 11:19
 

சைதாப்பேட்டையில் கட்டப்படுகிறது ரூ4 கோடியில் 100 படுக்கையுடன் மாநகராட்சி நவீன மருத்துவமனை ஜனவரியில் திறப்பு

Print PDF

தினகரன்                  02.11.2010

சைதாப்பேட்டையில் கட்டப்படுகிறது ரூ4 கோடியில் 100 படுக்கையுடன் மாநகராட்சி நவீன மருத்துவமனை ஜனவரியில் திறப்பு

சென்னை, நவ. 2: சைதாப்பேட்டையில் ரூ4 கோடியில் 100 படுக்கை வசதியுடன் கட்டப்பட்டு வரும் மாநகராட்சி மருத்துவமனை ஜனவரி மாதம் திறக்கப்படும் என்று மேயர் கூறினார்.

சென்னை மாநகராட்சி சார்பில் சைதாப்பேட்டை, ஜீனிஸ் சாலையில் கட்டப்பட்டு வரும் நவீன மருத்துவமனை கட்டிட பணியை மேயர் மா.சுப்பிரமணியன் நேற்று நேரில் ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

சென்னையில் 2006ம் ஆண்டு சைதாப்பேட்டை, பெருமாள்பேட்டை ஆகிய 2 மாநகராட்சி மருத்துவமனைகளில் மட்டுமே 24 மணி நேர மகப்பேறு சேவை அளிக்கப்பட்டு வந்தது. தற்போது 10 மண்டலங்களிலும் 24 மணி நேர மகப்பேறு சேவை விரிவுபடுத்தப்பட்டுள்ளது. வரும் டிசம்பர் மாதம் அடையாறு, கோடம்பாக்கம் மண்டலங்களில் புதிதாக மகப்பேறு மருத்துவமனைகள் திறக்கப்படும்.

சைதாப்பேட்டை ஜீனிஸ் சாலையில் மகப்பேறு மருத்துவமனை அருகில், மாநகராட்சி சார்பில் தரைத்தளத்துடன் 3 மாடிகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது.

இது 1,995 சதுடி அடி கொண்டது. புதிய மருத்துவமனையில் ஆலோசனை கூடம், பரிசோதனை கூடம், ஆய்வுக்கூடம், கலந்தாய்வுக்கூடம், மருந்தகம், காத்திருக்கும் அறை, அறுவை சிகிச்சை அரங்கு போன்ற பல்வேறு வசதிகளும் இருக்கும்.

இந்த மருத்துவமனையின் பின்புறம் தரைத்தளத்துடன் 3 மாடி கட்டிடம் 21,587 சதுர அடியில் இணைப்பு கட்டிடம் கட்டப்படுகிறது. இதில் பொதுப்பிரிவு, சிகிச்சை அறை, மருத்துவர்கள் அறை என பல்வேறு நவீன வசதிகள் இருக்கும். மொத்தம் 32,582 சதுர அடியில் ரூ4 கோடி செலவில் இந்த மருத்துவமனை கட்டப்படுகிறது. இந்த பிரமாண்டமான மாநகராட்சி மருத்துவமனை வரும் ஜனவரி மாதம் திறக்கப்படும். இவ்வாறு மேயர் மா.சுப்பிரமணியன் கூறினார். ஆய்வின்போது மண்டல குழு தலைவர் தனசேகரன், கவுன்சிலர் மகேஷ்குமார் உடன் இருந்தனர்.

சைதாப்பேட்டை ஜீனிஸ் சாலையில் மாநகராட்சி சார்பில் உருவாகும் நவீன மருத்துவமனை கட்டிடப் பணிகளை மேயர் மா.சுப்பிரமணியன் நேற்று ஆய்வு செய்தார். அருகில், மண்டல குழு தலைவர் க.தனசேகரன், கவுன்சிலர் மகேஷ்குமார்.

 

நாகர்கோவிலில் பாதாள சாக்கடை திட்டம்: 76.04 கோடி ஒதுக்கீடு

Print PDF

தினமணி             01.11.2010

நாகர்கோவிலில் பாதாள சாக்கடை திட்டம்: 76.04 கோடி ஒதுக்கீடு

நாகர்கோவில், அக்.31:நாகர்கோவில் நகராட்சியில் பாதாள சாக்கடைத் திட்டத்தை செயல்படுத்த 76.04 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நாகர்கோவிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நகர்மன்றக் கூட்டத்தில் இது தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நகராட்சிப் பகுதியில் செயல்படுத்தப்படவுள்ள இத்திட்டத்துக்கு 76.04 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்ய கடந்த 16.9.2010-ல் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 27.9.2010-ம் தேதி நடைபெற்ற மாநில அளவிலான 7-வது ஒப்பளிப்பு கமிட்டிக் கூட்டத்தில் இத்திட்டத்துக்கான நிதி விடுவிப்பு செய்ய தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது.

அதில் மத்திய அரசு 80 சதவிகிதம் நிதியாக 52.45 கோடியும், மாநில அரசு 10 சதவிகிதம் நிதியாக 6.55 கோடியும், நகராட்சி 10 சதவிகிதம் நிதியாக 6.55 கோடியும் என்று மொத்தம் 65.56 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மீதமுள்ள தொகையை நகராட்சியே செலவிட வேண்டும். இது தொடர்பாக நகர்மன்றக் கூட்டத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் உறுப்பினர்களின் விவாதங்களுக்கு இடையே நிறைவேற்றப்பட்டது.

இது தொடர்பாக நகர்மன்றத் தலைவர் அசோகன் சாலமன் கூறியதாவது:

பாதாள சாக்கடைத் திட்டத்துக்கு மத்திய அரசு 80 சதவிகிதமும், மாநில அரசு 10 சதவிகிதமும் மானியமாக வழங்குகின்றன. நகரில் 21 வார்டுகளில் முழுமையாகவும், 19 வார்டுகளில் பகுதியாகவும் இத்திட்டப் பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் வலம்புரிவிளை நகராட்சி உரக்கிடங்கு அமைந்துள்ள இடத்தில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க 5 ஏக்கர் நிலம் ஒதுக்கித்தர வேண்டியுள்ளது என்றார் அசோகன் சாலமன்.

 


Page 109 of 238