Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Infrastructure

ரூ.20 லட்சம் மதிப்பில் பள்ளிக்கரணையில் புதிய கட்டடம்

Print PDF

தினமலர் 26.08.2010

ரூ.20 லட்சம் மதிப்பில் பள்ளிக்கரணையில் புதிய கட்டடம்

பள்ளிக்கரணை : பள்ளிக்கரணை பேரூராட்சிக்கு 20 லட்ச ரூபாய் செலவில் புதிய கட்டடம் கட்டப்படுகிறது. ஆறு மாதத்தில் கட்டுமானப் பணிகளை முடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

தாம்பரம் - வேளச்சேரி மெயின்ரோட்டில் பள்ளிக்கரணை பேரூராட்சி அலுவலகம் அமைந்துள்ளது. அந்த கட்டடம் வசதியின்றி பழுதடைந்து காணப்பட்டது. எனவே, பேரூராட்சிக்கு புதிய அலுவலக கட்டடம் கட்ட மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி மாவட்ட கலெக்டர் அனுமதி பெறப்பட்டது. இதையடுத்து, பேரூராட்சி அலுவலகம் தற்காலிகமாக சமுதாய நலக்கூடத்திற்கு மாற்றப்பட்டது. புதிய கட்டடம் 2,500 சதுர அடியில் 20 லட்ச ரூபாய் மதிப்பில் கட்டப்படவுள்ளது. கீழ் தளத்தில் அலுவலகமும், முதல் தளத்தில் மன்ற கூட்ட அறையும் கட்டப்படுகிறது.

அதற்கான டெண்டர் கோரப்பட்டிருந்தது. இன்று டெண்டர் பிரிக்கப்படுகிறது. டெண்டர் விட்ட ஆறு மாத காலத்திற்குள் பேரூராட்சி அலுவலகம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இத்தகவலை பேரூராட்சி தலைவர் பஞ்சலிங்கம் தெரிவித்தார்.

 

சுவர்களில் பண்பாட்டு சித்திரம் 10 பாலம், சுரங்கபாதைகள் ரூ 8 கோடியில் புதுப்பிப்பு

Print PDF

தினகரன் 25.08.2010

சுவர்களில் பண்பாட்டு சித்திரம் 10 பாலம், சுரங்கபாதைகள் ரூ 8 கோடியில் புதுப்பிப்பு

சென்னை, ஆக.25: சென்னையில் 10 பாலங்களை பலப்படுத்தி அழகுபடுத்தும் பணி ரூ8 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அடையாறு திருவிக பாலம் பலப்படுத்தி அழகுபடுத்தும் பணியை மேயர் மா.சுப்பிரமணியன் நேற்று அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் கூறியதாவது:

மாநகராட்சி சார்பில் ஏற்கனவே கட்டப்பட்டுள்ள பாலங்கள், சுரங்கப்பாதைகள் பலப்படுத்தி சீரமைத்து அழகுபடுத்தும் பணி பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்டு முடிக்கப்பட்டுள்ளது. தங்கசாலையில் உள்ள பார்த்தசாரதி மேம்பாலம் ரூ50 லட்சம் செலவில் தடுப்புச்சுவர்கள், கான்கிரீட் சிமென்ட் சுவர்கள் அமைத்து புதுப்பிக்கப்பட்டுள்ளது. அண்ணாசாலையில் மகளிர் அரசுக் கலைக்கல்லூரி அருகில் உள்ள மேம்பாலம் சுமார்

ரூ10 லட்சம் செலவில் கான்கிரீட் தடுப்புச் சுவர்கள் அமைக்கப்பட்டு, நடைபாதையில் அழகிய டைல்ஸ்கள் ஒட்டப்பட்டுள்ளன. நுங்கம்பாக்கம் சுரங்கப்பாதை ரூ33 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் தண்டையார் பேட்டை வைத்தியநாதன் பாலம், ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை, சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரில் உள்ள ஸ்டான்லி மேம்பாலம், கோடம்பாக்கம் மேம்பாலம், திருவான்மியூர் எல்.பி.சாலை பாலம், எழும்பூர் கெங்குரெட்டி சுரங்கப்பாதை, சைதாப்பேட்டை அரங்கநாதன் சுரங்கப்பாதை, தியாகராயநகர் மேட்லி சாலை சுரங்கப்பாதை, தீரன் சிவலிங்கம் சுரங்கப்பாதை, அடையாறு திருவிக பாலம் ஆகிய 10 பாலங்கள், சுரங்கப்பாதைகள்

ரூ8 கோடியே 33 லட்சத்து 57 ஆயிரம் செலவில் பலப்படுத்தி சீரமைத்து, அழகிய டைல்ஸ் ஒட்டப்படுகிறது. இந்த பாலங்கள், சுரங்கப்பாதைகளின் சுவர்களில் தமிழர் பண்பாட்டை விளக்கும் சித்திரங்கள் வரையப்படுகிறது. இவ்வாறு மேயர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது மண்டலக்குழுத் தலைவர் ஜெயராமன், மாநகராட்சி மேற்பார்வை பொறியாளர் ராமமூர்த்தி மற்றும் அதிகாரிகள், கவுன்சிலர்கள் உடன் இருந்தனர்.

 

பாதாள சாக்கடை திட்டம்: பழுதான சாலைகளை சீரமைக்க ரூ. 11 கோடி

Print PDF

தினமணி 28.04.2010

பாதாள சாக்கடை திட்டம்: பழுதான சாலைகளை சீரமைக்க ரூ. 11 கோடி

நாமக்கல், ஆக. 24: நாமக்கல் நகரில் பாதாள சாக்கடை திட்டத்தால் பழுதான சாலைகளை சீரமைக்க ரூ. 11.65 கோடி மதிப்பீட்டில் பிரேரணை தயாரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

நாமக்கல் நகராட்சிப் பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டத்துக்காக குழிகள் தோண்டப்பட்டதால் பழுதான சாலைகளை செப்பனிட வேண்டும் என பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து கோரிக்கை விடுத்த வண்ணம் உள்ளன. இந்நிலையில், பழுதான சாலைகளில் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் புதிய சாலைகள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

பாதாள சாக்கடை திட்டப் பணிகளில் 85 சதவீதம் மட்டுமே தற்போது முடிவடைந்துள்ளது. இதில், சாக்கடை குழாய்கள் மற்றும் மனித ஆய்வு குழிகள் முடிக்கப்பட்ட தெருக்களில் பழுதடைந்த சாலைகளை மேம்படுத்தி புதிய சாலைகள் அமைக்க சிறப்பு சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ், 39.90 கி.மீ. சாலைகளை புதிதாக அமைக்க ரூ.. 11.65 கோடி மதிப்பில் திட்ட வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது. இதில், 16.84 கி.மீ. தூரத்துக்கு தார் சாலையும், 23.05 கி.மீ. தூரத்துக்கு சிமெண்ட் சாலையும் அமைக்கப்படுகிறது. இதற்கான பிரேரணைகள் தயாரிக்கப்பட்டு நகர்மன்றத்தில் திங்கள்கிழமை ஒப்புதல் பெறப்பட்டது. இதையடுத்து பிரேரணைகள் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அரசிடமிருந்து அனுமதியும், நிதி ஒதுக்கீடும் பெறப்பட்ட பின்னர் உடனடியாக சாலைகள் அமைக்கும் பணி துவங்கப்படும் என நகர்மன்றத் தலைவர் இரா. செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

 


Page 151 of 238